10) விவாதம் மற்றும் மாற்றுமத தாஃவா

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

விவாதம் மற்றும் மாற்றுமத தாஃவா

v புதியவர்கள், இஸ்லாம் இனிய மார்க்கம் நடத்த முடியுமா?

பிறமத மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாததாக இருந்தது. அல்லாஹ்வின் அருளால், சில அறிஞர்களின் உழைப்பின் வாயிலாக, இன்றைக்கு இஸ்லாம் சம்பந்தமான எந்த கேள்விக்கும் ரெடிமேட் பதிலை வைத்திருக்கிறோம். எனவே இந்த பகுதியில், பதில் சொல்லும் ஒருசில அடிப்படையைகளை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். எந்த கேள்விக்கு பதில் சொல்லும்போதும், முதலில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஒரிரு வரியில் சொல்லிவிட்டு, பிறகு,

  • தர்க்க ரீதியாக பதில் சொல்லவேண்டும்.
  • பிறகு, அறிவியல் சான்றுகளை முன்வைக்க வேண்டும்.
  • பிறகு, இஸ்லாமிய தீர்வு எப்படி சரி என்று விளக்கவேண்டும்.

 

தர்க்கம் என்றால், உதாரணமாக, ”பாங்கு ஏன் அரபி மொழியில் சொல்கிறீர்கள்?” என்று கேட்கும் போது, ”ஒருமைப்பாட்டிற்காக தேசியகீதத்தை வங்காள மொழியில் ஏற்கவில்லையா?” என்று நியாயமான வாதம் மற்றும் எதிர்கேள்வியின் மூலம் பதிலளிப்பது. இப்ராஹீம் நபி வைத்த வாதங்களால், கொடுங்கோல் மன்னன் வாயடைத்துப்போனான் என்று திருமறை சொல்கிறது.(2.258). எனவே, பெரும்பாலான மக்கள் தர்க்க ரீதியான பதிலிலேயே திருப்தியடைந்து விடுவார்கள்.

அதில் திருப்தியடையாத மக்கள் அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பித்தவுடன் ஒத்துக் கொள்வார்கள். பிறகு, இஸ்லாமிய பார்வையை சொல்லும்போது, இஸ்லாம் சொல்லும் அந்த கருத்தை ஏற்கும் மனநிலைக்கு இயல்பாகவே வந்துவிடுவார்கள். இது தான் பிறமதத்தவரின் கேள்விக்கு பதில் சொல்லும் அடிப்படை. சிலநேரம் தர்க்கம், ஆதாரம், இஸ்லாமிய பார்வை இவை முன்பின் அமைலாம். அது கேள்வியை பொறுத்தது.

எனவே, குறைந்தது ஜந்து வருட பயான் அனுபவம் உள்ள எவரும், வாதத்திறமை இருந்தால், மாற்றுமத கேள்விபதில் நிகழ்ச்சி நடத்தலாம். புதிதுபுதிதாக கேள்விகள் வருமே என்றெல்லாம் பயப்படவேண்டியதில்லை. மாற்றுமதத்தினர் கேள்விகளில் 80 சதவீதம் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்ட கேள்விகள் தான். 20 சதவீதம் புதிய கேள்விகளாக இருந்தாலும், அவையும் எளிதில் பதில் சொல்லக்கூடியவைதான். உதாரணமாக, ஏன் ஜந்து முறை தொழுகிறீர்கள் என்று கேட்பார்கள். இதற்கு பதிலளிப்பது சிரமமா? புகை பிடித்தால் பாவமா? என்று கேட்பார்கள், இதற்கு பதில் சொல்வதற்கு இரண்டு வருடம் பிராக்டீஸ் எடுக்கவேண்டுமா, என்ன? எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற திரும்பத்திரும்ப கேட்கப்படும் கேள்விகளுக்குறிய பதில்களை முதலில் மனப்பாடம் செய்துகொண்டு, பிறகு சிறுகசிறுக திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தேவைப்படும் இடங்களில் குர்ஆன் வசனத்தை அரபியில் ஓதி, அதன் பொருளை சொல்லுங்கள். மக்களின் புரியும்திறனுக்கேற்ப பேசவேண்டுமே! பிறமத மக்களிடம் அரபியில் ஓதினால் புரியுமா? என்று நினைக்காதீர்கள். குர்ஆன் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அதன் பொருள் அவர்களுக்கு புரியாவிட்டாலும், குர்ஆன் வசனங்களுடைய உச்சரிப்பு, கிராத் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே பிறமத மக்களிடத்திலும் குர்ஆன் வசனங்களை பயன்படுத்தலாம். கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

இதுதவிர, மாற்றுமத சகோதரர்கள் கேள்வி கேட்ட உடனேயே, ”இது ஒரு நல்ல கேள்வி” என்று சொல்லி அந்த கேள்வியை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். ”பதில் சொல்லமுடியாத கேள்வியை கேட்டுப்புட்டோம்” என்று நினைக்காமல், ”கேள்வியை வரவேற்கிறாரே. அப்ப எதைக்கேட்டாலும் இஸ்லாத்தில் பதில் இருக்கிறது” என்று கேள்வி கேட்டவரும் மற்றவர்களும் மனஅமைதி அடைவதற்கு இந்த வரவேற்பு அவசியமானது. அதுபோல, கேள்விபதில் நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், கேட்கப்பட்ட கேள்வியை நீங்கள் ஒருதடவை மக்களுக்கு புரியும்படி விளக்கிச் சொல்வது நல்லது.

இதுதவிர, இருக்கும் குற்றச்சாட்டுகளை எப்போதுமே கண்ணியமாக ஒத்துக்கொள்ளுங்கள். உங்களின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். உதாரணமாக, ”முஸ்லிம்கள் தான் அதிகமாக வரதட்சனை வாங்குகிறார்களே” என்று கேட்கும் போது, ”அப்படியெல்லாம் இல்ல. நாங்க ரொம்ப பர்ஃபெக்ட்” என்று சொல்லி கண்முன் தெரியும் தவறை மூடிமறைக்கப் பார்க்காதீர்கள். இதனால், மற்ற கேள்விகளுக்கு சொல்லும் சரியான பதிலின் மீதும் நம்பிக்கையிழந்து போவார்கள். தெளிவாக தெரிவதை ஒத்துக்கொள்வது தான் சரியானது. அவர்களிடத்தில், ”இஸ்லாத்தை விளங்காதவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இஸ்லாம் இப்படி சொல்லவில்லை. இன்றைக்கு மாற்றம் ஏற்பட்டுவருகிறது” என்று பதில் சொல்லுங்கள்.

