1) முன்னுரை
முன்னுரை
உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் அதன் தெளிவான கடவுள் கொள்கையாலும், அறிவுக்குப் பொருத்தமான சட்டங்களாலும் மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் தலையிட்டு தக்க தீர்வைத் தருவதாலும் தனித்து விளங்குகிறது.
எங்கள் மதத்தைப் பற்றி எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அறைகூவல் விட்டு அந்தக் கேள்விகளை எதிர்கொண்டு தக்க பதில் சொல்லும் அறிஞர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் மட்டுமே உள்ளனர். இது அறிஞர்களின் திறமையால் அல்ல. இஸ்லாம் அறிவுப்பூர்வமாக அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.
இஸ்லாத்துக்கு எதிராக எழுப்பப்படும் விமர்சனங்கள் அனைத்துக்கும் தக்க பதில் கூறினாலும் விதியைக் குறித்து எழுப்பும் கேள்விகளுக்குத் தான் முஸ்லிம் சமுதாயம் தக்க பதில் அளிக்க தயக்கம் காட்டுகின்றது.
குர்ஆனில் முரண்பாடு உள்ளது என்று விமர்சனம் செய்யும் அனைவருமே விதி உண்டு எனக் கூறும் வசனங்களையும் விதி இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்களையும் எடுத்துக் காட்டி இறைவேதம் முரண்படலாமா என்று கேட்கும் போதும் முஸ்லிம் சமுதாயம் திகைத்து நிற்கும் நிலையை நாம் பார்க்கிறோம்.
இந்தக் கேள்விகளைப் மதவாதிகள் எழுப்பினால் அதற்கு நாம் ஒருவழியாக பதில் சொல்ல இயலும்.
இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது போல் இந்து மதத்திலும் தலைவிதி குறித்து சொல்லப்பட்டுள்ளது. கிறித்தவ அறிஞர்கள் விதி இல்லை என்று சாதித்தாலும் பைபிளில் விதியைப் பற்றி பேசும் ஏராளமான வசனங்கள் உள்ளன. இவற்றை எடுத்துக் காட்டி உங்கள் மதத்திலும் விதியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் போது இஸ்லாத்தை விமர்சிக்க விதியை நீங்கள் எடுத்து வைக்கக் கூடாது எனக்கூறி வாயடைக்கச் செய்ய முடியும்.
ஆனால் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொன்னாலும் விதியைக் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் ஏற்கும் வகையில் பதில் சொல்ல முடியாத நிலை தான் இருந்தது.
விதியைக் குறித்த நம்பிக்கை குழப்பமானதாகத் தோன்றினாலும் இன்று பகுத்தறிவாளர்களும் விதியை நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆம் அறிவியல் ஆய்வுகள் மனிதனின் செயலுக்கு அவன் பொறுப்பாளி அல்ல. அவனை மீறி அவனுக்குள் அமைக்கப்பட்டுள்ள புரோக்ராம்கள் தான் மனிதனை இயக்குகின்றன என்று இன்று கண்டறிந்து விட்டனர்.
இது குறித்து குழப்பமான கருத்தைக் கூறி இதன் தாத்பரியத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்ல என்று ஒப்புக் கொண்டு முரண்பட்ட இரண்டு கருத்தும் சரிதான் என அறிவியலாளர்களும் கூறுகின்றனர்.
அதாவது விதியைப் பற்றி பேசும் போது மட்டும் முரண்பாடாக இருக்கிறது என்று வாதம் செய்யாமல் அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு அறிவியலும் வந்து விட்டதால் இது தான் விதியைப் பற்றி எழுதுவதற்கான தக்க நேரம் என்று கருதி இந்த நூலை எழுதியுள்ளேன். அறிவியலாளர்களின் கருத்தையும் இதில் விளக்கியுள்ளேன்.
ஒரு காலத்தில் சில முஸ்லிம்கள் நாத்திகர்களான ஆனதற்கு விதியைக் குறித்து அவர்களுக்கு இருந்த குழப்பமே காரணமாக இருந்தது. இறைவன் அருளால் இனி அது போன்ற நிலை ஏற்பட வழி இல்லை. ஏனெனில் இதில் மட்டும் முரண்பாட்டை அங்கீகரிப்பது தான் பகுத்தறிவு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
இது போல் குழப்பத்தில் இருப்பவர்களின் குழப்பத்தை இந்த நூல் நீக்கும் என்று நம்புகிறேன். அதற்கு இந்த நூல் உதவ வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.
பீ.ஜைனுல் ஆபிதீன்