05) பேச்சில் தவிர்க்கவேண்டியவை

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

பேச்சில் தவிர்க்கவேண்டியவை. 

v சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள்.

ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று நொடிப்பொழுதில் முடிவெடிக்கவேண்டியிருக்கும். குழப்பமே வேண்டாம். சந்தேகம் வந்துவிட்டால், அந்த செய்தியை, ஹதீஸை கண்டிப்பாக சொல்லாதீர்கள். உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே. (அல்குர்ஆன்: 17:36) என்று அல்லாஹ் நமக்கு கற்றுத்தரும் விதியை, பேச்சில் மட்டுமல்ல எல்லா நேரத்திலும் நினைவில் வைத்து பயன்படுத்துங்கள்.

حَدَّثَنَا أَبُو مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ وَإِنَّ الْكَذِبَ رِيبَةٌ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ قَالَ وَأَبُو الْحَوْرَاءِ السَّعْدِيُّ اسْمُهُ رَبِيعَةُ بْنُ شَيْبَانَ قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ حَدَّثَنَا بُنْدَارٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ بُرَيْدٍ فَذَكَرَ نَحْوَهُ

மேலும், ”சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு” என்று நபியவர்களும் கூறியுள்ளார்கள். (திர்மிதி 2442) எனவே, ஒருபோதும் சந்தேகத்திற்குறியதை பேசிவிடாதீர்கள். பயானை முடித்த பிறகு, அந்த செய்தி சரியானது தானா என்று ஆய்வு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  
v தேவையானதை பேசுங்கள். தெரிந்ததையெல்லாம் பேசாதீர்கள்.

சிலர் பேசும் போது கவனித்திருப்பீர்கள், ஏராளமான செய்திகளை வரிசையாக மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். பேசுவது தலைப்பிற்கு உட்பட்ட செய்தியா? இல்லையா? என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஒருமணி நேர உரையில் நாற்பது, ஜம்பது செய்திகளை மனம்போன போக்கில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த பேச்சு விறுவிறுப்பாக இருந்தாலும், இது தரமான பேச்சு அல்ல. நீங்கள் அரசியல்வாதியாக ஆகவிரும்பினாலே தவிர, இவ்வாறு பேசிப்பழகாதீர்கள்.

ஏதனால் இப்படி பேசுகிறார்கள்? : பேச்சை முன்னரே வரையறுக்காதது தான் இதற்கு காரணம். இவர்கள் நேரத்தை ஒதுக்கி சரியாக குறிப்புகளையும் எடுப்பதில்லை. அதை கோர்வையாக்குவதும் இல்லை. தலைப்பை நினைவுபடுத்தும் வெறும் நான்கே செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு, தனக்கு தெரிந்த (மக்கள் ரசிக்கும்) செய்திகளைக் கொண்டு மீதி நேரத்தை நிரப்புவார்கள்.

இவ்வாறு செய்யாதீர்கள். குறிப்புகளை சேகரிக்கும் போது, தலைப்பிற்கு உட்பட்ட செய்திகளை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள். ஏதோ பத்து செய்திகள் இருந்தால் போதும், தொடர்புபடுத்தி பேசிவிடாலாம், என்று இருந்துவிடாதீர்கள். நீங்கள் தரமான பேச்சாளாராக ஆக விரும்பினால், இதை மனதில் நிறுத்துவது அவசியம்.

Ì விதிவிலக்கு: மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சிலநேரம் தலைப்பிற்கு தொடர்பில்லாத சுவைமிகுந்த ஒரு சம்பவத்தை சொல்லவேண்டியிருக்கும். அப்போதும் கூட, எப்படியாவது ஒருதொடர்பை ஏற்படுத்திவிட்டு தான் அந்த சம்பவத்தை சொல்லவேண்டும்.

உதாரணமாக) தொழுகையை பற்றி பேசும்போது, பக்கத்து தெருவில் நடந்த திருட்டை பற்றி சொல்லியே ஆகவேண்டுமெனில், திருட்டை பற்றி சொல்லிவிட்டு, ”இதுபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் தொழுகையாளி பதட்டப்பட மாட்டார்”  என்று எப்படியாவது ஒரு தொடர்பை உருவாக்கிவிடவேண்டும். ”இதை எதுக்கு இந்த தலைப்புல சொல்லுறாரு!” என்று மக்கள் கருதுகிற வகையில், சம்பந்தம் இல்லாமல் எதையுமே சொல்லக்கூடாது.

 

v சஸ்பென்ஸ் வேண்டாம்.

3 விஷயங்கள் உள்ளன. 4 விஷயங்கள் உள்ளன. என்பது போன்ற ஹதீஸ்களை கூறும் போது, அந்த மூன்றையும் சொல்லி விடுங்கள். இல்லையெனில் சொல்லப்படாத இரண்டு என்னவாக இருக்கும் என்று சிந்திப்பதிலேயே பலருக்கு கவனம் இருக்கும்.

உதாரணமாக) மூன்று தீமைகள் இல்லாத நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார். அதில் ஒன்று இந்த கடன்… என்று பேசிவிட்டு போய் விட்டால், மீதி இரண்டு தீமைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். சிலருக்கு, அதை சொல்லாத உங்கள் மீது வெறுப்பு ஏற்படும்.

பயான் உங்களுக்கு அல்ல. கேட்கும் மக்களுக்கு என்பதை நினைவில் வையுங்கள். எனவே ஹதீஸை முழுமையாக சொல்லுங்கள். அதுவும் பயானை நீட்ட வேண்டுமெனில் மூன்றையும் விரிவாக சொல்லலாம். இல்லையெனில் சுருக்கமாக-வாவது மூன்றையும் சொல்லிவிடுங்கள். ஒற்றை வரியிலாவது மூன்றையும் சொல்லிவிடவேண்டும். (அந்த மூன்று தீமைகள் மோசடி, தற்பெருமை, கடன் – திர்மிதி 1497)

 

v பீடிகையின் போது கவனம் தேவை

பீடிகை போடுவதை பற்றி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. பீடிகை போட்டதற்கு பிறகு, பெரும்பாலும், மூன்று வகைகளில் தவறு ஏற்படுகிறது.

1) அதிக பீடிகையை போட்டு ஒரு குர்ஆன் வசனத்தை சொல்லவிரும்பினால், அந்த நேரத்தில் அரபியில் சொல்லிவிட்டு பிறகு மொழிபெயர்ப்பை சொல்லுங்கள். கேட்பதற்கு சிறப்பாக இருக்கும். மொழிபெயர்ப்பை மட்டும் தான் தெரியும் என்றால், மிககுறைந்த பட்சம் வார்த்தை மாறாமல் சரியாக சொல்லுங்கள். தட்டுத்தடுமாறி குர்ஆன் வசனத்தை சொன்னால், உங்கள் பீடிகை வேஸ்ட். இனி பேசப் போகும் செய்திகளுக்கும் கூட மதிப்பிருக்காது.

2) அதுபோல, அதிக பீடிகையை கொடுத்துவிட்டு, சொல்லும் செய்தி அந்த அளவிற்கு மதிப்புடையதாக இல்லாவிட்டால், அப்போதும் போடப்பட்ட பீடிகைக்கு மதிப்பிருக்காது. இனி பேசப் போகும் செய்திகளுக்கும் மதிப்பிருக்காது.

3) சிலநேரங்களில், பீடிகை போட்டுவிட்டு, அதை விளக்கத்தேவையான சரியான ஹதீஸை சொல்லாமல் விட்டுவிடுவோம்.

சரியான பயிற்சி இல்லாமல் பேசும்போது, இது போன்று ஏற்படும். எனவே நேரம் ஒதுக்கி போதுமான அளவு பயிற்சி எடுத்துக்கொண்டு பேசுங்கள்.
v வழியுறுத்தும் போது கவனம் தேவை

நாம் விரும்பும் கருத்தை வழியுறுத்தும் போது, அதை சற்று மிகைப்படுத்தி செல்லவேண்டியிருக்கும். அதற்கு எதிரான கருத்தை தாக்கி பேசவேண்டியிருக்கும். இது போன்ற நேரங்களில் மிகுந்த கவனம் தேவை. கட்டுப்பாடற்ற மிகைப்படுத்துதல்   பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். உதாரணமாக,

தர்மம் செய்வதை வழியுறுத்தும் போது, தர்மம் செய்யாவிட்டால் தண்டனை கிடைக்கும் என்பதையும் வழியுறுத்தவேண்டியிருக்கும். கட்டுப்பாடு இல்லாமல், ”தர்மம் செய்யாவிட்டால், நிரந்தர நரகத்தில் தள்ளப்பட்டுவிடுவோம்” என்று பேசிவிடக்கூடாது. கவனத்தோடு பேசவும். நிரந்தர நரகத்திற்கு உரிய பாவமாக இது சொல்லப்படவில்லை.

அதுபோல, ”வாலிபன் விபச்சாரம் செய்வதில் கூட நியாயம் இருக்குது. அல்லாஹ் விட்டுடுவான். முதியவர் விபச்சாரம் செய்வது தான் மோசமானது.. மறுமையில அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று ஒருவர் பேசுகிறார். முதியவர் விபச்சாரம் செய்வது அதிக குற்றத்திற்குறிய பாவம் தான். ஆனால் ”வாலிபர் செய்தால் அல்லாஹ் விட்டுவிடுவான்” என்று எந்த ஹதீஸில் உள்ளது?

சட்டங்களை சரியாக விளங்கி நிதானமாக பேசுவது, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கும். பொதுவான ஒரு அறிவுரை என்னவென்றால், வாயில் வருதையெல்லாம் பேசிவிடாதீர்கள். சிந்தித்து பேசுங்கள்.

 

v தன் பேச்சை தானே பொய்யாக்குதல்

எதிர்கருத்தை மிகைப்படுத்துதல் ஒருபுறமிருக்க, சிலர் தன் பேச்சை தானே பொய்யாக்கிக் கொள்வார்கள். அதாவது. ஒரு பொருளின் சிறப்புகளை வரிசையாக சொல்லும்போது, பின்னதாக சொல்லும் செய்தியை வலுப்படுத்துவதற்காக, முன்னதாக சொன்ன செய்தியை மட்டம் தட்டுவது அனைவருக்குமே உள்ள இயல்பு. ஆனால் அது எல்லைமீறிப்போய், தன்னுடைய முந்தைய பேச்சை பொய்யாக்கும் விதத்தில் அமைந்து விடக்கூடாது. உதாரணமாக, குர்ஆனின் அறிவியலை பற்றி ஒருவர் பேசுகிறார்,

”ஆற்றல் இருந்தால் வானம்,பூமியை கடந்து செல்லுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது. எவ்வளவு பெரிய அறிவியல் பார்த்தீர்களா?”

”இதைக்கூட யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்ங்க. ”சக்தியிருந்தா செவ்வாய் கிரகத்திற்கு போங்க” என்று நான் கூட உங்களிடம் சொல்லலாம். இதைவிட, ”வானத்தில் ஏறும் போது உள்ளம் சுருங்கும்” என்று குர்ஆன் சொல்கிறது. எவ்வளவு பெரிய அறிவியல் பார்த்தீர்களா?”

”வானத்தில் ஏறும்போது உள்ளம் சுருங்கும் என்று கூட யார்வேண்டுமானாலும் சொல்லிடலாம்ங்க. உயரமான மலையில ஏறும்போது, மூச்சுவிட சிரமமாக இருந்து ஒருவர் இப்படி எழுதியிருக்கலாம்” என்று வாதிடலாம்ங்க. இதைவிட, ”பூமி, சூரியன் என அனைத்தும் சுற்றிக்கொண்டிருக்கிறது” என்று குர்ஆன் சொல்லுகிறது. எவ்வளவு பெரிய அறிவியல் பார்த்தீர்களா?” – என்று ஒருவர் பேசுகிறார்.
மேற்கண்ட பேச்சில், இவர் குர்ஆன் கூறும் 3 அறிவியலை சொல்லிவிட்டு, முந்தைய இரண்டையும் தானே பொய்யாக்கிவிட்டு, இறுதியாக சொன்னதை மட்டும் தூக்கிப்பிடிக்கிறார். ஏன் இந்த ஆர்வக்கோளாறு? என்னபேசுகிறோம் என்ற முழு சிந்தனையோடு பேசுங்கள்.

v இஸ்லாத்தை அறிவியலுக்கு எதிராக காட்டுதல்.

