சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற சிறுமி, காமுகர்களால் கோவிலில் அடைத்து வைத்து கற்பழித்துக் கொல்லப்பட்டாள். இதுபோல் குஜராத்தின் சூரத் நகரில் ராஜஸ்தானைச் சேர்ந்த 11வயது சிறுமி ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்பட்டாள். மேலும் உ.பி. மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் என்பவரால் 17- வயது இளம்பெண் ஒருத்தி கற்பழிக்கப்பட்டாள். இப்படி சிறுமிகளைக் கற்பழித்து, கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்தன.
இதனைத் தடுக்க கடுமையான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரி சபை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய அவசரச் சட்டத்தின்படி 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனையும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம். 12 வயது முதல் 16 வயதுள்ள சிறுமிகளைக் கற்பழிப்பவர்களுக்கு தற்போது 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இது 20 ஆண்டுகள் முதல் இயற்கை மரணம் அடையும் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தற்போது குறைந்த பட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனை குறைந்த பட்சம் 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் பலாத்கார வழக்குகளை 2 மாதங்களில் முடித்து விட வேண்டும். இதன் மேல்முறையீட்டு வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடித்து விட வேண்டும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பலாத்காரம் மற்றும் கூட்டுப் பலாத்காரம் செய்பவர்களுக்கு உடனடி முன் ஜாமினோ, முன் ஜாமினோ வழங்க முடியாது.
அரசு வழக்கறிஞர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் பிரதிநிதிக்கு 15 நாள் நோட்டீஸ் அளித்த பிறகு அது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கலாம். இந்த அவசரச் சட்டம் தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது ‘பாலியல் பலாத்காரக் குற்றங்களை விசாரிக்க மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட உயர்நீதி மன்றங்களைக் கலந்து ஆலோசித்து விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். புதிய அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உருவாக்கப்படும். பலாத்கார வழக்குகளுக்காக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் சிறப்பு தடயவியல் சாதனங்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள் போதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தையும் அமல்படுத்தும் வகையில் இன்னும் 6 மாத காலத்திற்குள் புதிய திட்டம் அறிவிக்கப்படும். பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த புள்ளி விபரங்களை தேசிய குற்ற பதிவு மையம் பராமரிக்கும்.
இந்த புள்ளி விவரங்கள் அவ்வப்போது மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்’ என்றார். இத்தனை குழந்தைகளின் உயிர் போன பிறகாவது இப்படியரு சட்டத்தை அரசு கொண்டு வந்ததாக நாம் ஆறுதல் அடைய முடியாத அளவுக்கு நீதித்துறை மக்களின் நம்பிக்கை இழந்துள்ளது. குஜராத் பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருவது போல் தான் இந்தச் சட்டம் பாஜகவுக்கு மட்டும் வளையும் என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு உள்ளது.
நீதித்துறை மக்களின் சந்தேகத்தை நீக்கும் வகையில் நடந்து கொள்வதைப் பொருத்தே இந்தச் சட்டத்தின் விளைவை எடை போட முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 5 சதவீதம் பேருக்கு கூட தண்டனை கிடைக்கவில்லை. இதுபோன்று இந்த அவசர சட்டம் ஆகி விடக் கூடாது…
Source : unarvu ( 27 /04 /2018