சினிமாவால் பெருகும் குற்றங்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சினிமாவால் பெருகும் குற்றங்கள்

சினிமா என்பது மனிதனின் மூளையை மழுங்கடித்து, சீரழித்து சின்னாபின்னமாக்குகிற ஒரு கருவியாகும். மனிதன் தவறு செய்வதற்கு வழிமுறைகளை சொல்லி தருவதற்கும், செய்த தவறை நியாயப்படுத்துவதற்கும், அதை மறைப்பதற்கும் பெரும் வழிகாட்டலாக சினிமா உள்ளது. சினிமாவின் மூலமாகவே ஏராளமான குற்றங்கள் மனித சமூகத்தில் பெருகியுள்ளது.

எதுவெல்லாம் பாரதூரமான குற்றங்களாக ஒரு காலத்தில் மக்கள் கருதினார்களோ அதையெல்லாம் எவ்வித சலனமும் இல்லாமல் செய்யத் தூண்டுவது சினிமாதான். கற்பழிப்பு, கடத்தல், கொலை போன்றவைகள் தற்போது உலகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சமூக தீமைகளுக்கு வழிகாட்டலாக இருப்பது சினிமாதான். இவ்வாறு சமூகத்தில் மிகப் பெரும் சீர்கேடாக இருக்கும் சினிமாவை சவூதி அரசு அனுமதித்திருக்கிறது. ஏற்கனவே 1980 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட சினிமா, 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்    அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சவூதி அரசின் இந்த செயலானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில் அரபுநாடுகள் தான் குற்றங்கள் குறைவாக உள்ள நாடுகள் ஆகும்.

அரபு நாடுகளைப் போல் தங்கள் நாட்டிலும் சட்டம் இருக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படும் நிலையில் சவூதி அரசு சினிமாவை அனுமதித்தால் இதன் மூலமாக குற்றங்கள் பெருகும். குற்றங்கள் குறைவாக உள்ள நாடு என்கிற நிலைமாறி, மற்ற நாடுகளைப் போல் குற்றங்கள் நிறைந்த நாடாக சவூதி மாறுவதற்கு சினிமா ஒரு காரணமாக அமையும். கேளிக்கைகள் வேண்டும் என்பதற்காக சினிமாவை அனுமதித்தால் இதன் மூலமாகவே குற்றங்கள் உள்ளே நுழைந்துவிடும். இதனை சவூதி அரசு சிந்தித்து மீண்டும் சினிமாவை தடை செய்து, வழமைபோல் அனைத்து நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

 

Source : unarvu ( 27/04/2018)