”அறிவியலே சொன்னாலும் சரி, அறிவியலுக்கு மாற்றமாக இருந்தாலும் சரி அல்லாஹ் சொல்வதுதான் சரியானது…..” என்று ஒருசிலர் பேசுவதை பார்க்கிறோம். அல்லாஹ் சொல்வது தான் சரியானது, அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அறிவியலும், இறைவனின் வார்த்தையும் வேறுவேறா? படைத்த இறைவன் தன் படைப்பை பற்றி பேசுவது தானே அறிவியல்!

நிரூபிக்கப்படாத விஞ்ஞானிகளின் கருத்தும், இறைவனின் கூற்றும் முரணாக இருக்கலாம். ஏனெனில் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் அல்ல. நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியல் உண்மையும் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. எனவே இஸ்லாத்தை ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக காட்டாதீர்கள். அதில் உள்ள நுணுக்கம் உங்களுக்கு புரியாவிட்டால், அதை பேசாமல் விட்டுவிடுங்கள். ”குர்ஆனே சொன்னாலும் சரி, நான் அல்லாஹ் சொல்வதைத்தான் கேட்பேன்” என்று ஒருவர் சொன்னால், அவரைவிட அறிவாளி யாரும் இருக்கமுடியுமா?

 

v வலுவற்ற ஆதாரங்களை அதிகப்படியாக கூட பயன்படுத்தாதீர்கள்.

ஒரு கருத்தை வழியுறுத்துகிறீர்கள் என்றால், அதற்குறிய சரியான காரணங்களை மட்டும் சொல்லி நிருவுங்கள். வலுவற்ற காரணங்களை, இதுவும் இருக்கட்டுமே என்று அதிகப்படியாக கூட பயன்படுத்தாதீர்கள். இதனால் ஏற்படும் மிகப்பெரும் விபரீதம் என்னவென்றால், நல்ல ஆதாரங்களை பொருட்படுத்தாமல், அந்த வலுவற்ற காரணத்திற்கு மட்டும் பதிலளித்து உங்கள் கருத்தை எளிதில் நிராகரித்து விடுவார்கள்.

Ì காரணமும், விளைவுளும் ஒன்றல்ல – ஒருவர் மேடையில் பேசுகிறார். ”ஓரே நேரத்தில் மூன்று தலாக்-களை சொல்லி, ஒரு நிமிடத்தில் விவாகரத்து செய்வதனால், இணைந்து வாழும் வாய்ப்பை பலர் இழந்துவிடுகின்றனர் இந்த காரணத்தினால் தான் முத்தலாக் கூடாது என்கிறோம்” என்று.

இவர் பேசியது சரியா? அவர் சொன்னது முத்தலாக் சொல்வதனால் ஏற்படும் தீய விளைவுதானே தவிர, முத்தலாக் கூடாது என்பதற்கான ஆதாரம் அல்ல. ”நபியின் காலத்தில் முத்தலாக், ஒரு தலாக்காகவே கருதப்பட்டது” என்ற இப்னு அப்பாஸின் ஹதீஸ் தான் ஆதாரம். (முஸ்லிம்: 3746). எனவே, சிந்திக்காமல், இது போன்று, தவறான வாதங்களை வைத்து, நிரூபிக்க முயன்றால், நம் வாதத்தை எளிதாக முறியடித்துவிடுவார்கள். எனவே, சரியான காரணத்தை வைத்து முதலில், நிரூபித்துவிட்டு, பிறகு, ”இதனால் ஏற்படும் பாதிப்புகள்” என்று சொல்லி, அந்த தீய விளைவுகளை தாராளமாக எடுத்துச்சொல்லுங்கள்.

Ì ஒருசில சட்டங்களுக்கு ஆதாரம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் நல்ல, தீய விளைவுகளும் முக்கியமானவை. விளக்கப்படவேண்டியவை. உதாரணமாக, புகை பிடிக்க மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதற்கு வைக்கப்படும் ஆதாரம், மக்களின் நினைவில் இருக்கிறதோ இல்லையோ,  புகை பிடிப்பதனால் ஏற்படும் தீயவிளைவுகள் கண்டிப்பாக நினைவில் இருக்கும். அந்த விளைவுக்கு பயந்தே அந்த தீமையை விடுபவர்களும் உண்டு. எனவே, எந்த சட்டத்தையும் முதலில் தகுந்த ஆதாரத்தைக்கொண்டு விளக்குங்கள். பிறகு அதன் நல்ல, தீய விளைவுகளை எடுத்துக்கூறுங்கள். இரண்டுமே அவசியமானவை தான். ஆனால் விளைவு ஒருபோதும் ஆதாரமாக காட்டப்படக்கூடாது.

 

v இதுவெல்லாம் தப்பு. என்று ஒருவரியில் சாதிக்கப்பார்க்காதீர்கள்.

ஒருவர் பேசுகிறார். ”இன்னைக்கு பலரை பாக்குறோம் பாத்தியா ஓதுறாங்க. கத்தம் ஓதுறாங்க. இதுவெல்லாம் தப்பு. நாம ரஸுலுல்லாஹ் சொல்றத கேட்கணும்.” என்று.  

”ரஸுலுல்லாஹ் சொல்றத கேட்கணும், அல்லாஹ்வை தான் வணங்கணும் என்பதெல்லாம் சரி. பாத்தியா ஓதுறாங்க இதுவெல்லாம் தப்பு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போனால், பாத்தியா சரி என்று நினைத்து காலகாலமாக செய்து வரும் ஒருவர், இதுவெல்லாம் தப்பு என்று சொல்லிவிட்டதால், விட்டுவிடுவாரா? தவறு என்றால் எதனால் தவறு? என்பதை தகுந்த ஆதாரத்தோடு விளக்குங்கள். ஒரே ஒரு ஹதீஸையாவது மேற்கோள்காட்டி ”இப்படி ஹதீஸ் இருந்தும், ஹதீஸுக்கு மாற்றமாக நடக்கிறார்கள்” என்றாவது சொல்லுங்கள்.

பீடிகைக்காகவும், கிண்டலுக்காவும் பத்து இருபது வரிகளை பயன்படுத்தும் சில பிரச்சாரகர்கள், ஆதாரங்களுக்காக ஒரிரு வரியைக்கூட பயன்படுத்துவதில்லை. சுன்னத் ஜமாத் ஆலிம்கள் நம்மை பற்றி சொல்லும் ஆதாரங்களற்ற அவதூறுகளைப் போல பேசக்கூடாது. ”நஜ்ஜாத் பயளுக. நபியை மதிக்கமாட்டேன்றானுங்க. தொப்பி போடாம ஷைத்தான் மாதிரி நிற்குறானுங்க” என்று ஒற்றைவரியில் திட்டிக்கொண்டு போவார்களே தவிர, ஆதாரத்தை சொல்லி அந்த அடிப்படையில் குற்றம் சாட்டமாட்டார்கள்.

எனவே அவர்களைப்போன்று, ஒற்றை வரியில் தவறு என்று சொல்லிவிட்டுப் போகாமல், எதனால் தவறு என்று விளக்கிச் சொல்லுங்கள். ஒற்றை வரியில் உங்கள் நிலைப்பாட்டைத் தான் சொல்ல முடியும். எதையும் சாதிக்கவும் முடியாது. மக்களை திருத்தவும் முடியாது.

 

v தீர்வை சொல்லுங்கள்.

இறந்தவங்களுக்கு பாத்தியா கூடாது. கத்தம் கூடாது. இது கூடாது. அது கூடாது, என்று பட்டியல் போடும் பலர் எது கூடும். எதை செய்யவேண்டும் என்று விளக்குவது இல்லை. அல்லது ஒற்றை வரியில் மேம்போக்காக சொல்லிவிட்டு போய்விடுவார்கள். பாத்தியா ஓதக் கூடாது என்றால், வேறு என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதை ஹதீஸ் ஆதாரங்களோடு விளக்குங்கள்.

”பலர் தொழுகிறார்கள். தொழுகையில் கவனமே இருப்பதில்லை.” என்று பேசிவிட்டு போவதைவிட, தொழுகையில் கவனமாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லிப்பாருங்கள். உங்கள் குற்றச்சாட்டு பயனுள்ளதாக இருக்கும்.

கோர்ட்டில், நீதிபதி வந்தாலும் எழுந்துநிற்கக்கூடாது. என்று சொல்லும் அதே நேரத்தில்,  இதை தவிர்ப்பதற்கு, முன்னதாகவே நின்றுகொண்டிருங்கள். என்று யோசனை சொல்லுங்கள். சட்டத்தை சொல்லும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதுபோல, அதை எப்படி செயல்படுத்தவேண்டும் என்பதை விளக்கவேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. மாநபியின் நடைமுறையை கவனியுங்கள்.

 

حَدَّثَنِي إِسْحَقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ الْهُذَلِيُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ قَالَ قَالَ أَنَسٌ كُنْتُ مَعَ عُمَرَ ح و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنَّا مَعَ عُمَرَ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَتَرَاءَيْنَا الْهِلَالَ وَكُنْتُ رَجُلًا حَدِيدَ الْبَصَرِ فَرَأَيْتُهُ وَلَيْسَ أَحَدٌ يَزْعُمُ أَنَّهُ رَآهُ غَيْرِي قَالَ فَجَعَلْتُ أَقُولُ لِعُمَرَ أَمَا تَرَاهُ فَجَعَلَ لَا يَرَاهُ قَالَ يَقُولُ عُمَرُ سَأَرَاهُ وَأَنَا مُسْتَلْقٍ عَلَى فِرَاشِي ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا عَنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرِينَا مَصَارِعَ أَهْلِ بَدْرٍ بِالْأَمْسِ يَقُولُ هَذَا مَصْرَعُ فُلَانٍ غَدًا إِنْ شَاءَ اللَّهُ قَالَ فَقَالَ عُمَرُ فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا أَخْطَئُوا الْحُدُودَ الَّتِي حَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَجُعِلُوا فِي بِئْرٍ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى إِلَيْهِمْ فَقَالَ يَا فُلَانَ بْنَ فُلَانٍ وَيَا فُلَانَ بْنَ فُلَانٍ هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَكُمْ اللَّهُ وَرَسُولُهُ حَقًّا فَإِنِّي قَدْ وَجَدْتُ مَا وَعَدَنِي اللَّهُ حَقًّا قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُكَلِّمُ أَجْسَادًا لَا أَرْوَاحَ فِيهَا قَالَ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ غَيْرَ أَنَّهُمْ لَا يَسْتَطِيعُونَ أَنْ يَرُدُّوا عَلَيَّ شَيْئًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அபூதரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” – முஸ்லிம் (5120).  அண்டைவீட்டாருக்கு உணவு தரவேண்டும் என்று ஒற்றை வரியில் நபி கூறிவிட்டுச் செல்லாமல், அதை செயல்படுத்துவதற்கு மிக எளிய, ஒரு வழியையும் காட்டித் தருகிறார்கள். எனவே தனியாக நேரத்தை ஒதுக்கி, வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை யோசித்து, அதை மக்களுக்கு சொல்லுங்கள். உதாரணமாக)

  • வணக்கம் சொல்லாமலிருக்க நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் சொல்லுங்கள்.
  • பஜ்ரை தவறவிடாமல் இருக்க, இரவு சீக்கிரமே தூங்கிவிடுங்கள்.
  • அரபி ஓதிப்பழக, தலைமை சிடி வெளியிட்டிருக்கிறது. வாங்கிப்பாருங்கள்.
  • பாட்டு, நாடகம் பார்க்காமல் இருக்கமுடியலயா, கேபிளை கட் பன்னுங்க.

