கிரிக்கெட் போதை ஏற்படுத்திய விபரீதம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

கிரிக்கெட் போதை ஏற்படுத்திய விபரீதம்                                                                                                     

கிரிக்கெட் என்ற விளையாட்டு விளையாட்டாக பார்க்கப்படுவதைத் தாண்டி, இன்று பலருக்கு அது ஒரு போதையாகவே மாறிவிட்டது. கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்பதற்காக பெற்றெடுத்த தந்தையை கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் சாய்நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் அரக்கோணம் நகராட்சியில் காண்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வருகிறார். இவரின் மகன் நந்தகுமார் (35) மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அண்ணாமலை 12.04.18 வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் தனியாக டிவியில் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்து வீடு திரும்பிய நந்தகுமார், அண்ணாமலையிடம், `நான் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க வேண்டும். ராஜஸ்தானும் டெல்லியும் விளையாடிக்கொண்டு இருக்கிறது. சேனலை மாற்று; இல்லையென்றால் ரிமோட்டைக் கொடு’ எனக் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை, `இருப்பா இந்த நாடகம் முடியட்டும் தந்து விடுகிறேன்’ என்று கூறியுள்ளனர்.

ஆனால், நந்தகுமார் அடாவடியாக ‘இப்போ சேனலை மாற்றப் போறியா இல்லையா’ எனச் சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தன் அப்பாவின் தலையில் பின்பக்கமாகப் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அண்ணாமலை அலறியடித்துக்  கொண்டு வீட்டைவிட்டு சத்தம் போட்டபடியே வெளியே ஓடிவந்து மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அண்ணாமலையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். ஐ.பி.எல் போட்டி பார்ப்பதற்கு ஏற்பட்ட தகராறில் தந்தையைக் கொலை செய்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையைக் கொன்று விட்டு கிரிக்கெட் பார்க்க அவ்வளவு ஆவல் என்றால் இது போதையாக இல்லாமல் வேறு என்னவாக இருக்கும்?

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, அதை விளையாடக் கூடியவர்கள் கோடி கோடியாகச் சம்பாதித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் அதைப் பார்ப்பதற்காக நாம் நமது நேரத்தை, இளமையை, குடும்பத்தை, பொருளாதாரத்தை அனைத்தையும் இழக்க வேண்டுமா? இது முழுவதும் சூதாட்டமாகவே உள்ளது. விளையாடுபவர்கள் சம்பாதித்து விடுகின்றனர், வேடிக்கை பார்க்கும் நாம் சிந்தனைத் திறனை கூட இழந்து விடுகிறோம். வேண்டுமா இந்த கிரிக்கெட் போதை? இன்றைய இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்…

 

Source : unarvu ( 27/04/2018 )