மருத்துவ செலவுகளால் ஏழைகளாகும் இந்தியர்கள்
மருத்துவ செலவுகளால் ஏழைகளாகும் இந்தியர்கள்
சமீபத்தில் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த ஆய்வறிக்கையில் , ஆண்டுதோறும் இந்தியர்களில் 5.5 கோடி பேர் தங்களுடைய மருத்துவ செலவுகளால் ஏழைகளாக மாறுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அதில் 3.8 கோடி மக்கள் மருந்துகளுக்கு செலவிடும் தொகையால் ஏழ்மைக்கு தள்ளப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். இது குறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் (British Medical Journal) மூன்று வல்லுநர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ள அறிக்கையில்,
புற்றுநோய், இதயக் கோளாறுகள்,சர்க்கரை போன்ற தீவிர நோய்களால் உண்டாகும் செலவு, சராசரி வருமானம் பெறும் இந்தியர்களின் வீட்டு செலவிற்கான தொகையை விட 10% சதவீதம் அதிகமாக காலி செய்து விடுவதாக கூறுகின்றனர். மேலும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியர்களும், சுகாதார பொருளாதார வல்லுநர்களாகிய சக்திவேல் செல்வராஜ் & ஹபிப் ஹசன் ஃபரூகி ஆகியோர் உடல்நலம் சார்ந்த சமூக நகர்வுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி, உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவை தான் சராசரி வருமானம் பெறுபவர்களின் பணத்தை அரிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் 5.5 கோடி இந்தியர்கள் மருத்துவச் செலவுகளால் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுகின்றனர். இத்தகைய உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்துகள் மருந்தகங்களில் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதே இந்த கொடுமைக்கு பிரதான காரணமாகும். சில அத்தியாவசிய மருந்துகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தாலும், 80% மேலான மருந்துகள் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.இந்த நிலை சராசரி வருமானம் பெரும் இந்தியர்களின் பொருளாதார நிலையை சறுக்குவதுடன் அவர்களின் மனநிலையையும் பாதிக்கின்றது.
தங்களுடைய மருத்துவ செலவுகளை கவனிக்க முடியாததால், பெரும் மனத்துயரத்திற்கு ஆளாகும் இவர்கள் தற்கொலை செய்வதும், கருணைக் கொலை செய்துவிடுமாறு மனு கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மருத்துவ செலவுகளை குறைப்பதற்காக அரசாங்கம் ஏதேனும் வழிகளை வகுக்குமா என்று எதிர்பார்த்த மக்கள், அரசாங்கத்தின் ஜன் அவ்ஷாதி திட்டம் இந்த இழிநிலையிலிருந்து தங்களையும், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் காக்கும் என்று நம்பி ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
ஜன் அவ்ஷாதி என்ற மலிவு விலை மருந்தகங்கள் அதிக இடங்களில் இல்லாததும், வெளியில் அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகள் இங்கு கிடைக்காததுமே மக்களின் ஏமாற்றத்திற்கு காரணம். மக்களின் நலனே தங்களின் நலன் என்று வெற்று கூச்சலிடம் மத்திய அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியதை போல் இல்லாமல் , மக்களின் மனக்குமுறலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நடுத்தர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
Source ; unarvu ( 15/06/18 )