என்பது போன்ற தீர்வுகளை யோசித்து ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து மக்களுக்கு சொல்லுங்கள். உண்மையில் நல்ல பேச்சாளரிடமிருந்து வாழ்வில் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளுக்குரிய இஸ்லாமிய தீர்வு கிடைக்கிறது.

Ì உளவியல் ஆலோசனைகள் : மனோதத்துவ மருத்துவர்களாக இருக்கும் இஸ்லாமிய பேச்சாளர்களின் உரைகளில் ஒரு ஈர்ப்பு இருப்பதற்கு காரணம், அவர்களின் உரைகளில் பல்வேறு உளவியல் ஆலோசனைகள் இருக்கும். அவர்களிடமிருந்தும், ”மனஅழுத்தத்திற்கு இஸ்லாம் தரும் தீர்வு” என்ற ரமளான் தொடர் உரையிலிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி உங்கள் உரைகளில் பயன்படுத்துங்கள். பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கும், நடுத்தர வயதுள்ளவர்களுக்கும், பெரியவர்களுக்கும் உங்கள் உரை பிடித்துப்போவது உறுதி. கவனம். இதுபோன்ற செய்திகளை பயன்படுத்துபவர்கள், தரமான பேச்சாளர் என்ற தகுதியையும் பெறுகின்றனர்.

 

v தெளிவான நோக்கமின்றி, பொத்தாம் பொதுவாக பேசாதீர்கள்

பொத்தாம் பொதுவாக பேசுவது என்றால், ”அதெல்லாம் சரி. இப்ப என்னத்த சொல்ல வர்றீங்க?” என்று மக்கள் உங்களை பார்த்து கேட்கும்படியான பேச்சு. இதைத்தான் அறுவை(Bore) என்று சொல்லுவார்கள். அதாவது தீமைகள் செய்யக்கூடாது என்று எல்லோருக்கும் தெரியும். அதையே ஒருவர் அரைமணி நேரத்திற்கு பிளேடை போட்டு, ”தீமை செய்தால் தீமை கிடைக்கும். ஆகவே தீமைகளை தவிர்ப்பது நல்வர்களின் செயல். நல்லவர்களுக்கு தான் நன்மை இருக்கிறது. இன்றைக்கு மக்கள் நல்லவர்களாக இருப்பதில்லை” அப்டீ, இப்டீனு, தெளிவான நோக்கமின்றி, அந்த நேரத்தில் வாயில் வருவதையெல்லாம் பேசிக்கொண்டே இருந்தால், கேட்பவருக்கு தூக்கம் தான் வரும். தேவையில்லாத விளக்கங்களை தவிர்த்து, உங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாகவும், சுருக்கமாகவும் கூறுங்கள்.

 

حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ عَنْ أَبِيهِ عَنْ وَاصِلِ بْنِ حَيَّانَ قَالَ قَالَ أَبُو وَائِلٍ خَطَبَنَا عَمَّارٌ فَأَوْجَزَ وَأَبْلَغَ فَلَمَّا نَزَلَ قُلْنَا يَا أَبَا الْيَقْظَانِ لَقَدْ أَبْلَغْتَ وَأَوْجَزْتَ فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ فَأَطِيلُوا الصَّلَاةَ وَاقْصُرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنْ الْبَيَانِ سِحْرًا رواه مسلم1437

 

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிரிலிருந்து) இறங்கியபோது,“”அபுல் யக்ளானே!  செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். அறிவிப்பவர் : அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்). முஸ்லிம் (1578)

இதைத்தான் பேசப்போகிறோம் என்று தீர்மானிக்காமல் மனம் போன போக்கில் பேசிக்கொண்டிருந்தால் சுருக்கம் ஏற்படாது. தேவையற்ற வழவழா பேச்சுக்களை நீக்கினால் தான் சுருக்கம் ஏற்படும். எனவே குறிப்பெடுத்து உரையை நான்காகவோ, ஜந்தாகவோ பிரித்து பாயிண்ட் பாயிண்டாக பேசிப்பழகுங்கள்.

Ì கண்முன்னே உதாரணம் – தப்லீக் ஜமாத்காரர்கள் இதுபோன்ற நிறைய பிளேடு பேச்சுகளை கையில் ஸ்டாக் வைத்திருப்பதை பார்க்கமுடியும். ஆறு நம்பர் ஆறுநம்பர்-னு ஒரு ஆறாயிரம் தடவை சொல்லி, கேட்பவர்களை தாலாட்டும் வேலை செய்வதை பார்க்கலாம். பேச ஆரம்பிக்கும் போது, என்ன பேசப்போகிறோம் என்று அவருக்கும் தெரியாது. பேசி முடித்தபிறகு, என்ன சொன்னார் என்று, கேட்டவர்களுக்கும் தெரியாது. வாழ்க்கை முழுவதும், இருபது, முப்பது ஹதீஸ்களை வைத்துக்கொண்டு, பொத்தாம் பொதுவாக, எதையாவது அரைமணி நேரத்திற்கு பேசிக்கொண்டே இருப்பார்கள். இது போன்று பேசிப்பழகி விடாதீர்கள். முன்னேறவே முடியாது!

Ì சுருக்கமான பேச்சுக்கு ஒரு உதாரணம் – நபியவர்கள் இறந்த நேரத்தில், மக்களெல்லாம் குழப்பமாக இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரலி) ஆற்றிய உரை இஸ்லாமிய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது. அபூபக்கர் அவர்களின் உரையை பாருங்கள்.

”உங்களில், யார் முஹம்மதை வணங்கினாரோ அவர் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான்” என்று கூறி அற்புதமான இரண்டு குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி: 1242). சுருக்கமான பேச்சிற்கு அபூபக்கர் அவர்களின் மேற்கண்ட பேச்சு ஒரு உதாரணம்.
v ஒவ்வொரு வரியையும் முடியுங்கள்.

தனது பேச்சுத் திறமையை காட்டுவதற்காக, சிலர் பேசும் போது வரியை முடிக்கமால் இழுத்துக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக)

”பொய் சொல்வதை மக்கள் வெறுக்கவேண்டியதன் அவசியத்தை உணராமல், இருந்த காரணத்தினால், தற்போது அதன் விளைவை கண்கூடாக பார்க்கும் ஒரு இக்கட்டான, துர்பாக்கியமான, துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் நமது கண்ணால் காணக்கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது…”

என்பது போன்று, தேவையில்லாமல் இலக்கியத்திற்காக இழுத்து இழுத்து பேசுவார்கள். அரசியல்வாதிகளுக்கு, பட்டிமன்றத்தில் பேசுபவர்களுக்கு, இது தேவையான பேச்சு. இஸ்லாத்தை சொல்லி, புரியவைக்கவேண்டிய நமக்கு இது மாதிரியான பேச்சு எதற்கு? இதுபோல பேசினால், மிகப்பெரிய பேச்சாளர், மொழியை புரட்டி எடுக்கக்கூடியவர் என்று பெயர் கிடைக்கலாம். நம் கருத்தை தெளிவான முறையில் வெளிப்படுத்த இந்த ஜவ்வுப்பேச்சு பயன்படாது. இந்த நோய் உள்ளவர்கள், கண்டிப்பாக தங்களை திருத்திக் கொள்ளவேண்டும். அதுபோல சாமானிய மக்களுக்கு விளங்காத இலக்கிய வார்த்தைகளையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.

”நபி(ஸல்) அவர்களின் பேச்சு, அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தெளிவான வார்த்தைகளாக இருந்தது” என்று அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

தேவையில்லாமல் இழுப்பதையும், ஒரே பொருள் தரும் பலவார்த்தைகளை கொண்டு இழுப்பதையுமே தவறு என்கிறோம். இவ்வாறல்லாமல், சில நேரங்களில் சில பேச்சுக்கள், அவசியமான ஜந்தாறு வரிகளை கொண்டதாக இருக்கும். அதற்கு மேலும் கூட இருக்கலாம். உதாரணமாக,

”நம் உயிரிலும் மேலான தூதர், மதீனாவின் ஆட்சித்தலைவராக இருந்தபோதும், பலநாட்கள் உண்ண உணவில்லாமல், சலித்த கோதுமையை கண்ணில் கூட பார்க்காதவர்களாக, ஒரே ஒரு ஆடையை உடுத்தியவர்களாக, சொகுசான படுக்கை இல்லாமல், ஓலைப்பாயில் தூங்கியவர்களாக, இறுதிவரை வறுமையிலேயே வாழ்ந்து, தன்னுடைய தூதுப்பணியை செய்திருக்கிறார்கள்”

என்பது போன்ற நீளமான பேச்சுக்களில், (ஒரேபோருள் தரும்) தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. இதுவெல்லாம் தவறாகாது. எனினும் முதியவர்கள் சபையாக இருந்தால், விரும்புகிறவர்கள் இதைக்கூட இரண்டாக பிரித்து பேசலாம்.

 

v அல்லாஹ்வை பற்றி, மேலும் நபிமார்கள், சஹாபிகளை பற்றி பேசும் போது அதிக வார்த்தை கவனம் தேவை.

உங்கள் வாதத்தை வலுப்படுத்துவதற்காக அல்லது உரக்கச் சொல்வதற்காக ஒருபோதும் நபிமார்களுக்கோ, சஹாபாக்களுக்கோ மதிப்பு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடாதீர்கள். உதாரணமாக, ”இறுதி காலத்தில நபிகள் நாயகம் சோத்துக்கு லாட்டரி அடிச்சாங்க”, ”உமர் ஒரு டென்ஷன் பார்ட்டி” என்பது போல பேசுவது முறையல்ல.

அதுபோல, அல்லாஹ்வுக்கு தெரியாதா? அல்லாஹ் என்ன கிறுக்கனா? என்பது போன்றோ, நபிக்கு அறிவில்லையா? அவர் என்ன முட்டாளா? என்பது போன்றோ பேசி வாதத்தை எழுப்பாதீர்கள். உண்மையில் நீங்கள் அல்லாஹ்வையோ, நபியையோ தரக்குறைாக பேசவில்லை. ஆனாலும் பேச்சு ஒழுக்கமாக இல்லை. கேட்பவருக்கு நெருடலைத் தரும்.

சிந்தித்துப்பாருங்கள். கருணாநிதி மேடையில உட்கார்ந்திருக்கிறார். நம்மில் யாராவது கருணாநிதி என்ன கிறுக்கனா? அரசியல் தெரியாத மடையனா? என்று பேசுவோமா? கருணாநிதி கிறுக்கன் இல்லை என்பதே நமது கருத்தாக இருந்தாலும், பேச்சுமுறை சரியில்லை. வேண்டுமென்றே அவ்வாறு பேசுவதை வஞ்சகப்புகழ்ச்சி அணி என்று இலக்கணத்தில் அழைப்பார்கள். அரசர்களை நாசூக்காக திட்டுவதற்கு புலவர்கள் இவ்வாறு பயன்படுத்துவார்கள். நம்மவர்கள் ஒருபோதும் அப்படி பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தவும் மாட்டார்கள். இருந்தாலும்கூட கூடாது.

நாம் அல்லாஹ்வை மதிப்பு குறைவாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு, நமது கொள்கைக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் நமது கருத்தை புறக்கணிப்பதற்கும் இது காரணமாக அமைந்துவிடும். எனவே இதுபோன்ற பயன்பாடுகள் ஒருபோதும் கூடாது.

 

v புலவர்களின் செய்யுளை பயன்படுத்தாதீர்கள்.

பிறமத மேடைப்பேச்சாளர்கள் தங்களது உரைகளில் கண்டிப்பாக ஒரேஒரு திருக்குறளையாவது பயன்படுத்தவேண்டும். கம்பராமாயணத்திலிருந்து ஒரேஒரு வரியையாவது பயன்படுத்தவேண்டுமென்று விரும்புவார்கள். இது அவர்களின் நடைமுறை. நம்மவர்கள் சிலநேரம் திருக்குறளை பயன்படுத்துகின்றனர். இந்த கலாச்சாரம் தலையெடுப்பதை அனுமதிக்கக்கூடாது. நமது பயான்களில் ஒருபோதும் (பிறமத சாயம் கொண்ட) திருக்குறளையோ, வேறு செய்யுளையோ பயன்படுத்தாதீர்கள். எந்த கருத்தை வழியுறுத்துவதற்கும் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.