திரும்பத்திரும்ப கேட்கப்படும் என்பது சதவீத கேள்விகள்.

1. புலால் உண்ணுவது சரியா?
2. பலதார மணம் சரியா?
3. பெண்களுக்கு கல்வி,சொத்துரிமை இல்லையே!
4. பர்தாவும், தலாக்கும் கொடுமைதானே
5. கடவுள் கொள்கை சம்பந்தமானவைகள்
6. இயேசுவை கடவுளாக ஏற்காதது ஏன்?
7. முஸ்லிம் மத்தியிலும் பிரிவுகள் இருக்கிறதே!
8. டார்வின் பரிணாம கொள்கை சரியா?
9. உலக முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்கு
10. புரியாத மொழியில் பாங்கு சொல்வதேன்?
11. பிறமதத்தினரை கொல்லவேண்டுமா?
12. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
13. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்?
14. பிறமதத்தவர் மக்காவில் நுழைய தடையேன்?
15. தொப்பி, தாடி எதற்கு?
16. முஹம்மது இறைதூதர் என்பதற்கு என்ன ஆதாரம்?
17. காஃபாவை, திக்கை, கருப்புக்கல்லை வணங்குவது ஏன்?
18. பன்றிக்கறி, வட்டி தடை ஏன்?
19. பிறர் அறுத்ததை உண்ணாதது ஏன்?
20. இறந்தபிறகு, மறுமையா மறுபிறவியா?
21. ஜோதிடம், வாஸ்தை இஸ்லாம் ஏற்கிறதா?
22. மனிதன் எதிலிருந்து களிமண்னா? இந்திரியமா?
23. பாபர் பள்ளி தொடர்பானவை.
24. இறந்தவரை புதைப்பதா, எரிப்பதா சிறந்தது?
25. உருவமில்லா கடவுள் வழிபாட்டில் ஈடுபாடு இருக்குமா?
26. இஸ்லாமியர்களுக்கு ஏன் தனிசிவில் சட்டம்?
27. குரான், பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
28. இயேசு இன்னும் இறக்கவில்லை.
29. இயேசு அல்லாஹ்வின் வார்த்தை என்றால் மகன் தானே!
30. ராமரும், கிருஸ்ணரும் அல்லாவின் தூதர்களா?
31. இஸ்லாமிய சட்டங்கள் கொடூரமானதாக உள்ளது!
32. குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் ஏற்கிறதா?
33. தத்துபிள்ளைகளை இஸ்லாம் ஏற்காதது ஏன்?
34. பூஜை செய்த உணவுகளை புறக்கணிப்பது ஏன்?
35. மனிதன் குறையுடன் பிறப்பது ஏன்?
36. நல்லவர்கள் அவதிப்படுவது ஏன்?
37. நபிகள் நாயகம் பலதிருமணம் செய்தது ஏன்?
38. இந்துக்களை காஃபிர் என்று திட்டுவது ஏன்?
39. ஜிஸ்யா வரி அநீதியில்லையா?
40. பலஆயிரம் செலவழித்து ஹஜ் செய்வதேன்?
41. தீமிதிப்பது மாரியம்மன் அருள்தானே!
42. முதலில் தோன்றிய மதம் எது?
43. குர்ஆனின் அறிவியல் தொடர்பான கேள்விகள்
44. தாய்மாமனை திருமணம் செய்யக்கூடாதா?
45. கலப்புத்திருமணத்தை ஆதரிக்காதது ஏன்?
46. முஸ்லிம்கள் அதிக வரதட்சனை வாங்குவது ஏன்?
47. இது போன்ற இன்னும் சில….

Ì வாதத்திறமை அவசியம் :
          மேற்கண்டது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்திருப்பது ஓரளவு போதுமென்றாலும், அதோடு சேர்த்து பொதுஅறிவும், வாதத்திறமையும், சமயோசித புத்தியும் கண்டிப்பாக தேவை. எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொல்லியிருந்தாலும், ஒரேஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் உளறினால் கூட எதிர்மறை விளைவு தான் ஏற்படும். உங்களை சந்தேகப்பட மாட்டார்கள். இஸ்லாத்தைத்தான் சந்தேகப்படுவார்கள். சிலகேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தகவல்களும், செய்திகளும் தேவைப்படாது. லாஜிக் மட்டுமே தேவைப்படும். எனவே, வாதத்திறமை இல்லாதவர்கள் மாற்றுமத கேள்விபதில் நிகழ்ச்சி நடத்துவது சரியல்ல.

 

v குர்ஆன், ஹதீஸை அதன் எண்களுடன் மனப்பாடமாக சொல்லவேண்டுமா?

சில உலகளாவிய பிரச்சாரகர்கள், தங்களது உரைகளில், கடகடவென குர்ஆன் வசனத்தை, அதன் அத்தியாயம், வசன எண்களுடன் சொல்வது நம்மில் பலருக்கு வியப்பைத் தரும். இந்த வியப்பின் மூலம் மக்களை வென்றெடுக்கமுடிந்தால், அதில் தவறொன்றுமில்லை. குர்ஆன் மட்டுமல்லாமல், பைபிள் புதியஏற்பாடு, பழையஏற்பாடு, ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களிலிருந்தும் வசனங்களையும், சுலோகங்களையும் அதன் எண்களுடன் சொல்வார்கள். இதை நீங்களும்  செய்யமுடியும்.

அவர்கள் யாருமே, குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களையும் எண்களுடன் மனப்பாடம் செய்வதில்லை. ஹாஃபிளாக இருந்தாலும், வசன எண்ணோடு நினைவில் வைப்பது, சுமாராக 300 வசனங்கள் தான். மாற்றுமத சகோதரர்களின் கேள்விகளை பொறுத்தவரையில் பலநூறு நிகழ்ச்சிகளில் கேட்கப்பட்ட பலஆயிரம் கேள்விகள் அனைத்தையும், அதிகபட்சமாக 30 தலைப்புகளின் கீழ் தொகுத்துவிடலாம். இதற்கு பதிலளிப்பதற்கு குர்ஆனில் உள்ள 6236 வசனங்களும் தேவையில்லை. சுமாராக 250 வசனங்கள் போதுமானது. அறிவியல் செய்தியை சொல்லும் வசனங்களோடு சேர்த்து 300 வசனங்களே அதிகபட்சமானது. இவற்றை மட்டும் தான் அதன் வசன எண்களுடன் மனப்பாடம் செய்துகொள்வார்கள். எந்த கேள்வியாக இருந்தாலும் இதைத்தாண்டி வேறு வசனம் பெரும்பாலும் தேவைப்படாது.

