தர்கா உண்டியல் பணத்திற்கு சண்டை…?
தர்கா உண்டியல் பணத்திற்கு சண்டை போடும் வக்ஃபு வாரியமும், ஹக்தார்களும்
இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் பிரபல தர்கா ஒன்று இருக்கிறது. இந்த தர்காவுக்கு வந்தால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவை நீங்கும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த மூடநம்பிக்கையின் காரணமாக முஸ்லிம் பெயர் தாங்கிகளும், முஸ்லிமல்லாதவர்களும் இங்கு வந்து, தர்காவின் உண்டியலில் காணிக்கைகளை போட்டுச் செல்கின்றனர். இந்தக் காணிக்கை முழுவதையும் ஹக்தார்கள் என சொல்லிக் கொண்ட ஒரு சிலர் அனுபவிக்க, இது வக்ஃபு அதிகாரிகளின் கண்களை உறுத்தி விட்டது. ஹக்தார்கள் உண்டியல் பணத்தில் வக்ஃபு அதிகாரிகளுக்கும் பங்கு தந்திருந்தால் பிரச்சினை வெடித்திருக்காது.
பங்கு தரவில்லை என்பதால் இந்த தர்காவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாக வக்ஃபு தீர்ப்பாயத்தில் வக்ஃபு வாரியம் வழக்கு போட்டது. வக்ஃபு சட்டப்படி எந்தவொரு வக்ஃபு சொத்தையும் வாரியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்க முடியும். 5 ஆண்டுகள் வரை இவ்வாறு நிர்வகிக்க முடியும். வாரியத்திற்கு வக்ஃபு சட்டம் தந்துள்ள இந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஏர்வாடி தர்காவை வாரியம் எடுத்துக் கொள்ள, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வக்ஃபு தீர்ப்பாயம் வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதனையடுத்து கடந்த 15.05.18 அன்று வக்ஃபு அதிகாரிகள் ஆர்.டி.ஒ. மற்றும் காவல்துறையினருடன் சென்று தர்கா உண்டியலுக்கு சீல் வைக்க முயல, தர்கா ஹக்தார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய கோட்டாட்சியர் மதன், நீதிமன்ற உத்தரவை எடுத்துக் காட்டி தர்கா உண்டியலுக்கு சீல் வைப்பதை தடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதன் பிறகு காவல் துறை உதவியோடு வக்ஃபு அதிகாரிகள் தர்கா உண்டியலுக்கு சீல் வைத்து விட்டு இடத்தை காலி செய்தனர். இதன் மூலம் தர்கா உண்டியலில் போடப்படும் காணிக்கை அனைத்தும் இனி வக்ஃபு வாரியத்திற்கு போய் விடும். இருந்தாலும் வாரியத்திற்கு சாதகமான வக்ஃபு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தர்கா ஹக்தார்கள் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இப்படி தர்கா உண்டியல் பணத்திற்காக வக்ஃபு வாரியமும், ஹக்தார்களும் சண்டையிட்டு வருகிறார்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை தர்கா என்பது இஸ்லாத்திற்கு எதிரான அடையாளச் சின்னமாகும். இறந்த சமாதிகளின் மீது பூசுவதையோ, அதன் மீது கட்டடம் கட்டுவதையோ நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அதனால் குர்ஆனையும், நபி வழியையும் அறிந்த முஸ்லிம்கள் இந்த தர்கா பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள். இஸ்லாத்தில் பேயும் கிடையாது. பிசாசும் கிடையாது. அப்படி இருக்கும் போது இல்லாத பேயையும், பிசாசையும் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எப்படி விரட்டுவார்கள்?
சமாதியில் அடக்கமாகி உள்ளவர் பார்ப்பார் என்று கண்ணுள்ள எவராவது நம்புவாரா? தர்காவில் அடக்கமாகியுள்ளவர் கேட்பார் என்று காதுள்ள எவராவது சொல்வாரா? தர்காவில் அடக்கமாகியுள்ளவர் பேசுவார் என்று பேசும் சக்தி படைத்த எந்த மனிதனாவது கூறுவாரா? உயிர் உள்ள எவராவது சமாதியில் அடக்கமாகி இருப்பவருக்கு உயிர் உண்டு. சக்தி உண்டு என்று நம்புவாரா? இப்படி நம்பினால் உயிர் உள்ளவரை புதைத்து விட்டார்கள் என்று அர்த்தமாகிறது. இது அப்பட்டமான கொலையாகும். இது கூட தெரியாமல் சமாதியானவருக்கு உயிர் உண்டு என்று நம்பினால் அது நிச்சயம் மூடப்பழக்கமாகும்.
இந்த மூடநம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் அறவே இடம் கிடையாது. இஸ்லாமுக்கும், அறிவியலுக்கும் எதிரான இந்த மூடநம்பிக்கையை அகற்றுவது தான் உண்மையான முஸ்லிம்களின் செயலாக இருக்குமே தவிர மக்களின் அறியாமையை பயன்படுத்தி உண்டியல் பணத்திற்காக சண்டை போடுபவர்கள் நிச்சயம் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இதை வக்ஃபு வாரியமும், தர்காவின் ஹக்;தார்களும் உணர்ந்து, இஸ்லாமிய வழிமுறைப்படி நடந்து பகுத்தறிவு கொள்கையைப் பரப்ப வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்.
பிறருடைய பொருள், மானம், ரத்தம் இந்த மூன்றும் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது உண்டியலில் கிடக்கும் யாருடைய பணத்தையோ சுருட்ட சண்டை போடலாமா? என்பது தான் முஸ்லிம்களின் கேள்வியாக இருக்கிது…
source : unarvu ( 25/05/18 )