முஸ்லிமல்லாத சபையாக இருந்தால், ”திருக்குர்ஆனின் இந்த கருத்தைத்தான் பலர் சித்தர்களும் கொண்டிருந்தார்கள். திருவள்ளுவர் கூட இந்த கருத்தில் தான் இருந்தார். குர்ஆனின் இந்த கருத்துதான் அறிவுப்பூர்வமாகவும் சரியானது” என்று குர்ஆனை வழிகாட்டியாக அறிமுகப்படுத்தி, புலவர்களையும், சித்தர்களையும் பயனாளிகளாக அறிமுகம் செய்யுங்கள். அதாவது, இஸ்லாத்தின் கருத்தைத்தான் திருவள்ளுவரும் கொண்டிருந்தார் என்பதற்காக, திருக்குறளை பயன்படுத்தலாம். அல்லது அதிலுள்ள தவறை எடுத்துக்காட்டுவதற்காக பயன்படுத்தலாம்.

v தவறான கொள்கை உடையவர்களை உதாரணம் காட்டாதீர்கள்.

வெளிப்படையாக ஒருவர் ஷிர்க் வைக்கிறார், பித்அத் செய்கிறார் என்று தெரிகிறது. அவரிடத்தில் வேறு நல்ல குணங்கள் இருக்கிறது. அல்லது என்றால், அந்த வேறு நல்லகுணத்திற்காக, பயானில் இதுபோன்றவரை உதாரணம் காட்டுவதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நிர்பந்தம் ஏற்பட்டால் அவரை உதாரணம் காட்டிவிட்டு, இவர் தரீக்காவை சரிகாணக்கூடியவர், மத்ஹப்வாதி என்பதை தெளிவு படுத்திவிடுங்கள்.அதுபோல பிறமத வேதங்களிலிருந்தும் எந்த விஷயத்தையும் ஆதாரங்களாக பயன்படுத்தாதீர்கள்.

”வேதக்காரர்கள் தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம், (பொய் என) மறுக்கவும் வேண்டாம்” என்று கூறினார்கள். (புகாரி: 4485).

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لِأَهْلِ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ وَقُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا الْآيَةَ

வேதம் இறக்கப்பட்டவர்களின் செய்திகளையே (கறைபட்ட காரணத்திற்காக) பயன்படுத்தக்கூடாது எனும் போது, இந்துக்களுடைய இதிகாசங்களையும், புராணங்களையும் சொல்லி, நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம், வியாசமுனிவரின் முன்னறிவிப்புகள் என்பது போன்ற செய்தியை ஏற்கமுடியுமா? பிரபலமான இந்து பன்டிட்களே சொல்லிவிட்டார்கள் என்று சொல்லும் மேதைகளுக்கு, நபிகள் நாயகமே தடுத்துவிட்டார்கள் என்பது தான் பதிலாக இருக்கமுடியும். அதிகபட்சமாக, ”உங்கள் நம்பிக்கைப்படி இது என்ன?” என்று வேண்டுமானால் அந்த மதத்தினரிடம் கேட்கலாம், அவர்களது புத்தகத்திலிருந்து எதனையும் ஆதாரமாகவோ, ஏற்கத்தகுந்த செய்தியாகவோ எடுக்கக் கூடாது. அதை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவும் கூடாது.
v பிற ஜமாத்களை பற்றி, குறைசொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.

நம் ஜமாத்தின் நற்பணிகளை மக்களுக்கு எடுத்துச்சொல்வதும், பிறஜமாத்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் பிரச்சாரத்தின் ஒருபகுதிதான். அதே சமயம், பிற ஜமாத்கள் பற்றி, எதற்கெடுத்தாலும் குறைசொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. எத்தனையோ ஜமாஅத்கள் எவ்வளவோ நலப்பணிகளை செய்கின்றன. அதை விமர்சிக்கவேண்டிய அவசியம் இல்லை. மறுமையில் அவதூறு வழக்கில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எனவே நடுநிலையோடு பேசுங்கள். ஆனால், கொள்கை ரீதியாக அவர்கள் செய்யும், தவறுகளை கண்டிப்பாக, தேவையான இடத்தில் சுட்டிக்காட்டுங்கள்.

யாரையாவது பற்றி சர்ச்சைக்குறிய வகையில் பேசினால் பெரிய ஆளாகிவிடலாம். என்ற எண்ணத்தில் பேசுவது, மிகப்பெரிய வழிகேடு. பிற ஜமாத்களை திட்டுவதால், உங்களுக்கு யாரும் எந்த பதவியையும் தரப்போவதில்லை. மாறாக, குறைசொல்லி புறம்பேசித்திரிந்த தீமைதான் கிடைக்கும். அந்த ஜமாஅத்தை சேர்ந்த மக்கள் உங்கள் பேச்சையும், உங்களையும் வெறுப்பார்கள். திருந்த நினைக்கும் மக்களையும், திருந்த விடாமல் செய்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான். ”நம்பிக்கை கொண்டோரே!  நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்! ஒரு கூட்டத்தினர் மீது நீங்கள் கொண்டுள்ள பகை, நீதியாக நடக்காமலிருக்க, உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்” (அல்குர்ஆன்: 5:8)

எனவே குறையை அவசியமானால் மட்டும் சொல்லுங்கள். பரபரப்பிற்காக சொல்லாதீர்கள். உணர்வுபூர்வமான சமுதாய செய்திகள், இஸ்லாமிய விரோதிகளின் சதித்திட்டங்கள் என மற்ற எதைவேண்டுமானாலும் தேவைப்பட்டால், பரபரப்பிற்காக சொல்லிக்கொள்ளுங்கள், தவறில்லை. பிற ஜமாத்களை பற்றி விளம்பரத்திற்காகவோ, உங்களை ஜமாத்தின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொள்வதற்காகவோ சொல்லாதீர்கள்.

v சினிமா காமெடிகளை பயன்படுத்தாதீர்கள்.

நகைச்சவைகள் ஏராளமானவை இருக்கிறது. சினிமாவில் வரும் நகைச்சுவையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. எனவே முடிந்தஅளவு அவற்றை தவிர்த்துவிடுங்கள். அவற்றை பயன்படுத்தினால், (இன்றைய கேடுகெட்ட) சினிமாவை நாம் அங்கீகரிப்பது போல் ஆகிவிடும்.

போதனை செய்யும் இவரே அதை பார்க்கிறார். நாம் பார்த்தால் என்ன தவறு? என்று மக்கள் வழிகெடவும் வாய்ப்பு உள்ளது. சினிமா காமெடிகள் வேண்டாம் என்பதற்குறிய முதன்மை காரணம் இதுவே. எனவே, நகைச்சுவை வேண்டுமெனில், நகைச்சுவை புத்தகங்களிலும், இணையதளத்திலும், பட்டிமன்றங்களிலும் நிறைய உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள்.

v நாகரீகமான நகைச்சுவை.

நகைச்சுவையை பயன்படுத்தும் போது, கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், நகைச்சுவை நாகரீகமானதாக இருக்கவேண்டும். முகம் சுளிக்கும் வகையில் பேசிவிடாதீா்கள்.  முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் உங்களது பேச்சை கவனிக்கிறார்கள். அநாகரீகமாக பேசிவிடாதீர்கள். மற்ற நேரங்களை விட, நகைச்சுவையில் நம்மையும் அறியாமல் இது வந்து விடும். கவனம் தேவை. அதுபோல, இரட்டை பொருள் தரும் நகைச்சுவைகளையும் பயன்படுத்தாதீர்கள். இளைஞர்கள் சிரிக்கலாம். மற்றவர்கள், உங்களை கேவலமாக எடைபோடுவார்கள். உங்கள் பேச்சு தான் உங்களுக்கு கண்ணியத்தை பெற்றுத்தரும். எனவே சிந்திக்காமல் செயல்படாதீர்கள்.  


v
முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

சாதாரணமாக ஒருவருக்கொருவர் தனியாக பேசிக்கொள்ளும் போது, பயன்படுத்தும் வார்த்தைகளை விட, அதிக கண்ணியமான வார்த்தைகளைத் தான், பொதுமக்கள் முன்னிலையில் பயன்படுத்தவேண்டும். இதற்கு சபை நாகரீகம் என்று பெயர்.
சபை நாகரீகத்தை தாண்டிய பேச்சை, ஒருபோதும் பழக்கப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

அதுபோல, நடிகைகளின் பெயர்களை, கேணப்பயலே, நாயே, நாசமாபோனவனே என்பது போன்ற தரம்குறைந்த வார்த்தைகளை பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக, ஜும்மா மேடையில் இதுபோன்ற வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள்.

அதுபோல. பெண்கள் பயானில், பேசும் போது, அவர்கள் முகம் சுளிக்காத வகையில் பேசுவது அவசியம், உதாரணமாக,  ”டூ பீஸ் போட்டு ஆடுவாங்க… … சேலை விலகும். இடுப்பு தெரியும், ஜிங்குஜிங்குனு ஆடுவாங்க” என்பது போன்ற பேச்சுக்கள், நெருடலை ஏற்படுத்தும். இது போன்ற பேச்சுக்களை, குறிப்பாக பெண்கள் பயானில் பேசிவிடாதீர்கள்.

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ الْمُنْكَدِرِ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقَالَ ائْذَنُوا لَهُ فَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ أَوْ بِئْسَ أَخُو الْعَشِيرَةِ فَلَمَّا دَخَلَ أَلَانَ لَهُ الْكَلَامَ فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ مَا قُلْتَ ثُمَّ أَلَنْتَ لَهُ فِي الْقَوْلِ فَقَالَ أَيْ عَائِشَةُ إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ مَنْ تَرَكَهُ أَوْ وَدَعَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ

நபியவர்கள் கூறினார்கள்: ”….ஆயிஷாவே! யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர்” (புகாரி: 6131)

 

Ì விதிவிலக்குகள் – சில அனுபவ பேச்சாளர்கள், ஒருசில கேள்விபதில் நிகழ்ச்சிகளில் இதுபோன்று பேசுவது, விபச்சாரம், சினிமா போன்வற்றின் விபரீதத்தை புரிய வைப்பதற்கும், பர்தாவின் முக்கியத்துவத்தை விளக்கவதற்கும் தான். மிகவும் அரிதாக பயன்படுத்தவேண்டிய இதுபோன்ற பேச்சுக்களை தேவையில்லாமல் வழமையான பேச்சாக பழக்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

 

”தன் வாந்தியை தானே தின்னும் நாய்” என்பது போன்ற பேச்சுக்களை நபிகள் நாயகம் ஒருபோதும் பேசியதில்லை. எனினும் அன்பளிப்பை திரும்பப் பெறுவதன் கடுமையை உணர்த்தும் போது மட்டும், இப்படி கூறியிருக்கிறார்கள். (புகாரி: 2622) இது ஒரு விதிவிலக்கு. எனவே, டூபீஸ், ஜட்டி போன்ற வார்த்தைகளை அரிதிலும் அரிதாக ஆக்கிக் கொள்ளுங்கள். விதிவிலக்குகள் விதியாகாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
v நீ, போ, வா என்று எப்போது பேசலாம்??

சிலருக்கு மேடையும், மைக்கும் கிடைத்துவிட்டால் போதும். போடி.. வாடி.. அவளே.. இவளே… என்று நாறடித்துவிடுவார்கள். யோசித்துப்பாருங்கள். நீங்கள் பேசுவது, பிறரை திட்டி, உங்களது கோபத்தை தணித்துகொள்வதற்காகவா? அல்லது அறிவுரைகளை சொல்லி மக்களை திருத்துவதற்காகவா?

