பாகிஸ்தானில் அதிகரித்த இந்துக்களின் எண்ணிக்கை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பாகிஸ்தானில் அதிகரித்த இந்துக்களின் எண்ணிக்கை

பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையோட்டி, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிமல்லாதவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது இந்த வாக்காளர் பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 14 லட்சமாக இருந்த இந்து வாக்காளர்கள் இப்போது 17 லட்சத்து 70 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினரில் இந்துக்கள் முதலிடத்தில் உள்ளனர். அது போல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 12 லட்சத்து 30 ஆயிரமாக இருந்த கிறிஸ்தவ வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 16 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு அடுத்து அஹ்மதிகள், சீக்கியர்கள், பஹார் இனத்தினர், யூதர்கள் ஆகியோர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இந்தத் தகவல் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.

அப்போது மத ரீதியான கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது. அப்போது முஸ்லிம்களின் மக்கள் தொகை 14.2 சதவீதமாக இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011- ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், ஜைனர்கள், பார்சிகர், என எல்லா மத மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தானே செய்யும். அந்த வகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பை சங்பரிவார சக்திகள் தவறான முறையில் பயன்படுத்தி முஸ்லிம்கள் 4 திருமணங்களை முடிக்கிறார்கள். நிறைய குழந்தைகளைப் பெறுகிறார்கள். குடும்ப கட்டுப்பாடு முறையை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. நிலைமை இப்படியே நீடித்தால் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள் என்று புழுதிப் பிரச்சாரம் செய்தன. இந்தியாவில் உள்ள சங்பரிவார சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு புழுதிப் பிரச்சாரம் செய்தது போல பாகிஸ்தானில் இப்போது

இந்து வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வைத்து அங்குள்ள அமைப்புகள் எதுவும் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக எந்தப் பிரச்சாரத்தையும் செய்யவில்லை என்பதை இங்குள்ள முஸ்லிம்கள் எண்ணிப் பார்க்கின்றனர். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு. அங்கு இந்து சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்தால் அங்கு தான் புழுதிப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியல் சாசனம் பிரகடனம் செய்கிறது. இந்த மதச்சார்பற்ற நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக புழுதிப் பிரச்சாரம் செய்ய எந்த நியாயமும் இல்லை.

இத்தகைய இந்தியாவின் முஸ்லிம்களுக்கு எதிராக புழுதிப் பிரச்சாரம் நடந்தது எனில் அதற்கு இங்குள்ள சங்பரிவார அமைப்புகளே காரணம். இந்தக் காவி அமைப்புகள் மதச்சார்பின்மைக்கு எதிராக நடந்து, இந்த தேசத்தை இழிவு படுத்தின என்பதை இப்போது எல்லோரும் எண்ணிப் பார்க்கின்றனர். உலக அரங்கில் இந்தியாவை கவுரவப் படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அது தேசப்பற்று. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நடந்து சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தினால் அது தேசத் துரோகமாகவே கருதப்படும். இப்படி இந்தியாவை சர்வதேச அரங்கில் கேவலப் படுத்தி, தேசத் துரோகம் இழைப்பதை சங்பரிவாரம் கைவிட வேண்டும்.

இதைச் செய்வதற்கு விருப்பம் இல்லையெனில் இந்தியாவை விட்டு வெளியேறி மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு அவர்கள் ஓடி விட வேண்டும். உலக அளவில் கல்வி, வேலை வாய்ப்புக்காக சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அதிலும் சங்பரிவார ஆதரவாளர்களே இதில் அதிகம். இப்படி கல்வி, வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறும் இவர்கள் இந்தியாவின் மானத்தைக் காக்க வெளியேறினால் அது இந்தியாவுக்கு நன்மையாகவே அமையும். அப்படித் தானே!

Source : unarvu ( 08/06/18 )