நீதிபதிகள் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்கள்
நீதிபதிகள் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்கள்
சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து தற்போது 56 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் அப்துல் குத்தூஸ், பஷிர் அஹ்மது ஆகிய இரு முஸ்லிம் நீதிபதிகளும் அடக்கம். தமிழ்நாட்டில் சுமார் 80 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இப்படி மக்கள் தொகையில் 13 சதவீதத்திற்கும் அதிகமாக தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வசிக்கும் போது விகிதாச்சார அடிப்படையில் 7க்கும் அதிகமான முஸ்லிம் நீதிபதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியில் இருக்க வேண்டும். எனவே சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்யும் போது முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
என்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தார்கள். உயர்நீதி மன்ற நீதிபதிகளை உச்சநீதி மன்ற கொலீஜியம் குழு தான் நியமனம் செய்கிறது. உயர்நீதி மன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞர்களாக பணி புரிபவர்களை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க முடியும் என்ற நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் இந்தத் தகுதி படைத்த நிறைய முஸ்லிம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு நீதிபதிகள் நியமனத்தின் போது உரிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில் எம்.நிர்மலாகுமார், சுப்ரமணியன் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன் கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.டி.ஆஷா ஆகிய 7 பேரை சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த நியமனத்தில் முஸ்லிம் சமூகம் முழுக்க முழுக்க புறக்கணிக்கப் பட்டுள்ளதை எவரும் அறியலாம். நீதிபதிகள் நியமன ஆணை சட்டம் அமலுக்கு வந்து, நீதிபதிகளின் நியமனம் மோடியின் கைக்கு போயிருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்குமோ அந்த நிலைத் தான் கொலீஜியம் கையில் நீதிபதிகள் நியமனம் இருக்கும் போதும் உள்ளது. கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஜோஸஃபை உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கக் கோரி உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஜோஸப் கிறிஸ்தவர் என்பதால் இவரை உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமனம் செய்ய மோடியின் மத்திய அரசு மறுத்து விட்டது.
இந்த சலசலப்பு ஓய்வதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் பணிக்கு உச்சநீதி மன்றம் கொலீஜியம் குழு பரிந்துரை செய்த நீதிபதிகளின் பட்டியலில் முஸ்லிம் எவரும் இடம் பெறவில்லை என்ற செய்தி தமிழக முஸ்லிம்களை வருத்தமடையச் செய்துள்ளது. நீதிபதிகள் பதிவிட்டு முஸ்லிம்களை பரிந்துரை செய்தால் மோடி அரசு அதை ஏற்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நீதித்துறைக்கும், மோடி அரசுக்கும் இடையே இன்னெனாரு மோதல் ஏற்படும். ஏற்கெனவே நீதிபதி ஜோஸப் விவகாரத்தில் மோடி அரசுக்கும், உச்சநீதி மன்ற கொலீஜியம் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இன்னொரு மோதல் எதற்கு? என நினைத்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கு முஸ்லிம்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படவில்லையா?
அல்லது கொலீஜியம் குழுவே முஸ்லிம்களின் பெயர்களை பரிசீலிக்க வில்லையா? எனத் தெரியவில்லை. இந்த இரண்டு காரணங்களில் எது உண்மையாக இருந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல. முஸ்லிம்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப் பட்டால் நீதிமன்றத்தில் போய் முஸ்லிம்கள் நியாயம் கேட்பார்கள்.
நீதிமன்றமே முஸ்லிம்களுக்குள்ள உரிமையை தர மறுத்தால் முஸ்லிம்கள் எங்கு போய் நிற்க முடியும்? ஒரு ஜனநாயக நாட்டில் அதுவும் மதச்சார்பற்ற நாடு என அரசியல் சட்டம் பிரகடனம் செய்யும் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் மட்டும் இப்படி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது நல்லதல்ல. இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது ஒழிய வேண்டும். ஒழிந்து முஸ்லிம்களுக்கான சமூகநீதி கிட்ட வேண்டும். கிட்டுமா? அதற்கான காலம் மலருமா?
Source : unarvu (08/06/18)