சிந்தித்து பாரடா நாயே! என்றால் சிந்தித்துப் பார்ப்பாரா? கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு, திருந்து என்று சொன்னால் எவரும் திருந்தமாட்டார். கனிவான வார்த்தைகளும். சிந்திக்கத்தூண்டும் வாதங்களும் தான் ஒருவரை திருத்தும். மாநபியின் குணத்தை பற்றி, நபியோடு பத்தாண்டு காலம் இருந்தவர் சொல்வதை பாருங்கள்.

 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا هِلَالُ بْنُ عَلِيٍّ عَنْ أَنَسٍ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا لَعَّانًا وَلَا سَبَّابًا كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ

 

அல்லாஹ்வின் தூதர், கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, திட்டுபவராகவோ இருக்கவில்லை. (ஒருவரை அதிகபட்சமாக) கண்டிக்கும் போது கூட, ”அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரி (6046)

எனவே அறியாமையில் கிடக்கும் ஜமாத்தார்களை சாடும் போது, வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள். வாதங்களால், சாடப்படவேண்டிய ஜமாத்தார்களை ஒருபோதும், போடா, போடி என்று வார்த்தைகளால் சாடிவிடாதீர்கள். ”போடா” என்று சொல்லும்போது, நம் ஆதரவாளர்கள் சந்தோஷப்பட்டு கைதட்டலாம்.

ஆனால், யார் திருந்தவேண்டும் என்பதற்காக பேசினீர்களோ, அவர்கள் நீங்கள் சொன்ன கருத்தை சிந்திப்பதற்கு பதிலாக, ”சின்னப் பையன் நம்மலயெல்லாம் போடான்னு சொல்லிட்டான்” என்று ஆதங்கப்படுவார்கள். இது அவர்களை திருந்த விடாமல் தடுக்கும். மக்களை விரட்டியடிப்பது நம் நோக்கமல்ல. திருந்தவைத்து அரவணைப்பதே நம் நோக்கம்.

Ì அதே சமயம், சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தவர்களை, நமது மார்க்கத்தை வேண்டுமென்றே கேவலப்படுத்தியவர்களை சாடும் போது அதுபோன்று பேசிக்கொள்ளுங்கள். அநீதம் இழைக்கப்பட்டவரைத்தவிர (வெறெவரும்) தீய சொல்லை பகிரங்கமாகப் பேசுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (அல்குர்ஆன்: 4:148)

F எனவே, நரந்திரமோடி, அத்வானி, ஜார்ஜ்புஷ் போன்ற ஷைத்தான்களை சாடும்போது, விரும்பிய படி பேசிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் பேசுவதை அவர்கள் கேட்பதில்லை. மக்களுக்காக பேசுகிறீர்கள்.

F அதுபோல முகம் இல்லாத, கருத்து எதிரியை சாடும் போதும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். உதாரணமாக, பேய் இருக்கிறது என்று சொல்லும் மடையர்களை பார்த்து கேட்கிறேன்…. ஏன்டா உனக்கு அறிவிருக்கா? என்பது போன்ற பேச்சுக்கள், எந்த ஜமாஅத்தையோ, முன்னால் உள்ள மக்களையோ பார்த்து பேசுவது அல்ல. இதை தவறென்று சொல்லமுடியாது.

v சட்டப்பிரச்சனைகளை உருவாக்கிவிடாதீர்கள்.

பொதுமேடையில், தெருமுனை பிரச்சாரங்களில், எந்த கருத்தை சொல்வதாக இருந்தாலும், நாம் வாழும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு பேசுங்கள். தற்கால முதல்வரையோ, பிரதமரையோ, நீதிபதிகளையோ தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டு வரம்புமீறி பேசிவிடாதீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்சனை, ஜமாத்திற்கும் பிரச்சனை. வருங்காலங்களில், அனுமதி மறுக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். எனவே சட்டரீதியாக கவனமாக பேசுங்கள். கட்டுப்பாட்டை மீறி வார்த்தைகள் தவறாக வந்துவிட்டால், வேறு வார்த்தைகளை கொண்டு சமாளித்துவிடுங்கள்.

உதாரணமாக) போலீஸார் எங்களை அடக்குமுறை செய்தால், மதக்கலவரங்கள் தான் ஏற்படும். என்று ஆவேசத்தில், பேசிவிடுகிறீர்கள், என்றால்,
உடனே சுதாரித்துக்கொண்டு, ”கலவரங்கள் நல்லதா? சட்டத்திற்கு உட்பட்டதா? அமைதிக்கு உகந்ததா? இதனால் தான் நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகிறோம். அதை மட்டுமே ஆதரிக்கிறோம்” என்று உல்டா செய்துவிடுங்கள்.

Ì கவனம் – ஜந்துநிமிட ஆவேசப்பேச்சுக்காக, ஆறுமாதம் உள்ளே இருக்கமுடியாது. அதனால் நம் தாஃவா பணிகள் பாதிக்கப்படும். கவனமாக இருங்கள். மேலும், வாடகைக்கு வாங்கிய மைக்கையும், ஸ்பீக்கரையும் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற அச்சத்தில் நிர்வாகிகள் இருப்பார்கள். அவர்களது நிலையையும் கருத்தில் கொண்டு பேசுங்கள்.
v மென்மையாக அல்லது ஆக்ரோஷமாக பேசவேண்டிய இடங்கள்.

அமைதியாக பேசுவது ஒரு அழகான பயான் முறை. ஆனால் தேவைப்படும் இடத்தில் ஆக்ரோஷமாக பேசியாகவேண்டும். கடுமையான குர்ஆன் வசனங்களை பயன்படுத்தும் போது, அதன் வீரியத்தோடு சொல்லவேண்டும்.

”அவனை பிடியுங்கள். எழுபது முழ சங்கிலியால் கட்டுங்கள்” என்ற வசனத்தை சொல்லும் போது, கடுமையான உச்சரிப்போடு சொல்லவேண்டும். இதன் முக்கியத்துவத்தை விளங்க, மேற்கண்ட வரியை மென்மையாக சொல்லிப்பாருங்கள். பொருத்தமில்லாமல் இருக்கும். எனவே, தேவையான வரிகளை கடுமைாக பேசுங்கள். மேடைப்பேச்சாக இருந்தால், இரு பேச்சாளர்கள் இருந்தால் முதலில் பேசுபவர் அமைதியான மென்மையான பேச்சை தந்துவிட்டு, இரண்டாமவர் ஆக்ரோஷமான பேச்சை வெளிப்படுத்தலாம்.  

Ì வெட்ககுணத்தை வழியுறுத்தும் பயானுக்கு ஆக்ரோஷம் தேவையில்லை. நபியை இழிவுபடுத்திய செயலை கண்டிக்கும் கண்டனப் பேச்சிற்கு மென்மை தேவையில்லை. ஆனால் இன்று பிரச்சாரகர் எப்படி பெயர் வாங்கியிருக்கிறாரோ, தொடர்ச்சியாக அப்படியே அனைத்து உரைகளையும் செய்வதை பார்க்கிறோம். இது தவறு. நபியின் நற்குணம் என்ற தலைப்பில் பேசும் போது கூட வெறிப்பிடித்தது போல கத்துகிறார். இது அவரது அபிமானிகளுக்கு உற்சாகமாக இருக்கலாம். அனைத்து தரப்பு மக்களையும் கவராது.

ஒரு நகைச்சுவை நினைவிற்கு வருகிறது. ஒரு ஆசிரியர், மாணவனை அடிஅடி என்று அடித்து நய்யப்புடைத்து விட்டு, அந்த மாணவனை பார்த்து ”இனி மேல் எல்லார்டையும் அன்பா பழகனும்!” என்று சொன்னாராம். அதுபோல, காட்டுகத்து கத்தி மென்மையை பற்றி உரை நிகழ்த்தக்கூடாது.

v பொருத்தமில்லாத ஹதீஸை பயன்படுத்தாதீர்கள்

ஒரு அறிவுரையை சொல்லிவிட்டு, அதை விளக்கப் பயன்படுத்தப்படும் ஹதீஸ்கள் கண்டிப்பாக அந்த அறிவுரைவுக்கு பொருந்தமானதாக இருக்கவேண்டும். சம்பந்தம் இல்லாத ஹதீஸாக இருக்கக்கூடாது. உதாரணமாக, இவரது பேச்சை கவனியுங்கள்.

”நம்மை இணைவைப்பில் தள்ளுவது தான் ஷைத்தானின் முதல் பணி, நாம் அவனுக்கு கட்டுப்படக்கூடாது”
”நபிகள் நாயகம் சொன்னார்கள். ஷைத்தான் ஒவ்வொன்றாக வந்து தான் செய்த தீயசெயலை பற்றி சொல்லும். அப்போதெல்லாம் மகிழ்சியடையாத இப்லீஸ், கணவன்-மனைவியை பிரித்தேன் என்று சொல்லும் போது மகிழ்சியடைகிறான். பார்த்தீர்களா? எனவே தர்காவிற்கு போகக்கூடாது”          

என்று ஒருவர் பேசுகிறார். மேற்காணும் பேச்சில், அவர் மேற்கோள் காட்டிய ஹதீஸ், அவர் சொல்லும் அறிவுரையை போதிக்கும் ஹதீஸ் அல்ல. கவனமாக கேட்பவர்களுக்கு நீங்கள் பேசுவது உளரலாகத் தெரியும். பலஆயிரங்கள் செலவு செய்து ஏற்பாடு செய்யப்படும் பயானில், இது போன்று பேசினால், உங்கள் பேச்சு உள்ளத்தில் ஒட்டாது. பொருளாதாரம் வீணடிக்கப்பட்டதற்கு நீங்கள் தான் பொறுப்பு. எனவே பொறுப்பை உணர்ந்து, பொருத்தமான ஹதீஸை தேடிஎடுத்து பயன்படுத்துங்கள்.

Ì சிலநேரம் அறிவுரைக்கு தொடர்புடைய ஹதீஸைத்தான் சொல்லியிருப்பார். ஆனால் அந்த ஹதீஸிலிருந்து அந்த அறிவுரை எப்படி பெறப்படுகிறது என்று மக்களுக்கு சரியாக விளங்காது அல்லது பேச்சாளர் சரியாக விளக்கியிருக்க மாட்டார். இதுவும் தவறு. சொல்லும் அறிவுரைக்கும், பயன்படுத்திய ஹதீஸிற்கும் உள்ள தொடர்பு எளிதாக புரியாவிட்டால், அதை விளக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

v
தவறான பொருள் தருவது ஏற்கமுடியாத செயல்

பொருத்தமில்லாத வசனத்தை பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, அரபி வனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். உதாரணமாக, இந்த பேச்சை பாருங்கள்,

”லகத் ஹலக்னல் இன்ஸான ஃபீ அக்ஸனி தக்வீம், மனிதனை அறிவுள்ள படைப்பாக படைத்தோம்” என்று அல்லாஹ் கூறுகிறான்….” என்று ஒருவர் பேசுகிறார்.

மேற்கண்ட (95.4) வசனத்தின் பொருள் அவர் கூறியது அல்ல. ”மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்” என்பதே அதன் பொருள்!  இதுபோல எந்த வசனத்தையும் அது கூறாத கருத்தை சொல்வது ஏற்கமுடியாத செயல். நீங்கள் பேசும் செய்திகளுக்குத் தகுந்த குர்ஆன் வசனம் தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள். அரபி வசனம் சொல்லவேண்டும் என்பதற்காக, தெரிந்த வசனத்தை சொல்லிவிட்டு, அதன் பொருளை வளைப்பது ஒருபோதும் கூடாது.

Ì ஒருவேளை நீங்கள் சொல்லும் பொருளை அந்த வசனத்திலிருந்து எடுக்கமுடியும் என்று இருந்தால், முதலில் குர்ஆன் ஆயத்தைச் சொல்லி அதன் நேரடி மொழிபெயர்ப்பை சொல்லிவிட்டு பிறகு, உங்களின் விளக்கத்தை சொல்லுங்கள். யாருக்கும் குழப்பம் ஏற்படாது.