அதுபோல, ஹதீஸில் சுமார் 200 ஹதீஸ்களையும், இந்துமத வேதங்களிலிருந்து அதிகபட்சமாக 50 சமஸ்கிருத சுலோகங்களையும், பைபிலிருந்து சர்ச்சைக்குறிய சுமார் 400 வசனங்களையும், வெவ்வேறு பைபிள்களுக்கிடையே முரண்படும் சுமார் 200 வசனங்களையும் அதன் எண்களுடன் மனப்பாடம் செய்துகொள்வார்கள், இதுஅல்லாமல் உலக சம்பவங்களிலும் தேவையானதை மட்டும் மனனம் செய்துகொள்வார்கள். அவற்றை குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். மொத்தமாக 1500 செய்திகள் இருக்கும் அவ்வளவுதான். இதுதவிர, விவாதகளங்களுக்குச் செல்லும் போது, தேவையான வசனங்களை மனனம் செய்துகொள்வார்கள்.

9 வயது சிறுவன் 1330 திருக்குறள்களையும் அதன் எண்ணோடு சொல்கிறான். தலைகீழாக சொல்கிறான், எனும் போது, இது வியப்பிற்குறியதல்ல. அதே சமயம் கடின உழைப்பு இதற்கு பின்னால் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த கடின உழைப்பின் மூலமாக நீங்களும் இதனை செய்யமுடியும்.

எனவே பரீட்சார்த்த முறையில் முதலில், குர்ஆனில் உள்ள வசனங்களில் அதிகம் பயன்படுத்தும் 100 வசனங்களை மட்டும், குர்ஆனிலே குறித்துக்கொண்டு, அவற்றை அதன் வசனஎண்ணோடு சேர்த்து மனனம் செய்யுங்கள். மனனம் செய்யும் போது, வரிசையாகத் தான் மனனம் செய்யவேண்டும். ஒரே குர்ஆனை இதற்கு பயன்படுத்தவேண்டும். அதாவது மனப்பாடம் செய்ய பயன்படுத்திய, அதே குர்ஆனையே மீண்டும், நினைவுபடுத்துவதற்கும் பயன்படுத்துங்கள். சாஃப்ட்வேர் பக்கமே பேகக்கூடாது. மனப்பாடம் ஆகிவிட்டதே என்று விட்டுவிடாமல், மீண்டும்மீண்டும் பார்வையிட்டு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இன்று பயிற்சியை ஆரம்பியுங்கள். நான்கு மாத இறுதியில் 100 வசனங்களையும் அதன் எண்களோடு கடகடவென சொல்லமுடிந்தால், நீங்கள் இதுபோன்ற பிரச்சாரமுறைக்கு ஏற்ற நபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

v உலகளாவிய பேச்சாளர்களின் பயிற்சி முறைகள்.

உலக அளவில் அறியப்பட்ட பேச்சாளர்கள், ஒருசில குறிப்பிட்ட தலைப்பிலான உரைகளுக்கு, பல நாட்கள் குறிப்பு எடுத்து, பயிற்சி எடுத்து பேசுவார்கள். குறிப்புகளுக்காக, முக்கியமான நூல்கள், இணையதளங்கள், அரசாங்க புள்ளிவிபரங்கள், நூலகங்கள் போன்றவற்றிலிருந்து தகவல்களை சேகரிப்பார்கள். பிறகு தொகுத்து, பல்வேறு வகையில் சரிபார்த்து, திரும்பத்திரும்ப மனப்பாடம் செய்து, தனியாக ஒப்பித்து, பயிற்சி எடுப்பார்கள். சிறு தவறு ஏற்பட்டாலும், பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதால், இவ்வளவு சிரமம் எடுக்கிறார்கள்.

மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற தலைப்புகளில் பேசுபவர், இவ்வாறு அதிக பயிற்சி எடுக்கமுடியும். வாரத்திற்கு, 4 பயான்கள் செய்பவர், இவ்வாறு செய்ய முடியாது, எனினும், மாநாடு, கருத்தரங்கம் போன்றவற்றில் பேசும் போது, இந்த முறையை கையாளலாம்.

 

v விவாதத்திற்கு தேவையான திறன்கள்

பயானில் புதியபுதிய கருத்துக்களைக் கொண்டு வித்தியாசமான முறையில் பேசுவதற்கு பல்கோண சிந்தனை தேவை என்பதை முன்னரே பார்த்தோம். விவாதங்களில் பங்கெடுப்போருக்கு, இந்த பல்கோண சிந்தனை மிகவும் அவசியம். நாம் வைக்கும் வாதங்கள் எந்த கோணத்தில் அணுகப்பட்டு எதிர்வாதம் வைக்கப்படும் என்பதையும் எதிர்தரப்பினரின் வாதத்தை மாற்றுக்கோணத்தில் சிந்திப்பதற்கும் பல்கோண சிந்தனை கண்டிப்பாக தேவை.

உதாரணமாக)
கடந்த 2009 ல் நடைபெற்ற நாத்திகர்களுடனான ”கடவுள் உண்டா?” என்ற விவாதத்தின் முதல் அமர்வில், திகவினர் நம்மை நோக்கி பல கேள்விகள் வைத்தார்கள். அரைமணி நேர பேச்சில் சுமார் 50 கேள்விகளையாவது கேட்டிருப்பார்கள். இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று அனைவரும் நம் தரப்பு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நம் தரப்பிலிருந்து, ஒரு அறிஞர் பதிலளித்தார். ”எதிர்தரப்பு இவ்வளவு நேரம் தன்னுடைய நேரத்தை வீணாக்கிவிட்டார்கள். இறைவன் இல்லை என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் தரவில்லை. இவ்வளவு நேரம், இறைவன் மீது மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் புலம்பினார்கள்” என்று போட்டாரே ஒருபோடு, திகவினர் ஒருகணம் நம்பிக்கையே இழந்திருப்பார்கள்.

