பெண்ணியம் போற்றும் இஸ்லாம்
பெண்ணியம் போற்றும் இஸ்லாம்
இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாமல் அதனை விமர்சனம் செய்வதாகக் கருதிக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். அதில் குறிப்பாக பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. மணமகனைத் தேர்வு செய்தல், கணவனை விவாகரத்து செய்தல், மஹர், சொத்துரிமை, வழிபாட்டு உரிமை என பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கி உள்ளது.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த உரிமைகளை இன்றும் பல நாடுகளில் பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. பெண் என்கிற முறையில் இஸ்லாம் வழங்கிய விவாகரத்து உரிமையை முஸ்லிம் பெண் ஒருவர் பயன்படுத்தி உள்ளார். ஆனால் இச்செய்தி ஊடகங்களில் கவனத்திற்குரிய செய்தியாக காட்டப்படாமல் வேடிக்கை செய்தி போல வீணடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண் யாரேனும் பாதிக்கப்படும் போது பெண்ணுரிமையாளர்கள் போல் போலி வேடமிட்டு பொது வெளியில் பேசுபவர்கள், இஸ்லாம் வழங்கிய உரிமையைக் கொண்டு முஸ்லிம் பெண் ஒருவர் காப்பாற்றப்படும் போது கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.
இஸ்லாம் வழங்கிய தலாக் சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாக கூப்பாடு போட்டவர்கள் அதே இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கிய குலா உரிமை பற்றி குரலற்றவர்களாக பேசா ஊமைகளாகி விடுகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாரி மற்றும் ரூபனா பர்வீன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண நாளில் மணமகனுக்கு மணமகள் தந்தை பைக் ஒன்றை வரதட்சணையாக அளித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை தமக்கு பல்சர் பைக் தான் வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்துள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகி உள்ளது. இதனைக் கண்ட மணப்பெண் தமக்கு கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனக் கூறி திருமண நாளிலேயே மணவிலக்கு பெற்றுள்ளார். பெண்களும் விவாகரத்து செய்ய இஸ்லாம் வழங்கிய உரிமையை அப்பெண் பயன்படுத்தி உள்ளார்.
திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்பதாக அவர் இருந்துவிடவில்லை. ஆனால் அப்பெண் நீதி மன்றங்களை நாடி இருந்தால் மனம் ஏற்காத கணவருடன் வாழ விருப்பமில்லாமலும், வேறு திருமணம் செய்ய இயலாமலும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பெண்ணியம் போற்றவும், கண்ணியம் காக்கவும் இஸ்லாம் காட்டும் வாழ்வியல் வழிமுறைகளே தீர்வு என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
Source : unarvu ( 11/05/18 )