 

v மட்டுப்படுத்தாதீர்கள். உற்சாகப்படுத்துங்கள்.

மக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசவேண்டியது ஒரு பேச்சாளரின் கடமை. எனவே, ”அநியாயக்காரர்கள் வாழும் நாட்டில், நாம என்ன பண்ணமுடியும். அடிச்சா வாங்கிக்கொள்ளவேண்டியது தான், பிறமத மக்கள் பெரும்பான்மையாக வாழும் போது சகிச்சிட்டுதான் போகனும்” என்பது போன்ற அவநம்பிக்கையான பேச்சுக்களை ஒருபோதும் பேசாதீர்கள்.

பத்து பேர் மட்டுமே இருந்து ரோட்ல ஒரு போராட்டம் நடத்தும் போது கூட, அரசாங்கத்தைப் பார்த்து ”எங்கள யாருனு நெனச்ச. நாங்க நினைச்சா இந்தியாவோட தலையெழுத்தையே மாற்றிக்காட்டுவோம்” என்று வீரமாக பேசுவார்கள். அப்படி பேசினால் தான் இருக்கும் பத்துபேருக்கு உற்சாகமாக இருக்கும். எனவே போராட்டக்களமாக இருந்தாலும் சரி, அரங்கமாக இருந்தாலும் சரி ஒருபோதும் மட்டுப்படுத்தி பேசாதீர்கள். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று பேசுங்கள்.

உதாரணமாக) ”மத்ஹப் பள்ளிகள் எல்லாம் மிகவிரைவில் தவ்ஹீத் பள்ளிகளாக மாறும். பாபர் பள்ளியை இடித்த இந்துதுவா சக்திகளை அல்லாஹ் அழிப்பான். அமெரிக்காவை ஒரு ஏகத்துவவாதி ஆளும் நாள் மிகவிரைவில் வரும்” என்பது போன்ற நம்பிக்கையூட்டும் பேச்சுக்களை பேசுங்கள். சகுனம் பார்ப்பதை தடைசெய்த இஸ்லாம், நல்லவார்த்தைகள் கேட்பதை, நற்குறி என்று பெயரிட்டு அதனை மட்டும் அனுமதிக்கிறது.

”பறவை சகுனம் என்பது கிடையாது. (எனினும்) சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். ”நற்குறி என்பதென்ன?” என்று மக்கள் கேட்டதும், ”(நற்குறி என்பது) நீங்கள் செவியுறும் நல்ல சொற்கள் தான்” என்று பதிலளித்தார்கள். (புகாரி: 754). நல்ல நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மனிதனை உற்சாகப்படுத்தும் என்ற காரணத்தினாலேயே இஸ்லாம் இதனை அனுமதிக்கிறது.

Ì நபி(ஸல்) அவர்கள் நோயாளியை சந்திக்கப்போனால், அவர் எந்த நிலையில் இருந்தாலும், அல்லாஹ் குணம் அளிப்பான் என்று உற்சாகப்படுத்தினார்களே தவிர, ”நீ பிழைக்கிறது டவுட் தான்!” என்று சொல்லவில்லை. எனவே, மக்களை உற்சாகப்படுத்தி பேசுவது, பேச்சாளர் கவனிக்கவேண்டிய மிகமுக்கியமான விஷயம்.

v பிற பேச்சாளர்களின் கருத்துகளை சொல்லும் போது,

சில நேரங்களில், பிற பேச்சாளர்களின் ஒருசில கருத்துக்களை எடுத்து, பேசவேண்டியிருக்கும். அதுபோன்ற நேரங்களில், பிறரது கருத்தை படித்து பேசுகிறோமே என்று வெட்கப்பட்டு, அவருடைய பெயரை கண்டிப்பாக சொல்லியாகவேண்டும் என்று நினைக்கவேண்டியதில்லை. ஏனெனில் யாருடைய கருத்தையும் பிரதிபலிக்காமல், எதையுமே பேசமுடியாது.

அதே நேரத்தில், அந்த கருத்து சமுதாயத்திற்கு அவர் மூலமாக கிடைத்தை நினைவுகூரும் பொருட்டு, அவர்களது பெயரை சொல்லி, பிறகு அந்த கருத்தை சொல்வதும் குற்றமாகாது. இந்த விதிகள், நம் காலத்தில் வாழும் அறிஞர்களுக்கு மட்டுமல்ல, முன்னர் வாழ்ந்த இமாம்கள், நன்மக்களுக்கும் பொருந்தும். எனவே அவர்களது பெயர்களை குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ பிறரது கருத்துக்களை தாராளமாக உங்கள் பயானில் பயன்படுத்துங்கள்.

பிறருடைய கருத்தை காப்பி அடியுங்கள். அதில் தவறில்லை. ஆனால், பிறருடைய ஸ்டைலை காப்பி அடிக்க முயற்சிக்காதீர்கள். அது தேவையற்றது. அதே நேரம், யாரை அதிகமாக விரும்புகிறோமோ, கவனிக்கிறோமோ, அவர்களது ஸ்டைல் லேசாக ஒட்டிக்கொள்ளும். அதைப்பற்றியும் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. 

Ì உங்களுக்கு தெரியுமா? – யரையெல்லாம் மிகப்பெரிய அறிஞர் என்று நினைக்கிறீர்களோ, அவர்களும், கடந்தகால ஹதீஸ் கலை இமாம்கள், இன்றைய, உலகலாவிய பேச்சாளர்களின் கருத்தைகளையும் வாதங்களை பிரதிபலித்துத் தான் பேசுவார்கள். எல்லா கருத்துக்களையும், ஒவ்வொருவரும் தனித்தனியாக சிந்தித்து பேசவேண்டும் என்பது சாத்தியமற்றது. முக்கியமாக தேவையற்றது.

v ஆடியன்ஸாக இருந்து சரிபாருங்கள்.

எந்த செய்தியையும், உங்கள் நிலையிலிருந்து பேசாதீர்கள். கேட்கும் மக்களுக்கு புரியவேண்டும் என்ற கோணத்தில் அதாவது மக்களின் மொழியின் பேசுங்கள். உதாரணமாக)

¢ மாற்றுமத மக்கள் இருக்கும் ஒரு சபையில், ”நாம் ஈமானோடு மவுத்தாவதற்கு முஸ்தீப் எடுக்கவேண்டும்” என்று பேசினால் அவர்களுக்கு ஒரு வார்த்தை கூட புரியாது. புரியவில்லை என்று சொல்ல வெட்கப்பட்டு தலையை ஆட்டிவிட்டு போய்விடுவார்கள்.

¢ அதுபோல பாமர மக்கள், பெண்கள் இருக்கும் சபைகளில், அவர்கள் நிலைக்கு இறங்கி, எளிமையாக பேசுங்கள்.  பலவருட தவ்ஹீத்வாதிகளிடத்தில் பேசுவது போன்று பேசாதீர்கள். ”அல்பானியின் ஆய்வுக்கு மாற்றமாக இருந்தாலும், இந்த ஹதீஸ் ளயீஃபானது. நபியின் ஹஜ்ஜத்துல் விதா ஹதீஸ்படி ஹக்குகளை பேணி இக்லாஸோடு நடக்கவேண்டும்” என்று ஹதீஸ்கலை அறிஞர் ரேன்ஜுக்கு பேசாதீர்கள்.

¢ வயதான பெண்கள் இருக்கும் சபையில் ஒருவர் பேசுகிறார்.
”ஏ என்ற மனிதனிடமிருந்து பி என்ற மனிதன் கடன் வாங்கினால், அதை சி அடைக்கலாம். சி என்பவர், பி-யின் மகனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று பேசுகிறார். மூளை குழம்பி விடுவார்கள். யாரிடத்தில் பேசுகிறோம், அவர்களுக்கு எந்த அளவுக்கு புரியும் திறன் இருக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை.

அப்துல்லாஹ்விடம் பாத்திமா கடன் வாங்கினால், அந்த கடனை பாத்திமாவின் மகன் அடைக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் அடைக்கலாம். என்று சொல்லுங்களேன். மக்களுக்கு புரிவதும், அவர்கள் அதை எடுத்து நடப்பதும் தான் நம் லட்சியமே தவிர, நம்முடைய அறிவை வெளிப்படுத்துவது நம் இலட்சியம் இல்லையே.

¢ சுவர்க்கத்தில் தேன் ஆறு ஓடும். பால்ஆறு ஓடும். எவ்வளவு வேன்டுமானலும் பால் அருந்தலாம். என்று பேசும்போது, பாலை கண்டாலே ஓடுறவனும் இருப்பான் என்பதை மனதில் வைத்து, பேசுங்கள். சுவனத்து பால் என்பது இங்கு உள்ளது போன்றதல்ல. என்பதையும் சேர்த்து விளக்குங்கள். இந்த உதாரணம் இதற்கு மட்டுமல்ல. எதைப்பேசினாலும் அதை ஆடியன்ஸ் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்து செயல்படுங்கள்.

Ì ஒரு வரி போதும் – முன்பு ஒருமுறை, ”குர்ஆனை மெய்ப்பிக்கும் ஒரு செய்தி, ஆஸ்திரேலியாவின் ABC என்ற கிருஸ்தவ தொலைகாட்சியில் ஒளிபரப்பானது” என்று சொல்லிவிட்டு, ஜும்மா மேடையிலிருந்து இறங்கும் போது, ஒரு சகோதரர் கேட்கிறார், ”நீங்க, BBC என்பதை தானே தவறுதலாக ABC என்று சொன்னீங்க” என்று. எனவே பேசும்போது, ”(அனைவருக்கும் தெரிந்த) BBC இல்ல. ABC” என்று ஒரு வரியை அதிகப் படுத்தியிருந்தால், மக்கள் தவறாக புரிந்திருக்கமாட்டார்கள். இது போன்றதையும் நினைவில் வைய்யுங்கள்.

 

v சரியான செய்தியை தவறாக புரிந்துகொள்ளாத வகையில் பேசுங்கள்.

”மறுமையை நினைவுபடுத்த, கப்ருஸ்தானுக்கு போங்க. உங்க குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு போங்க”. என்று பேசும் போது தர்காவுக்கு போகலாம் என்று விளங்கும் மனிதனும் இருப்பான். எனவே எதைப்பேசினாலும் அதை ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று யோசித்து பேசுங்கள். குறிப்பாக, சட்டங்களை, இஸ்லாமிய கொள்கைகளை, தவறாக புரிந்து கொள்ளாத வகையில் பேசுங்கள்.

உதாரணமாக) வரதட்சனை என்ற தலைப்பில் ஒருவர் பேசுகிறார். ”வரதட்சனை கொடுமையின் காரணமாக இன்றைக்கு பலர் வெட்கத்தை விட்டு, பள்ளிவாசலில் பிச்சை எடுக்கின்றனர். மான ரோஷம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே வரதட்சனை வாங்காதீர்கள்….”
இந்த உரையை கேட்கும் ஒருவர், பிச்சை எடுப்பதைவிட, தற்கொலை செய்துகொள்வது தான் மானம் உள்ளவர்களின் சரியான செயல். என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Ì கவனம் தேவை – இஸ்லாத்தில், தவறுதலாக, கவனமின்றி ஒருவரை கொலை செய்தால், நம் மீது கொலைக்குற்றம் ஏற்படாது. எனினும் அதற்காக நஷ்டஈடு தரவேண்டும். அதுபோல, வேண்டுமென்றே நாம் அவ்வாறு பேசாதவரை இறைவனிடத்தில் குற்றவாளி ஆகமாட்டோம். எனினும், கவனமில்லாமல் பேசிய குற்றத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே வார்த்தைகளில் அதிக கவனம் தேவை.