அதாவது, எதிர்தரப்பினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்னால், அவர்களின் கோணம் சரியா? என்று சிந்தித்ததால், நாம் எதிர்பார்த்ததைவிட பதில் சுலபமாக அமைந்துவிட்டது. இந்தகோணத்தில் அவர்கள் சிந்திக்காமல் வாதத்தை வைத்த காரணத்தினால், ஆரம்பமே அவர்களுக்கு மூக்குடைப்பாக அமைந்துவிட்டது. பல்கோண சிந்தனையின் முக்கியத்துவம் இதிலிருந்து நன்றாகவே விளங்கும்.

விவாதத்தில் பங்கெடுப்பவருக்கு தேவையான மற்றொரு திறமை, எந்த கருத்திற்கும் நொடிப்பொழுதில் உதாரணம் சொல்வது மற்றும் எந்த உதாரணத்திற்கும் எதிர்கருத்துள்ள பதில் உதாரணம் சொல்வது. அனைத்திற்கும் மேலாக தன்னம்பிக்கை மிகவும் அவசியமானது. என்ன கேள்வி கேட்டாலும், எப்படி வாதம் வைத்தாலும், இறைவன் அருளால் அனைத்திற்கும் என்னால் பதில் சொல்லமுடியும் என்ற தன்னம்பிக்கை தேவை.

Ì கவனம் – விவாதத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் மட்டும் போதாது. மேற்குறிப்பிட்ட பல்கோண சிந்தனை, உதாரணத்திறமை மற்றும் வாதத்திறமையும் தேவை. இரண்டு மாதம் ஆதாரங்களுக்காக பயிற்சி எடுத்தால் ஒருமாதம் வாதத்திறமைக்காக பயிற்சி எடுங்கள். வாதத்திறமை மற்றும் பல்கோண சிந்தனை இல்லாதவர்கள் விவாதத்தில் பங்கெடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். அரைவைத்தியன் கொலைகாரன் என்பதை மறந்துவிடாதீர்கள். விவாதத்திற்கு பேச்சுதிறமை அவசியம் என்றாலும், வெற்றி பெறுவதற்கு அது மட்டும் போதாது. சத்தியம் வேண்டும். அசத்தியம் ஒருபோதும் வெல்லாது.

 

v தனிநபர் தாஃவா

பிறமத மக்களுக்கு செய்யும் பிரச்சாரங்களில் தனிநபர் அழைப்புப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நேரம் இல்லை. ஆர்வம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லி தாஃவாவை புறக்கணித்தால் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டிய கேள்வியாக இது அமைந்துவிடும்.

உங்களோடு பலஆண்டுகாலம் பழகிய இந்து, கிருஸ்தவ, நாத்திக நண்பர், மறுமையில் ”இறைவா! எனக்கு இஸ்லாத்தை பற்றியும், ஒருகடவுள் கொள்கை பற்றியும், முஹம்மது நபியை பற்றியும் இவர் எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன்” என்று உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால், என்ன செய்வீர்கள்? எனவே பிரச்சாரகர் மட்டுமின்றி ஒவ்வொரு தனிநபரும், தனிநபர் தாஃவாவில் கவனம் செலுத்துங்கள்.

நேரமும், ஆர்வமும் இருந்தும், பிறருக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்ல தயங்குவதற்கு பெரும்பாலும் நான்கு வகையான காரணங்கள் தான் அடிப்படையாக உள்ளன.

  • மதத்தை பரப்பும் மதவெறியர்களாக நம்மை நினைத்துக் கொள்வார்களோ அதனால் பழக்கம் கெட்டுவிடுமோ, அவமதித்துவிடுவார்களோ என்ற அச்சம்.
  • நம்மவருக்கே இஸ்லாத்தை பற்றி சரியாகத் தெரியாது. பிறகு எங்கே மற்றவருக்கு சொல்வது. அல்லது ஓரளவுக்குத் தெரியும். அதை சொல்லப்போய் அவரு எதாவது ஏடாகூடமா கேட்டுவிட்டால் பதில் தெரியாதே என்ற பயம்.
  • சிலருக்கு சொல்வதற்கு ஆர்வமும் இருக்கும். செய்திகளும் தெரியும். எதைக்கொண்டு பேசஆரம்பிப்பது என்று தெரியாமல் முழிப்பது. அதாவது (ஸ்டார்ட்டிங் டிரபுல்) துவக்கப்பிரச்சனை.
  • சிலர் ஆரம்பத்தில் ஆர்வமாக சொல்லியிருப்பார், யாரும் கேட்பதில்லை. திருந்தவில்லை என்று போகப்போக சொல்வதை குறைத்துக் கொள்வார்.

பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட காரணங்கள் தான் தனிநபர் அழைப்புப்பணிக்கு தடையாக இருக்கின்றன. இனி வரிசையாக இவற்றை காண்போம்.

 

Ì மதவெறியர்களாக நினைப்பார்களா?

இஸ்லாத்தை சொன்னால், பிறர் நம்மை மதவெறியர்களாக நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் கண்டிப்பாக ஒருதுளிகூட தேவையே இல்லை. கிருஸ்தவத்தை பற்றி சொன்னால் தலைதெறிக்க ஓடுகிறவர்கள் கூட, இஸ்லாத்தை பற்றி சொல்லும்போது ஆர்வம் தான் காட்டுகிறார்கள். தங்களுக்கு உள்ள சந்தேகங்களை கொண்டு எதிர்கேள்வியும் கேட்கிறார்கள். நம்மைப்பார்த்து யாரும் ஓடுவது கிடையாது.

ஒரே ஒருநேரத்தில் மட்டும் இந்த பிரச்சனை ஏற்படும். வெறுப்பு ஏற்படும் வகையில் பலதடவை திரும்பத்திரும்பச் சொல்லி, ”இவர் வந்தாலே இஸ்லாத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்” என்று பயந்து ஓடும் அளவிற்கு ஒருவரை தள்ளும் நிலை. இது நம்மவரின் தவறு. இது போன்ற நிலையை ஒருபோதும் ஏற்படுத்திவிடக்கூடாது. ”ஆள் கிடைத்துவிட்டார். இருக்கிற எல்லா செய்தியையும் ஒரே நேரத்தில் சொல்லிமுடித்துவிடுவோம்” என்ற எண்ணத்தில் ஒருபோதும் பேசாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை சொல்லுங்கள். வெறுப்பது போன்ற உணர்வை அவர் முகத்தில் கண்டால் சொல்வதை விட்டுவிட்டு வேறுபேச்சை தொடருங்கள். பிறகு சொல்லிக்கொள்ளலாம்.

