உயர்ந்து நிற்கும் இஸ்லாம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அந்த மார்க்கம் இன்றளவு எவ்வாறு வளர்ந்து கொண்டு இருக்கிறது. எவ்வாறு உயர்ந்தும் இருக்கிறது. என்பதைப் பற்றி இந்த உரையில் காண்போம்..

உயர்ந்து நிற்கும் இஸ்லாம்

இவ்வுலகில் மனிதன் பிறந்து வளர்ந்த போது மனிதனுடன் சேர்ந்து பல்வேறு மார்க்கங்களும் வளர்ந்து விட்டன. மனிதனும் தன் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயங்களையும் சமணங்களையும் ஏற்படுத்திக் கொண்டான். இதன் விளைவாகத் தான் இன்றைய தினம் எண்ணிலடங்கா மதங்கள் உருவாகியுள்ளன. ஆனாலும் இத்தனை மார்க்கங்களும் தன் கடமையை பரிபூரணமாக முடித்துள்ளனவா? அல்லது குறைகளை வைத்துள்ளனவா? என்று நீங்கள் ஆராய்ந்தால் பெரும்பாலான மதங்கள் தன் கடமையை பூரணப்படுத்த தவறுவதை காணலாம்.

உதாரணமாக ஒரு மருத்துவரிடம் நாம் சிறந்த மருத்துவத்தை எதிர்பார்ப்போம். அதில் குறை கண்டால் அவரை மருத்துவரென்று முழுமனதுடன் கூற மாட்டோம். அதே போன்று மதங்களுக்கு என்றும் சில தகுதிகள் உள்ளன. இவற்றை செய்தால் தான் அந்த மதத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்படும்.

1.இறைவன் முன்னிலையில் அனைவரும் சமமாக கருதப்படவேண்டும்.

2. சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

இது போன்ற முக்கியமான விசயங்கள் ஏரளாமான மதங்களில் இருப்பதில்லை. ஆனால் இஸ்லாம் இறைவனிடம் அங்கீகாரம் பெற்ற உண்மையான மார்க்கமாக இருப்பதால் இதில் எல்லா நல்ல விஷயங்களும் உள்ளடங்கி தனித்து நிற்கின்றன.

இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம்

மனிதர்கள் மத்தியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு ஏற்பட்டு சிலரை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்துப்படுவதையும் தீண்டாமை தலைவிரித்தாடுவதையும் காண்கிறோம். இந்த தீண்டாமைக்கு ஓரே மருந்தாக இஸ்லாம் மட்டுமே உள்ளது.

 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْ

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்: 49:13)

இவ்வசனத்தின் மூலம் இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் ஒரு ஆண், ஒரு பெண் மூலமே உருவாகியவர்கள்தான் என்பதை கூறுவதின் மூலம் தீண்டாமையெனும் மனிதநேயமற்ற செயலை இஸ்லாம் தகர்த்தெறிகிறது. ஆனால் மற்ற மதங்களில் ஏதாவது ஒரு விதத்தில் இத்தீண்டாமை ஊடுருவுவதை இன்று வரை காணமுடிகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை பொறுத்தவரை பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கிறது. கடவுளின் நெற்றியில் இருந்து பிறந்தவர் பிராமணர் என்றும், தோள் புஜத்திலிருந்து பிறந்தவர் வைஷியர் என்றும், தொடையிலிருந்து பிறந்தவன் சத்திரர்; என்றும் காலின் பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரர் என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த வித்தியாச படைப்பை தங்கள் கடவுள்களே விதிப்பதாகவும் தங்களுடைய வேதத்தில் பதிவு செய்துள்ளனர்.

தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானவர்களில் சூத்திரர்களே அதிகம். இவர்களுக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் தங்களுக்கு மேல் ஜாதியினர் எதிரில் வந்தால் தன் தோளில் உள்ள துண்டை எடுத்து இடுப்பில் கட்டி, குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும். மேல் ஜாதியினருக்கு முன்னால் செருப்பணிந்து நடக்கக் கூடாது. அவர்கள் குடிக்கும் டம்ளரில் டீ குடிக்கக்கூடாது. இதுபோன்ற இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இச்செயல்களின் காரணத்தால்தான் கடவுள் மறுப்பு இயக்கம் என்ற பெயரில் தவறான கொள்கைவாதிகள் உருவாகினர்.

இந்த முடிவுக்கு வந்ததற்கு காரணம் எங்கள் மதத்தில் நடக்கின்ற தீண்டாமை எனும் பெருங்குற்றம்தான் முழுக்காரணமாகும் என தானாகவே ஒப்புதல் தருகின்றனர். இந்த தீண்டாமை எனும் பாவச்செயலை ஒழிப்பதற்காக பெரியார் போன்ற தலைவர்கள் எல்லாம் முயற்சி மேற்கொண்டார்கள். என்றாலும் அனைவருடைய முயற்சி முழுவதும் தோல்வியடைந்து தீண்டாமை எனும் கொடுஞ்செயல் இன்றுவரை நம் தமிழகத்திலேயே சில கிராமங்களில் இருந்து வருவதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. ஆனால் இறைமார்க்கமான இஸ்லாம் மாத்திரம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தீண்டாமையை ஒழித்துக் காட்டியது.

ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

‘மக்களெல்லாம் புறப்படும் இடத்திலிருந்து நீங்களும் புறப்படுங்கள்” என்பதை விளங்கிட நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக உள்ளது.

