ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடுமைகள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

 ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடுமைகள்

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வந்த அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவமும், பவுத்த தீவிரவாதிகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பலதரப்பினரும் கொல்லப்பட்டனர். ஏராளமான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

உயிருக்கு அஞ்சிய சுமார் 8 லட்சத்துக்கும் மேலான முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசம் வந்து தஞ்சமடைந்தனர். இவர்களுக்காக உணவு, குடிநீர், கூடாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர முடியாமல் வங்கதேச அரசு திணறி வருகிறது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெற்றுள்ள 15 நாடுகளின் பிரதிநிதிகள் வங்க தேசம் வந்து ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலைமை குறித்து ஆய்வு நடத்தி விட்டு திரும்பினார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தரேஸ் ‘வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கற்பனைக்கு எட்டாத அளவில் அங்கு அட்டூழியங்கள் நடந்துள்ளதை நான் பார்த்தேன்.

வங்கதேசத்தில் சாக்ஸ் பஜார் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களில் பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளன. அவர்கள் தங்களுக்கான நீதியை கேட்கிறார்கள். மேலும் பாதுகாப்பாக நாடு திரும்பவும் அவர்கள் உதவி கோருகின்றனர். உலகில் அதிக அளவில் பாகுபாடு பார்க்கப்படும் இனங்களில் ஒன்றாக ரோஹிங்யா முஸ்லிம்கள் இருக்கின்றனர். ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்.

வங்கதேச மக்கள் காட்டிய இரக்க குணத்தாலும், தாராள மனதாலும் பல லட்சம் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்’ என்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோஹிங்யா முஸ்லிம்களை அழைத்துக் கொள்வதாக மியான்மர் அரசு கூறியது. இதற்கிடையே வங்கதேசமும், மியான்மரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டதால் அகதிகள் யாரும் மியான்மர் திரும்பவில்லை. இது குறித்து ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் கூறும் போது ‘தங்களுக்கு மியான்மரில் நிரந்தர குடியுரிமையும், உயிருக்கு பாதுகாப்பும் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் மியான்மர் திரும்ப தயாராக உள்ளோம்’ என்றனர்.

மியான்மர் அரசின் வெற்று வாக்குறுதியை நம்பி ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்கு திரும்ப அனுப்ப முடியாது. மாறாக சர்வதேச நாடுகள் மியான்மர் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக உடன்பாட்டுக்கு வந்து, அந்த உத்தரவாதத்தின் பேரிலேயே ரோஹிங்யா முஸ்லிம்களை திரும்பவும் மியான்மருக்கு அனுப்ப முடியும். இதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமுதாயம் செய்ய வேண்டும் என்பதே ரோஹிங்யா முஸ்லிம்களின் விருப்பமாக இருக்கிறது. இவர்களின் நியாயமான இந்த விருப்பம் நிறைவேற சர்வதேச நாடுகள் மியான்மர் அரசுக்கு உரிய நெருக்கடிகள் கொடுக்க முன்வர வேண்டுமே! «

Source :unarvu ( 20/07/18 )