 

Ì இரண்டாவதாக, நம்மவருக்கே இஸ்லாத்தை பற்றி சரியாக தெரியாது.

          பிறருக்கு சொல்லவேண்டும் என்ற ஆசை பலமுஸ்லிம்களுக்கு இருக்கும். ஆனால் சொல்வதற்கு செய்திகள் எதுவும் அவர்களிடத்தில் இருக்காது. கடவுள் எங்கிருக்கிறார், மனிதனை ஏன் படைத்தார்? என்பது போன்ற அடிப்படை செய்திகளைக்கூட அறிந்திருப்பதில்லை. அடிப்படை செய்திகளே தெரியாத நிலையில், இஸ்லாத்தைப் பற்றிய குற்றச்சாட்டுகளை மாற்றுமத நண்பர் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது? என்ற அச்சத்தில் இஸ்லாத்தை பற்றி சொல்வதையே தவிர்த்துவிடும் மக்களும் உண்டு.

பூங்காக்களிலோ, மருத்துவமனையிலோ, புதுப்புது மக்களை தேடிச்சென்று தாஃவா செய்ய நினைத்தால், இஸ்லாத்தின் கொள்கைகளையும், சட்டங்களையும், பொதுவான குற்றச்சாட்டுகளுக்குரிய பதில்களையும், பிறமத கடவுள்கொள்கை பற்றியும், அவர்களின் வேதங்களில் உள்ள தவறுகள் பற்றியும் தேவையான அளவு கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் உங்களிடம் எதையாவது கேட்டு, அதற்கு பதில் தெரியாமல் நீங்கள் திருதிருவென முழித்தால், ”இஸ்லாத்தில் இதற்கெல்லாம் பதில் இல்லை. நான் இருக்கும் மதம் தான் சரியானது” என்று அவர் தனது வழிகேட்டில் இன்னும் உறுதியாகி விடுவார்.

அவ்வாறல்லாமல், நீங்கள் அடிக்கடி சந்திக்கும் நண்பரிடத்தில் தாஃவா செய்ய நினைத்தால், அதற்கு இஸ்லாத்தின் அனைத்து சட்டதிட்டங்களும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், இறைவன், மலக்குகள், தூதர்கள், வேதம், விதி போன்ற (அகீதா) கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களையாவது ஓரளவு தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். இதல்லாமல், ஜோதிடம், சூனியம், பேய் பிசாசு, இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் போன்றவற்றிற்கு பதில் தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை. உங்கள் நண்பர் இது சம்பந்தமாக கேள்வி கேட்டால், ”நாளை சொல்கிறேன்” என்று சொல்லி, நமது மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் பெற்று அவருக்கு பதில் சொல்லுங்கள். அது சம்பந்தமாக புத்தங்கள் இருந்தாலும் அவருக்கு கொடுங்கள். தேவைப்பட்டால் நமது தாயிக்களிடம் அவரை அழைத்துச் செல்லுங்கள்.

 

Ì மூன்றாவது, ஸ்டார்ட்டிங் டிரபுல் – எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.

சிலருக்கு சொல்வதற்கு ஆர்வமும் இருக்கும். செய்திகளும் தெரியும். எதைக்கொண்டு பேசஆரம்பிப்பது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டே இருப்பார்கள். இதுமிகவும் சுலபமான பிரச்சனை. அனுபவமுள்ள பிரச்சாரகர்களின் அறிவுரை என்னவென்றால், அவர்களை கேள்வி கேட்கவையுங்கள் அல்லது அவர்களிடத்தில் கேள்வி கேளுங்கள். இந்த இரண்டு முறைகளில் தாஃவாவை இலகுவாக ஆரம்பிக்கலாம்.

 

  • அவர்களை கேள்வி கேட்கவைக்கும் முறை.

உதாரணமாக, ”பேய் இருப்பதாக நம்புவது பாவம்” என்று நாம் சொன்னால், ”பேய் இருக்குதானே? பாய்” என்று அவர் கேட்பார், ”கண்டிப்பாக இல்லை. மனிதன் இறந்த பிறகு உயிர்களை இறைவன் கைப்பற்றிவிடுவதாக குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கு…” என்று பேசத்துவங்கி, முதலில் அதற்குரிய ஆதாரங்களை கொடுத்து, அதைத் தொடர்ந்து கடவுள்கொள்கை, மறுமைவாழ்க்கை என்று தாஃவாவை ஆரம்பிக்கலாம்.

அதாவது, நீங்கள் எதைப்பேசினால் அவராகவே உங்களிடத்தில் ”ஏன் அப்படி, இஸ்லாம் ஏன் இப்படிச் சொல்கிறது?” என்று கேட்பாரோ, அந்த மாதிரியான பேச்சைக் கொண்டு தாஃவாவை ஆரம்பிப்பது. முஸ்லிம்களோ, இஸ்லாமிய சட்டங்களோ அவ்வப்போது மீடியாக்களில் விவாதப்பொருளாக ஆக்கப்படுகிறது. உதாரணமாக, நபியை அவமதித்து எடுக்கப்பட்ட திரைப்படம், இலங்கை பெண் ரிஸானாவுக்கு மரணதண்டனை, காமலஹாசனின் விஸ்வரூபம் போன்றவை. இதுபோன்ற நேரங்களில் அதைப்பற்றி மாற்றுமத நண்பரிடத்தில் பேசுவது எளிதானது. இது மிகவும் சுலபமான முறை.

  • சிந்தனையை தூண்டும் கேள்விகளை நாம் கேட்பது.

மாற்றுமத மக்களிடத்தில் அவர்களின் கொள்கையை பற்றி, சிந்தனையை தூண்டும் கேள்விகளை கேட்பதும் பயனிக்கக்கூடிய தாஃவாவை ஆரம்பிக்கும் முறை உதாரணமாக, ”இயேசுவை கடவுள் என்கிறீர்களே! அவர் பைபிளில் ”கர்த்தரே… கர்த்தரே…” என்று வேறுயாரையோ அழைக்கிறாரே! யார் அவர்?”, ”பாவம் செய்தவன் மறுஜென்மத்தில் ஆடாக, மாடாக பிறப்பான்” என்கிறீர்களே, ”ஆடு என்ன நன்மை செய்யும், என்ன பாவம் செய்யும்?” என்பது போன்று கேட்பது.

