11 பேரைக் கொன்ற மூடநம்பிக்கை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

11 பேரைக் கொன்ற மூடநம்பிக்கை

டெல்லி, புரோரி பகுதியைச் சேர்ந்தவர் நாராயண் தேவி. 77 வயதான இவர் மூடநம்பிக்கை மிக்கவர். கடந்த வாரம் இவர், இவரது மகள்கள், பேரப் பிள்ளைகள் என 11 பேர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில் நீங்கள் சாகும் போது நான் வந்து காப்பாற்றி விடுவேன் என்று நாராயண் தேவியின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவில் வந்து சொன்னாராம்! இந்தக் கனவை உண்மை என்று நம்பி நாராயண் தேவியின் குடும்பத்தினர் 11 பேர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் நாராயண் தேவியின் தந்தை வந்து காப்பாற்றவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

நீங்கள் கெட்ட கனவை கண்டால் இடதுபுறம் மூன்று முறை துப்பி விட்டு, தூக்கி எறியப் பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்த உபதேசத்தை நாராயண் தேவியும், அவரது குடும்பத்தினரும் ஏற்று நடந்திருந்தால் இந்நேரம் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரை மாய்த்திருக்க மாட்டார்கள் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இறந்து போன ஒருவர் இந்த உலகத்துக்கு திரும்பி வரமுடியாது. அவ்வாறு வர முடியும் என நம்புவது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையாகும். இந்த மூடநம்பிக்கை தற்கொலை செய்து கொண்டவர்களின் மனதில் குடி கொண்டதால் தான் 11 பேரும் தற்கொலைக்கு முயன்றார்கள்.

சிலர் இறந்து போனவர்களை பேயாக கருதி தங்கள் வாழ்வை நாசமாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்கள் நன்மை செய்வார்கள் என நம்பி, தங்கள் வாழ்வை சீரழித்துக் கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட இந்த 11 பேரும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இறந்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்துக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் அறுந்து போய் விடும். நபிகள் நாயகத்தின் கூற்று, நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்றை ஏற்று நடக்க முற்படும் போது வாழ்வில் நன்மை மட்டுமே நடக்குமே தவிர தற்கொலை போன்ற அசம்பாவிதங்கள் ஒரு நாளும் நடக்காது என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறந்தவர்கள் குறித்த உண்மையான அறிவு நாராயண் தேவி குடும்பத்திற்கு இல்லாமல் போய் விட்டது. இந்த மூடநம்பிக்கையே இவர்களின் தற்கொலைக்கும் காரணமாக அமைந்து விட்டது. இவர்களின் இந்த கோழை முடிவு இனி எவருக்கும் வரக் கூடாது எனில் இறந்தவர்கள் குறித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை திக்கெட்டும் பரவ வேண்டும். அதன் மூலமே மூடநம்பிக்கைகளால் நிகழும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியும். சரிதானே!

 

Source : unarvu (13/07/18)