(அல்குர்ஆன்: 2:199)

இந்த வசனத்தின் பின்னணியை தெரிந்தால் இஸ்லாம் எவ்வாறு மனிதர்களிடம் இருந்த பகுபாடுகளை களைந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஹஜ் கடமையின் போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் ‘அரஃபாத்’ திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் ‘முஸ்தலிஃபா’ எனும் இடத்தில் தங்குவார்கள். ‘முஸ்தலிஃபா’ என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், ‘அரஃபாத்’ என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு வெளியேயும் அமைந்துள்ளது.

உயர்ந்த குலத்தவரான தாங்கள் மட்டும் புனித எல்லையில் தங்கி விட்டு மற்றவர்களை அங்கே தங்குவதைத் தடுத்து வந்தனர். ‘அரஃபாத்’ என்பது ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக அவர்களால் கருதப்பட்டது.

இஸ்லாம் இந்தத் தீண்டாமையையும் ஒழித்துக் கட்டியது. உயர்ந்த குலத்தைச் சேர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களையும் மற்ற மக்களுடன் போய் ‘அரஃபா’ திடலில் தங்குமாறு இவ்வசனத்தின் மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் உலக மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி சாதி, குலம், மொழி, இனம் காரணமாகக் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இஸ்லாம் குழி தோண்டிப் புதைத்தது.

عنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
«كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ، وَكَانُوا يُسَمَّوْنَ الحُمْسَ، وَكَانَ سَائِرُ العَرَبِ يَقِفُونَ بِعَرَفَاتٍ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ، ثُمَّ يَقِفَ بِهَا، ثُمَّ يُفِيضَ مِنْهَا» فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ} [البقرة: 199]

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் -புனித எல்லையை விட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) ‘உறுதிமிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டுவந்தனர்.

மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் ‘மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” எனும் (அல்குர்ஆன்: 2:199) ஆவது இறை வசனமாகும்.

(நூல்: (புகாரி: 4520) )

சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.

கடவுளை வணங்குவதற்கு ஒரு சட்டம் கூறினால் அதிலும் ஏழை-பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை கற்பிக்கின்றனர். கடவுளை வணங்குமிடத்திலும் சில ஜாதியினர் வரக்கூடாது என்றும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றும், சில கோயில்களுக்கு முற்றிலுமாக போகக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண்கிறோம். இறையில்லங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக உள்ளவை கஅபத்துல்லாஹ் எனும் இறையில்லமாகும். இந்த இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்ற எவரும் போகலாம். தொழலாம் யாரும் தடைசெய்ய முடியாது. அவ்வாறு செய்பவர் இறைவனின் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَـرَامِ الَّذِىْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ اۨلْعَاكِفُ فِيْهِ وَالْبَادِ‌ ؕ

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையையும் மஸ்ஜிதுல் ஹராமையும் விட்டுத் தடுத்தோருக்கும், அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 22:25)

வழிபாட்டுத் தலங்களில் நூறு சதவிகிதம் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வழிபாட்டுத் தலங்களின் மூலஸ்தானம் வரை சென்று வழிபட முடியும் என்ற நிலையை எவராலும் மாற்ற முடியவில்லை என்பதைக் காண்கிறோம்.

ஆனால் இந்த நிலை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசல்களில் மட்டும் இல்லை. ஏனெனில், பள்ளிவாசலின் உரிமையாளன் அல்லாஹ் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை.

அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்கு யார் வந்தாலும் அதைத் தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுப்பது பெரும் பாவம் என்று பின்வரும் வசனம் பிரகடனம் செய்கிறது.

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ ؕ لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன்: 2:114)

இது போன்ற அறிவுரைகளின் காரணமாகவே, இஸ்லாத்தில் தீண்டாமையைக் காண முடியவில்லை. எந்தக் காரணத்துக்காகவும், முஸ்லிம்களில் எவரையும் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது என்று தடுப்பது மிகப் பெரும் பாவமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆலயமான கஃபாவில் தொழுத போது அவர்களை எதிரிகள் தொழ விடாமல் தடுத்தனர்.

இதைப் பற்றி (அல்குர்ஆன்: 96:9-18) வசனங்களில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறான்.

96:9 اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰىؕ‏ , 96:10 عَبْدًا اِذَا صَلّٰىؕ‏  , 96:11 اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ‏ , 96:12 اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏ , 96:13 اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ , 96:14 اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ , 96:15 كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ ۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ , 96:16 نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ۚ‏ , 96:17 فَلْيَدْعُ نَادِيَهٗ ۙ‏  , 96:18 سَنَدْعُ الزَّبَانِيَةَ ۙ‏

‘அவர்கள் தமது சபையைக் கூட்டட்டும். நான் என் சபையைக் கூட்டுகிறேன்” என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்படுவது, அல்லாஹ்வை அஞ்சும் மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களின் கழுத்தில் ஒட்டகக் குடலைப் போட்டு கேலி செய்தனர். அவர்கள் அனைவரையும் வேரற்ற மரங்களாக இறைவன் வீழ்த்தினான்.   

 (பார்க்க: (புகாரி: 240) , 520, 2934, 3185, 3854, 3960)

எனவே அல்லாஹ்வின் பள்ளிவாசலில் அல்லாஹ்வைத் தொழ வரும் மக்களைத் தடுப்பது மிகவும் கடுமையான குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற முக்கியமான விஷயங்கள் இஸ்லாம் தனித்து நிற்பதால் இஸ்லாம் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. 

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம்.. பரிசுத்தமான உன்னதமான மார்க்கம் என்பதால் உயர்ந்து இருக்கிறது. ஆகவே இந்த மார்க்கத்தை கடைசிவரை பின்பற்றி வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.