 

v சிந்தித்து பேசுவதே தீர்வு

பொதுவாக எதைப் பேசுவதற்கு முன்னரும் சிந்தித்து பேசுவது தான் மேற்கண்டது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு. திருமண உரையில் நின்று கொண்டு, மணமக்களைப் பார்த்து ”இன்றைக்கே தலாக் ஆனாலும் நீங்கள் கவலைப் படக்கூடாது. நாளைக்கே இந்தப் பெண் ஓடிப்போனாலும் அதற்காக வருதப்படக்கூடாது” என்று ஒருவர் பேசினால் என்னவாகும்?

இது எப்படி நகைப்பிற்குரியதாக இருக்குமோ, அதுபோல சிந்திக்காமல் பேசினால் ஒன்று நகைப்பிற்குரியதாக இருக்கும் அல்லது மக்களுக்கு பயன்படாத பேச்சாக இருக்கும். சிந்திக்கவேண்டும் என்றால், சிலர் மண்டையின் மேற்பரப்பில் சிறிது சொறிந்துகொள்வதோடு சரி, உண்மையில் சிந்திப்பது கிடையாது.

எந்த விஷயம் நமக்கு தேவையாக இருக்குமோ, எதில் நாம் அக்கறை செலுத்துகிறோமோ அதைப் பற்றி தான் சிந்திப்போம். எனவே, மார்க்கத்தில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள். ஷிர்க்கில், பித்அத்தில் மூழ்கிக்கிடக்கிடக்கும் மக்களைப் பற்றி கவலைப்படுங்கள். வரதட்சனை கொடுக்கமுடியாமல் தற்கொலை செய்யும் தந்தைகளை நினைத்து கண்ணீர் சிந்துங்கள். சிந்தனை ஊற்று தானாக பெருக்கெடுத்து ஓடும்.

 

v உங்கள் குறைகளை நீங்களே பகிரங்கப் படுத்தாதீர்கள்.

ரொம்ப சரியா பேசுறோம்-னு நெனச்சுட்டு சிலபேர், ”நானே பலநேரம் தூங்கிடுறேன். பஜ்ர் தொழுகிறதில்லை… என்ன பன்றது?” என்பது போன்று பேசிவிடுவதுண்டு. இது போன்ற பேச்சை ஒருபோதும் பேசாதீர்கள்.

பிறருக்கு உபதேசம் செய்யும் இவரே தொழுகையை விடுகிறாரா! அப்ப எல்லாருமே இப்படித்தான். என்று நினைத்து, மக்கள் தொழுகையை விடுவதற்கு, பலதீமைகள் செய்வதற்கு வாய்ப்புள்ளது. உங்களுக்கும் மதிப்பிருக்காது, உங்களின் பேச்சுக்கும் மதிப்பிருக்காது. எனவே,

 

F அந்த சினிமா காமெடி-ல பார்த்தேன்.
F கோபம் இயல்பு தான். நானே, என் மனைவியை கண்டமாதிரி திட்டிடேன்.

F ஆபாசமான உடையை பார்த்தா, எனக்கே ஒருமாதிரி தான் இருக்குது.
F நானே சில நேரம் பொய் பேசிடுறேன். புறம் பேசிடுறேன்.…

 

என்பது போன்று பேசிவிடாதீர்கள். தவறுகள் இல்லாத மனிதன் யாருமில்லை. பிரச்சாரகரும் கூட ஒருசில நேரம் ஏதாவது தவறு செய்யலாம். அதை அல்லாஹ்விடத்தில் பகிரங்கப்படுத்துங்கள். மன்னிப்புதேடுங்கள். மக்களிடத்தில் நீங்களாகவே வெளிப்படுத்தாதீர்கள்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, ”இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான். புகாரி (6069)

அதுபோல, உங்களை நீங்களே மட்டம் தட்டும் பேச்சையும் பேசாதீர்கள்.

F நான் சொல்றத நீங்க நம்பனும்னு கட்டாயம் இல்லை.…
F மற்றமற்ற ஆலிம்களுக்கு முன்னால் நான் ரொம்ப சின்ன ஆள்.
F எனக்கு அரபி தெரியாது, முழுக்குர்ஆனையும் நான் படிச்சதில்லை.
F நான் ரொம்ப கடகடனு பேசுறேன்னு நினைக்கிறேன்.
F எனக்கு தெரிஞ்சது இந்த இரண்டு வசனம் தான்…

என்பது போன்று உங்களை நீங்களே மட்டம் தட்டாதீர்கள். உங்களுக்கு நீங்களே மதிப்பு தராவிட்டால் மற்றவர்கள் எப்படி தருவார்கள்?

Ì அதேநேரம், ”அறியாத காலத்தில், பாத்தியா ஓதுனோம், வரதட்சனை வாங்குனோம். இப்ப திருந்திவிட்டோம்” என்று மார்க்க ரீதியான சட்டபுரிதலில் ஏற்பட்ட தவறுகளை சொல்வது இதில் அடங்காது. ஆனால், ”முன்னாடியெல்லாம் திருடுவோம், கலர் பார்ப்போம், தண்ணி அடிப்போம்” என்று தனிமனித தவறுகளை, அறியாத காலத்தில் செய்திருந்தாலும் விதிவிலக்காகவே தவிர சொல்லக்கூடாது.  ரிஷி மூலம் பார்க்கத்தேவையில்லை.

 

v சுயவிளம்பரம், தம்பட்டம், புலம்புதல் கூடவே கூடாது.

பேச்சில் உங்களை பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்யாதீர்கள். அதில் உண்மையே இருந்தாலும் இதை யாரும் விரும்புவதில்லை. ஒருவர் பேசுகிறார்.

  • ”உதாரணத்துக்கு என்னை எடுத்துக்கோங்க. நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப சூப்பரா குர்ஆன் ஓதுவேன்.
  • என் கண்ல தீமை பட்டால், யாராக இருந்தாலும் விடமாட்டேன். ஒரு புடி புடுச்சுடுவேன்.
  • என்னைய பொறுத்தவரைக்கும், பொறுமையாக நீட்டி நிதானமாக அழகாகதான் தொழுகுவேன்.

என்றெல்லாம் பேசக்கூடாது. இது போன்ற பேச்சுக்கள் மக்களால் விரும்பப் படுவதில்லை. உங்களை பற்றி கேட்பதற்கு யாரும் வரவில்லை. நீங்கள் வேண்டுமென்று அப்படி பேசாவிட்டாலும் இது போன்ற தம்பட்டம் பலருக்கு வெறுப்பைத் தரும்.

அதுபோல மேடையில் நின்றுகொண்டு புலம்பாதீர்கள். ”மக்கள் நம்மையெல்லாம் எங்க மதிக்கிறாங்க. அவர் வந்தால், இவர் வந்தால், எல்லாரும் வருவாங்க. பயானை கேட்பாங்க. நாம சொன்னால் கேட்க ஆளில்லை. பயானுக்கு மார்க் போடுறாங்கப்பா. இதெல்லாம் சரியா?” என்பது போன்ற புலம்பல் பேச்சுக்களை முற்றிலும் தவிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் பேசும் போது மட்டும், மக்கள் கவனிக்காமல் இருந்தால் அது உங்களுடைய தவறு. மக்களின் தவறல்ல.

Ì உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லலாம்.
          பயானில் உங்களை பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்றால், உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் சொல்லக்கூடாது என்று அர்த்தம் இல்லை. அதை சொல்லலாம். உலகலாவிய பேச்சாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த இதுபோன்ற சம்பவங்களை சொல்வதை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளார்கள். அஹமது தீதாத் ஆக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும், ”நான் இஸ்ரேல் மியூசியத்தின் தலைவரை சந்தித்தேன். என்னோடு இப்படி இப்படி உரையாடினார். நான் இப்படி எதிர்கேள்வி கேட்டேன். பதிலளிக்கவில்லை” என்பது போன்ற உரையாடல்களை தங்கள் பயானில் பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தக்க வகையில் உள்ளது.

எனவே உங்களை பற்றி விளம்பரம் செய்யும் வகையில் இல்லாமல் நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லலாம். சொல்லவேண்டும். உதாரணமாக, ”நமது ஜமாத் அலுவலகத்திற்கு ஒரு சகோதரர் வந்தார். அநாதை இல்லத்திற்கு இடம் தேவை என்று எங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தோம். அதை அவர் காதில் வாங்கிக்கொண்டு ஜமாஅத்திற்கு அந்த இடத்திலேயே 20 லட்சம் செக் கொடுத்துவிட்டு, நம்மிடமிருந்து நன்றி என்ற வார்த்தையைக் கூட எதிர்பார்க்காமல் போனார்…” என்பது போன்ற நாம் சந்தித்த சம்பவங்கள் மக்களை நன்றாக ஈர்க்கும். இதையெல்லாம் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

Ì மறக்காமல் அவ்வப்போது கிடைக்கும் இது போன்ற செய்திகளை சேகரித்து, ஒரு நோட்டில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இவற்றை எந்த உரைகளில் பயன்படுத்துகிறீர்களோ அந்த உரை சுவைமிகுந்த உரையாக மாறிவிடும். நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் நீங்களும் பங்குபெற்றிருந்தால் அந்த சம்பவத்திற்கு மதிப்பு இன்னும் அதிகம். பொதுவாகவே எந்த சம்பவத்தையும் பிறரிடமிருந்து கேட்டு சொல்லும் செய்தியைவிட, அதில் ஈடுபட்டு அதை வர்ணிக்கும் செய்தி கேட்பதற்கு சுவையாக இருக்கும்.

 

v விதிவிலக்குகளை அவசியமான நேரத்தில் தெளிவுபடுத்திவிடுங்கள்.

எந்த சட்டத்தை சொன்னாலும் அதை முழுமையாக விளக்கிய பின்பு, அதில் ஏதேனும் விதிவிலக்குகள் இருந்தால், அதையும் தெளிவுபடுத்துங்கள். விதிவிலக்குகள் சரியாக தெளிவாக்கப்படாத காரணத்தினால் தான், பலநேரங்களில் சட்டங்களை மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக)

  • நேர்ச்சை செய்தால் கண்டிப்பாக நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். என்று சொல்லும் அதே நேரத்தில், தீமையான காரியத்தில், நிறைவேற்றுதல் கிடையாது. என்பதையும் சேர்த்து சொல்லுங்கள். இல்லாவிட்டால், தர்காவுக்கு போறேன்-னு நேர்ச்சை செய்தவர், விட்டதை நிறைவேற்றக் கிளம்பிவிடுவார்.
  • உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், பெற்றோர் சொல்வதை கண்டிப்பாக கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, இறுதியாக இறைவனுக்கு மாற்றமாக சொன்னால் கட்டுப்படவேண்டியதில்லை” என்று தெளிவு படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், ”அத்தா சொன்னதால் தான், வரதட்சனை திருமணத்திற்கு போனேன்” என்பார்.

Ì இரண்டாக பிரிக்கலாமே –  ஜும்மா பயானாக இருந்தால், சில அறிஞர்கள் விதியை முதல் உரையிலும், விதிவிலக்குகளை இரண்டாம் உரையிலும் பிரித்து பேசுகின்றனர். இது பின்பற்றத்தக்க நடைமுறையாக உள்ளது. உதாரணமாக, பெற்றோருக்கு கட்டுப்படுவதன் அவசியத்தை முதல் உரையிலும், கட்டுப்படக்கூடாத விஷயங்களை இரண்டாம் உரையிலும் சொல்லுங்கள். பயான் குழப்பமின்றி, தெளிவான முறையில் அமையும்.

 

v அதை பின்னால் சொல்லுகிறேன், என்று எஸ்கேப் ஆகாதீர்கள்.

சிலர், ஒரு ஹதீஸை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருவார்கள். இடையில் வேறு விஷயத்தை பற்றி கூறவேண்டியதிருக்கும். அதை பிறகு சொல்றேன். என்று அந்தரத்தில் விட்டவர், கடைசி வரை அதை சொல்லாமலேயே உரையை முடித்துவிடுவார்.