இது போன்ற சிந்திக்கத்தூண்டும் கேள்விகளை கேட்டு, அதற்கு அவர் பதில் தெரியாமல் முழிக்கும் போது, அவரின் கொள்கைகள் எப்படி தவறு என்று சொல்ல ஆரம்பித்து, அதைத்தொடர்ந்து இஸ்லாத்தைப்பற்றி விளக்குவது. இதுவும் சிறந்த ஆரம்பிக்கும் முறை தான். இந்த முறையை பயன்படுத்துபவர்கள், குற்றவாளியிடம் விசாரனை செய்வது போன்று கேள்வி கேட்காமல், மனம்விட்டு பேசும் நண்பனிடத்தில் கேட்பது போல, நட்பாக கேளுங்கள். இல்லாவிட்டால் சிந்திப்பதற்கு பதிலாக, சண்டையிட ஆரம்பித்துவிடுவார்.

இது தவிர,  ”இன்று இஸ்லாத்தைப்பற்றி உங்களுக்கு சொல்கிறேன். சில நிமிடங்கள் ஒதுக்கி என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடவுள் கொள்கை தவறு….” என்று நேரடியாக இஸ்லாத்தை சொல்லமுடிந்தாலும் சொல்லலாம். தவறில்லை. சந்தர்ப்பத்திற்கு தகுந்தார்போல ஆரம்பிக்கும் முறையை முடிவுசெய்து கொள்ளுங்கள்.

 

Ì நான்காவது, யாரும் திருந்தவில்லை என்பதற்காக சொல்வதை விட்டவர்

ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஆர்வமாக பிறருக்கு எடுத்துச்சொன்ன பலபேர் தற்போது அதுபோன்ற தாஃவாவில் ஈடுபடாமல் இருப்பதற்கு உள்ள காரணங்களில் வருத்தமளிக்கும் ஒரு காரணம், ”சொல்லிசொல்லி பார்த்தேன் யாரும் திருந்துற மாதிரி தெரியல. அதனால சொல்றதே விட்டுட்டேன்” என்கிறார்கள். இன்னும் சிலர் பிறருக்கு சொல்வதே கிடையாது ஏன் என்று கேட்டால், ”அவங்கெல்லாம் திருந்த மாட்டாங்க பாய்” என்கிறார்கள்.

 

இதுபோன்று பேசுபவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளட்டும். அவர்கள் திருந்துவார்களா? திருந்தமாட்டார்களா? என்று உங்களுக்கு எப்படித்தெரியும். நாளை என்ன நடக்கும் என்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள மறைவான ஞானம் உங்களுக்கும் உள்ளதா? பிறருக்கு சொல்வது மட்டுமே நமது கடமை. அவர்கள் திருந்தாவிட்டால் இறைவனிடத்தில் குற்றவாளியாக நிற்கப்போவது அவர்கள் தான். நாமல்ல. எனவே பிறருக்கு சொல்லிக்கொண்டே இருங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சொல்லியதற்குறிய நன்மை உங்களுக்கு உண்டு.

حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ فَقَالَ أَيْ عَمِّ قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَالَا يُكَلِّمَانِهِ حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْهُ فَنَزَلَتْ مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ وَنَزَلَتْ إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ

நபி(ஸல்) அவர்கள், தனது பெரியதந்தை அபூதாலிப்பிடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். அவர் மறுத்துவிடுகிறார். அதற்காக வருத்தப்படுகிறார்கள். உடனே அல்லாஹ் ”நபியே நீர் நாடியரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது, தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான்” என்று வசனம் இறக்கிவைக்கிறான். (புகாரி: 3884)ஹதீஸின் கருத்து) எனவே, நேர்வழி காட்டுவது இறைவனின் விருப்பம். சொல்வது மட்டுமே நமக்குள்ள கடமை என்பதை உறுதியாக புரிந்துகொண்டால் தான், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லி பிரச்சாரத்தை விட்டுவிட மாட்டோம்.

Ì என்ன சொல்ல வேண்டும்?

இஸ்லாத்தை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தாலும் முதலில் எதை சொல்வது, பிறகு எதை சொல்வது என்று பலருக்கு குழப்பமாக இருக்கும். எனவே, பிறமத மக்களிடத்தில் தாஃவா செய்யும் போது என்ன பேசவேண்டும் என்பதையும் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
இஸ்லாத்தை பற்றி நேரடியாக சொல்வதாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட பிரச்சனையை பற்றி பேசஆரம்பித்து, அதன் இஸ்லாமிய பார்வைகளையும், நியாயங்களையும் சொல்லி அதன் தொடர்ச்சியாக இஸ்லாத்தை பற்றி சொல்வதாக இருந்தாலும் சரி தேவையானதை சொல்லிவிட்டு, இஸ்லாம் என்றால் என்ன என்று விளக்கும் போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரம்பப்புள்ளிக்கு வந்துவிடுங்கள்.

  • முதலில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் என்ற இரு வார்த்தைகளின் பொருளை சுருக்கமாக விளக்கவேண்டும். பிறகு, இஸ்லாத்தின் அடிப்படை ”லாயிலாஹஇல்லல்லாஹ்-முஹம்மதுரஸுலுல்லாஹ்” என்று சொல்லி அதன் பொருளை மிகசுருக்கமாக விளக்கவேண்டும்.
  • பிறகு, இஸ்லாமிய நம்பிக்கை ஆறு. ஒருகடவுள் கொள்கை, வானவர்கள், நபிமார்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்கள், இறுதி நாள் மற்றும் விதி. இந்த ஆறு விஷயங்களையும் மிகசுருக்கமாக விளக்குங்கள். (குர்ஆனின் அறிவியலைபற்றி இந்த இடத்தில் விளக்காதீர்கள்)
  • பிறகு, இறைதூதர் முஹம்மது நபி போதித்த, இஸ்லாத்தின் மாணிக்கங்களாக திகழ்கிற சில கொள்கைகளை சொல்லுங்கள்.
  • மனிதர்கள் அனைவரும் சமம், தீண்டாமை பெரும்பாவம்.
  • ஏழைகளுக்கு, அநாதைகளுக்கு உதவி செய்யவேண்டும். ஜகாத் தரவேண்டும்.
  • பிறர் பொருளை, மானத்தை மதிக்கவேண்டும். அபகரிக்கக்கூடாது.
  • தாய், தந்தையை மதிக்கவேண்டும், உறவுகளை முறிக்கக்கூடாது.
  • மது, புகை, சூதாட்டம், விபச்சாரம், வட்டி போன்றவைகள் நரகில் சேர்க்கும்.