இது போன்ற ஒத்திவைப்புகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். சிலநேரங்களில் அதை சொல்ல மறந்துவிடுவோம். சிலநேரங்களில் சொல்வதற்கு நேரம் இல்லாமல் போய்விடும். சிலநேரங்களில் இறுதியில் அந்த செய்தி நினைவிற்கு வந்தாலும், கோர்வையாக அமையாது என்ற காரணத்தினால், சொல்ல இயலாது.  

பொதுவாகவே, ஒரு பொருளை தராமல் இருந்துவிட்டால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ”தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தராமல் இருந்தால், பெரிய இழப்பாகத் தோன்றும். நீங்கள் பிறகு சொல்கிறேன் என்று சொன்ன விஷயம், பிறகு சொல்லப்படும் என்ற எண்ணத்திலேயே உரையை கேட்டவருக்கு கடைசிவரை சொல்லப்படாவிட்டால், பெருத்த ஏமாற்றமாக இருக்கும். நிறைய விஷயங்களை நீங்கள் சொல்லியிருந்தாலும், ஏதோ குறையுள்ளது போல உங்கள் உரை ஆகிவிடும். ஒருசில பயான்களில், ஒருசில செய்திகளை, கடைசியில் சொல்லவேண்டிய அவசியம் இருக்கும். அது போன்ற விதிவிலக்குகளைத் தவிர, மற்ற எதையும் ஒத்திவைக்காதீர்கள்.


v குறிப்பிட்ட வார்த்தையை திரும்பத்திரும்ப சொல்லாதீர்கள்.

சிலர் பேசும் போது, ”அது வந்துட்டு, அங்க வந்துதுட்டு”, ”அதை பாத்திங்கனா, அப்ப பாத்திங்கனா, உடனே பாத்திங்கனா” என்பது போன்ற எதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள். தப்லீக் உரைகளில், ”சகோதரர்களே! கனவான்களே!” என்ற வார்த்தைகள் வரிக்குவரி இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். இதுபோன்ற திரும்பத்திரும்ப பேசும் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இதுபோன்ற பேச்சுக்கள் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
சிலர் உரை நிகழ்த்தும் போது அரசியல்வாதிகளைப் போல அடிக்கடி, ”இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை மக்களிடம் ஆழமாக பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு ஒரு தடவை சொல்லலாம், இரண்டு தடவை சொல்லலாம். அரைமணிநேர உரையில் பத்து தடவை சொன்னால், கேட்பதற்கு யாருக்குமே வெறுப்பாகத்தான் இருக்கும். அதை சொல்லும் நேரத்தில் உருப்படியாக வேறு எதையாவது சொல்லலாமே!

இன்னும் சிலர் உரை நிகழ்த்தும் போது, வரியை முடிக்கும் நேரத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசுவதுபோல, ”ம்ம்.. என்ன.. ம்ம்.. என்ன..” என்று அசைபோடுவார்கள். மக்கள் வெறுக்கும் பேச்சு இது. இதிலிருந்து விடுபடுவதற்கு சிறிது காலம் கட்டுரை நடையில் பேசுங்கள். இதுமட்டுமல்ல, இது போன்ற எந்த வார்த்தையையும் திரும்பத்திரும்ப சொல்லக்கூடாது. பெரும்பாலும் இப்படி பேசுபவர்களுக்கு, ”தாம் இப்படி பேசுகிறோம்” என்று தெரிவதில்லை. எனவே பிறர் சுட்டிக்காட்டும் போது, அலட்சியப்படுத்தி விடாமல் திருத்திக்கொள்ளுங்கள்.

Ì வார்த்தைகளை திரும்பத்திரும்ப பயன்படுத்தக் கூடாததைப்போல, எந்த சம்பவத்தையும், தகவலையும் ஒரு உரையில் ஒன்றிற்கும் மேற்பட்ட தடவைகள் சொல்லக்கூடாது. சலிப்பு ஏற்படுவதற்கு தகுந்த காரணங்களில் இவ்வாறு ஒரு செய்தியை பலதடவை பயன்படுத்துவதும் ஒன்று.   


v
பேப்பரை பார்த்து,  படித்துப் படித்துப் பேசுவதை தவிருங்கள்.

புதிதாக பேசுபவர்கள், குறிப்புகளை வைத்து அதை பார்த்துப் பார்த்துத்தான் பேசமுடியும். எனினும். இதை போகப்போக முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்புகளை கூர்ந்து பார்த்து பேசுவதை மக்கள் விரும்பமாட்டார்கள். பார்த்துப், படித்து சொல்லுகிறார் என்ற எண்ணம், பயான் சொல்பவரை குறைத்து மதிப்பிட வைக்கும்.

பேசும் நமக்கு மதிப்பு தேவையில்லை. நம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக பேசவில்லை. அல்லாஹ்விடத்தில் தான் அதற்குறிய கூலியை எதிர்பார்க்கிறோம். ஆனால் பேசுபவரை மதிப்பற்றவராக நினைத்தால், சொல்லப்படும் செய்தியும் மதிப்பற்றதாகத் தான் தெரியும்.

Ì விதிவிலக்கு –  சில உரைகள், இருபது, முப்பது கருத்துக்களை சொல்லவேண்டிய உரையாக இருக்கும். உதாரணமாக அரசாங்கம் நமக்கு இழைத்த துரோகங்களை பட்டியல் போடும் உரை போன்று இருந்தால், அதுபோல நமது ஜமாத் பணிகளை பட்டியல் போடும் உரை போன்று இருந்தால், இன்னும் சில நேரங்களிலும், எழுதி வைத்து வரிசையாக படித்து ஒவ்வொன்றாக விளக்கவேண்டியிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்கள் விதிவிலக்கானவை. அந்த நேரங்களில், பேப்பரை பார்த்து, படித்து விளக்கிச் சொல்லலாம்.
v அனுபவமுள்ள பிற பேச்சாளர்களின் வீடியோக்களை பாருங்கள்.

அனுபவமுள்ள பேச்சாளர்களின் பேச்சை தொடர்ந்து 3 மாதம் கவனித்தாலே, இங்கு சொல்லப்பட்டவற்றில் 80 சதவீதத்தை எளிதாக செயல்படுத்தமுடியும். பிறரை காப்பி அடிக்கக்கூடாது என்று தத்துவம் பேசவேண்டிய அவசியமில்லை.  காப்பியடிப்பதை தவறென்றும் நினைக்கவேண்டியதில்லை. நல்ல விஷயங்களில் நன்மக்களை பின்பற்றவேண்டும் என்பதே திருமறையின் கட்டளை. (9:100)

புதிதாக பேசஆரம்பிக்கும் தாயிகள், அனுபவமுள்ள பேச்சாளர்களின் ஒரே வீடியோவை பலமுறை பாருங்கள். லேசான மாற்றத்துடன், அதே பயானை நீங்களும் செய்து பாருங்கள். இது நல்ல பயிற்சியைத் தரும்.

ஆறு மாதங்கள் கடந்தபின்பு, வழக்கத்தை மாற்றிக்கொள்ளங்கள். அதற்கு பிறகு, ஈயடிச்சான் காப்பி போல, வார்த்தை மாறாமல், ஸ்டைல் மாறாமல் பேசினால், உங்கள் பேச்சு எடுபடாது. என்பதை நினைவில் வைக்கவும். கருத்தையும், ஸ்டைலையும் உள்வாங்கிக்கொண்டு, உங்களது இயல்பான, அல்லது உங்களின் ஸ்டைலான பேச்சில் வெளிப்படுத்துங்கள். இதுவே பின்பற்றுவதில் சரியான முறை. முக்கியமாக, அனுபவம் உள்ள பிறபேச்சாளர்களின் “கருத்துக்களை, தத்துவங்களை“ உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை மனப்பாடம் செய்து, கண்டிப்பாக உங்கள் பயானில் பயன்படுத்துங்கள்.,

Ì  ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள தனிப்பட்ட செயல்கள், பேச்சுக்களை மேனரிஸம் (Mannarism) என்பார்கள். (பேச்சுக்கலையில் இதற்கு signature என்றும் சொல்லப்படும்). பிற பேச்சாளர்களின் கருத்துக்களையும், யுக்திகளையும் காப்பி அடிக்கலாம். ஆனால் அவர்களது மேனரிஸங்களை காப்பி அடிக்காதீர்கள். மேனரிஸங்களை காப்பி அடித்தால், நீங்கள் யாருடைய பயானை பார்த்துவிட்டு பேசுகிறீர்கள் என்று மிக எளிதாக கண்டுபிடித்துவிடமுடியும். பிறருடைய மேனரிஸங்களோடு, உங்களின் சொந்த கருத்தை சொன்னாலும், ”இதெல்லாம் அவுரு சொன்னாதா இருக்கும்” என்று உங்கள் உரையை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள்.

Ì இடையிடையே கிடைக்கும் சட்டங்கள், துணுக்குகள் – அதிக அனுபவம் உள்ள பேச்சாளர்களின் உரையை கேட்க சிலர் ஆர்வம் காட்டுவதற்கு பலகாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, அவர்களின் உரையில் போகிறபோக்கில் பல சட்டத் துணுக்குகள் கிடைக்கும். உதாரணமாக, கண்டெடுத்த பொருளை ஒருவருடம் அறிவிப்பு செய்யவேண்டும், புதையல் கிடைத்தால் 20 சதவீதம் ஜகாத் தரவேண்டும். நபியவர்கள் குறிப்பிட்ட ஒருநேரத்தில் மட்டும் நின்றுகொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்கள். என்பது போன்ற சிறுசிறு சட்டங்களை இடையிடையே சொல்வார்கள். இதை பல மக்கள் விரும்புவார்கள். 

 

v சமுதாயப்பணியில் ஈடுபடுங்கள், அதிகமாக படியுங்கள்.

எந்த பேச்சையும் அந்தந்த துறை வல்லுனர்கள் பேசினால் கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும், உயிரோட்டமுள்ளதாக இருக்கும். ஒரு பேச்சாளர் பல்வேறு சமுதாயப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு, அதன் கருத்துக்களால் பாதிக்கப்பட்டு பேசும் பேச்சு, கிட்டத்தட்ட அந்தந்த துறைவல்லுனர்களின் பேச்சைப் போன்று உயிரோட்டமுள்ளதாக இருக்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமுதாயப் பணிகளில் ஈடுபடுங்கள். ”அனுபவம் பேச்சை அழகாக்கும்” என்பது பேச்சுக்கலையின் ஒரு முக்கிய விதி.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிறந்த பேச்சாளராக ஆவதற்கு செய்ய வேண்டிய விஷயங்களில் முதன்மையானது, அதிகமாக படிப்பது. நாட்டுநடப்புகளையும், தினசரிகளையும், வாரப்பத்திரிக்கைகளையும் படித்துக்கொண்டே இருங்கள். நவீன யுகத்தில் ஒட்டுமொத்த செய்திகளும், இணையத்தில் குவிந்துள்ளன. ஒரு நாளைக்கு அரைமணிநேரம் ஒதுக்கினாலே, ஏராளமான செய்திகளை படிக்கமுடியும். மார்க்க செய்திகளை பொறுத்தவரையில், மாதமாதம் வெளிவரும் அனைத்து பத்திரிக்கைகள், அவ்வப்போது வெளிவரும் புத்தங்கள் என எதனையும் விட்டுவிடாதீர்கள்.

Ì கவனம் – முக்கியமாக மாற்றப்பட்ட சட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் பழைய சட்டத்தை சொல்லி, பயானை கேட்பவர், இது மாற்றப்பட்டது என உங்களுக்கு, சொல்லிக் கொடுப்பது, ஆரோக்கியமான பயானுக்கு உகந்ததல்ல. நீங்கள் ஒன்றும் அறியாதவர் என்ற எண்ணம், உங்களது எந்த பேச்சையும் கவனிக்கத் தூண்டாது.

இதுவரை மக்களை கவரும் வகையில் பேசுவதையும், பேசக்கூடாத முறைகளையும் விரிவாக பார்த்தோம். அடுத்த பகுதியில், கேள்விக்கு பதில் சொல்லும் போது, கவனிக்கவேண்டிய ஒருசில விஷயங்களை மட்டும் காண்போம்.