என்பன போன்ற முத்தான அறிவுரைகளை சொல்லுங்கள். (நபியின் வரலாற்றை இந்த இடத்தில் சொல்லாதீர்கள்)

  • மேற்கண்ட அறிவுரைகளின் தொடர்ச்சியாக, ”ஒரு இறைவனை மட்டுமே வணங்கவேண்டும். முஹம்மது நபியை இறைதூதர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். பிறகு இறுதி நாள் வரும். அதில் இறைவன் நம்மை கேள்விகேட்பான். இஸ்லாம் சொன்னது போல வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார். பலகடவுளை வணங்கி மனம் போன போக்கில் வாழ்ந்தவர் நரகம் செல்வார்” என்று வரிசையாக விளக்குங்கள். அதாவது,
இஸ்லாம் அறிமுகம்
நம்பவேண்டிய நம்பிக்கைள்.
முஹம்மது நபியின் போதனைகள்
இறுதிநாள் விசாரனை

என்று மேற்குறிப்பிட்ட வரிசையில் செய்திகளை சொன்னால் இஸ்லாத்தை பற்றிய தெளிவான பார்வை அவருக்கு கிடைக்கும். இது தான் தாஃவா பணி செய்யும் பலர் கையாளும் பிரச்சார முறை.

Ì  நினைவிருக்கட்டும் – அடிக்கடி சந்திக்கவும், இஸ்லாத்தை பற்றி பேசவும் வாய்ப்புள்ள நண்பராக இருந்தால், முதல் போதனையிலேயே அனைத்தையும் சொல்லத்தேவையில்லை. அவ்வப்போது எழும் பிரச்சனைகள் சம்பந்தமான இஸ்லாமிய பார்வையையும், நியாயத்தையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருங்கள். எந்த இடையூறும் இல்லாமல் உங்களோடு ஒருமணி நேரம் ஒதுக்கும் நேரத்தை பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட அனைத்து செய்திகளையும் சொல்லுங்கள்.

Ì இடையிடையே கேள்விகள் கேட்டால் என்ன செய்வது? – மேற்குறிப்பிட்ட வரிசையில் இஸ்லாத்தை பற்றி மறுமையை பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் போது, உங்கள் மாற்றுமத நண்பர், ”முஸ்லிம்கள் வரதட்சனை வாங்குறாங்களே பாய்” என்று சம்பந்தமில்லாமல் எதாவது கேள்வி கேட்பார். தாஃவாவில் பொறுமை மிகவும் அவசியம். ஒருபோதும் அவரையோ அவருடைய கேள்வியையோ புறக்கணிக்கக் கூடாது. அவர் கேட்டதற்கு தேவையான பதிலை சுருக்கமாக சொல்லிவிட்டு, ”இதுபோன்ற உங்க எல்லா சந்தேகத்திற்கும் இறுதியில் பதில் சொல்றேன்” என்று சொல்லி, சொல்ல வந்த செய்தியை முழுமையாக்குங்கள்.

Ì இன்னும் சில விஷயங்கள் உள்ளன. – மேற்குறிப்பிட்ட போதனையில் குர்ஆன் இறைவேதம் என்பதற்குறிய சான்றுகள், நபியின் வரலாறு, குற்றச்சாட்டுகளுக்குறிய பதில்கள் போன்ற ஒருசில முக்கியமான விஷயங்கள் விடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் புத்தகம் வாசிப்பது போல சொல்லாமல், இவற்றைப் பற்றி அவரே சந்தேகம் ஏற்பட்டு கேட்கும் போது சொன்னால், நாம் சொல்வதை நன்றாக புரிந்துகொள்வார். இதல்லாமல், தாஃவா செய்யும் போது, மாற்றுமத நண்பரிடம் எதையாவது இடையிடையே எதையாவது கேட்டுகேட்டு கலந்துரையாடல் போல தாஃவா செய்யுங்கள். அவர் பேசுவதற்கும் நேரம் கொடுங்கள். இஸ்லாத்தை ஏற்றவர்களின் வரலாற்றை சொல்லலாம்.

 

Ì மிகமிக முக்கியமாக, சந்தேகங்களை தீர்த்துவைய்யுங்கள். – இஸ்லாத்தை அறிமுகம் செய்வதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களை விட இஸ்லாத்தை பற்றி அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அதற்குறிய சரியான பதில் கிடைக்கும் போது, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்கள் தான் அதிகம். வரலாறுகளே இதற்கு சாட்சி.

எனவே இஸ்லாத்தைப் பற்றி சொல்லிமுடித்த பிறகு, அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கச் சொல்லி, அதற்குறிய பதில்களை நட்பு ரிதீயாக சொல்லி புரியவையுங்கள். இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் ஏராளமான கேள்விகளுக்குரிய பதில்கள் பலமுறை சொல்லப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். சில விஷயங்களை எதிர்கேள்விகளை கொண்டு மட்டுமே முழுமையாக விளக்கமுடியும் என்ற காரணத்தினால், தேவையான நேரங்களில், மென்மையான முறையில் விவாதம் செய்யுங்கள்.

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! (அல்குர்ஆன்: 16:125) என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே மென்மையான எதிர்கேள்விகளை கொண்டு அழகிய முறையில் விவாதம் செய்தும் தாஃவா செய்யலாம்.

Ì கவனம், சண்டையிடுவது போல பேசி தாஃவா செய்வது சரியான முறையல்ல. ”உங்கள் வேதத்தில் அசிங்கம் உள்ளது. என்னிடம் டிவிடி இருக்கிறது பார்க்கிறீர்களா? குப்பையில் வீசப்படவேண்டிய புத்தகம் அது” என்று கடுமையாக பேசி விவாதம் செய்தால், விவாதத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த மாற்றுமத நண்பர், உங்கள் பதில் நியாயமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டார். தன்னையும், தன் மதத்தையும் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிடுவார். எனவே நல்ல நண்பனிடத்தில் பேசுவது போன்று மென்மையான முறையில் பேசி தாஃவா செய்யுங்கள்.

Ì விதிவிலக்கு – அசத்தியத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காகவே சிலநேரம் பைபிள் இறைவேதமா? என்பது போன்ற தலைப்பில் விவாதம் செய்யப்பட்டு, அதில் உள்ள தவறுகளும், ஆபாசங்களும் எடுத்துக் காட்டப்படுகிறது. இணைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் குள்ளநரிகளுக்கு பதிலடி தரும் வகையிலும் இது போன்று கடுமையான முறையில் வாதங்கள் வைக்கப்படுகிறது. ”உங்களிடம் வரம்பு மீறியோரிடம், அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! (அல்குர்ஆன்: 2:194)” என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த அடிப்படையில் இது அனுமதிக்கப்பட்டது தான்.

தனி நபர் தாஃவாவிற்காக நாம் சந்திக்கும் மாற்றுமத நண்பர்கள் யாரும் நம்மிடம் வரம்பு மீறுவது கிடையாது. எனவே அவர்களிடத்தில் மென்மையான முறையிலேயே பதில் சொல்லவேண்டும் அல்லது விவாதம் செய்யவேண்டும். அவர்களது வேதத்தில் உள்ள தவறுகளை சொல்லவேண்டியிருந்தால், ”இது மாதிரியான செய்திகளெல்லாம் உங்கள் வேதபுத்தகத்தில் உள்ளதே! இது நியாயமா? இறைவனல்லாத வேறுயாரோ ஒருவர் தான் இதை உள்ளே சேர்த்திருக்கிறார்.” என்று மென்மையாக சுட்டிக்காட்டுங்கள். இது தான் அவரை சிந்திக்கத்தூண்டும்.

 

Ì மாற்றுமத நண்பர் கேட்கும் கேள்விகளுக்கு, இயன்றவரை நம்பிக்கையின் அடிப்படையில் பதில் சொல்லாமல், அறிவுப்பூர்வமான வாதங்களையும், அறிவியல் சான்றுகளையும் கொண்டு பதில் சொல்லுங்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு, ”நாங்க இப்படி நம்புறோம்” என்று பதில் சொன்னால், ”நீங்க அப்படி நம்புகிறது போல, நாங்கள் இப்படி நம்புறோம்” என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். விவேகமில்லாமல் தாஃவா செய்துவிட்டு ”திருந்தமாட்டேன்றாங்க, புரிந்துகொள்ள மாட்டேன்றாங்க” என்று சொல்வது என்ன நியாயம்? எனவே விவேகத்துடன் அறிவியல் சான்றுகளை கொண்டு பதில் சொல்லுங்கள்.

உதாரணமாக, வானம், பூமி போன்றவற்றின் அளவு, தன்மைகளை விளக்கும் புகைப்படங்களை காண்பித்து, கற்பனையே செய்யமுடியாத அளவு பிரம்மாண்டமான நம் பிரபஞ்சத்தை படைத்த இறைவன் எவ்வளவு ஆற்றல் உடையவனாக இருப்பான்! அவன் ஒரு மாடு, பாம்பு, பன்றி என்று சொல்வது என்ன நியாயம்? சூரியனை கடவுள் என்கிறீர்கள். நாம் வாழும் அண்டத்தில் நம் சூரியன் ஒருதுசியை விட சிறியது. நமது சூரியனைப் போல பலலட்சம் சூரியன்கள் உள்ளன.

பத்தாயிரம் கோடி சூரியகுடும்பங்களை கொண்ட ஒரு கேலக்ஸியைப் போல, பிரபஞ்சத்தில் பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானம், பூமியை பற்றி திருமறை பல்வேறு இடங்களில் பேசுகிறது. என்று சொல்லி இஸ்லாத்தை அறிவியல்பூர்வமாக விளக்குங்கள். இதுபோன்ற செய்திகளெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்காத அளவு மாற்றுமதத்தினரை ஈர்க்கும்!

Ì பிறகு விடைபெறும் நேரத்தில், இஸ்லாமிய கொள்கைகளை விளக்கும் சிறு புத்தகங்களை கொடுத்து படிக்கச்சொல்லுங்கள். முடிந்தால், குர்ஆன் கிராத்தை அவரை கேட்கச் செய்யுங்கள். ”குர்ஆனை தாங்க. படிக்கனும்” என்று அவர் கேட்கும் நிலைக்கு வரும் வரை குர்ஆனை பற்றி சொல்லிக்கொண்டே இருங்கள். இறுதியில் அவர் கேட்கும் போது, குர்ஆனை கையில் கொடுத்து, ”இது இறைவனுடைய வேதம். இதைப் படித்து நேர்வழியும் பெறமுடியும். இதை சிந்திக்காமல் இழப்பையும் சந்திக்கமுடியும். எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். நான் உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துச்சொல்லிவிட்டேன். விசாரனை நாளில் இதற்கு நீங்களே சாட்சி” என்றோ, வேறுவகையிலோ சிந்திக்கத்தூண்டும் சிறிய அறிவுரை செய்யுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது, நோன்பு திறக்கவோ, ஜும்மா உரைக்கோ அழைத்துச்செல்லுஙகள்

மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லாத நண்பராக இருந்தால், மறக்காமல் உங்களை தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்ணையும், விலாசத்தையும் கொடுத்துவிட்டு, ”என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்” என்று இன்முகத்தோடு விடைபெறுங்கள்.

சில நாட்கள் கழித்து, நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பேசுவதும் தவறல்ல.

மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ள நண்பராக இருந்தால், ”என்ன.. படித்தீர்களா? சந்தேகம் உள்ளதா?” என்று அவ்வப்போது கேட்டுக்கேட்டு, தாஃவாவை தொடருங்கள். அனைத்திற்கும் மேலாக, அவர் நேர்வழி பெறவேண்டும் என இறைவனிடம் துஆச் செய்யுங்கள். முடிவு இறைவன் கையில்.

பிரச்சாரத்தின் ஒருபகுதியாக உள்ள மாற்றுமத தாஃவாவையும் ஒரு பிரச்சாரகர் அறிந்திருக்கவேண்டும் என்பதற்காக இந்த செய்திகள் இங்கு சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இனி பயான் செய்யும் முறைகளின் மீதி விஷயங்களை பார்ப்போம்.