தாழ்த்தப்பட்டவர் குதிரையில் செல்வதா..?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

தாழ்த்தப்பட்டவர் குதிரையில் செல்வதா? இளைஞரைக் கொலை செய்த உயர்சாதியினர்

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் வயலுக்குச் சென்று வருவதற்கு வசதியாக ஒரு குதிரையை விலைக்கு வாங்கி, அதில் பயணம் செய்து வந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நமக்கு முன் குதிரையில் அமர்ந்து செல்வதா? இது நமக்கு அவமானம் எனக் கருதிய உயர் சாதியினர் இனிமேல் குதிரையில் செல்லக் கூடாது. நடந்து தான் செல்ல வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலை பிரதீப் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 29.03.18 அன்று குதிரையில் சென்ற பிரதீப்பை மர்ம நபர்கள் சிலர் மிரட்டி, குதிரையில் இருந்து இறக்கி, தனியாக அழைத்துச் சென்று, அடித்துக் கொன்று விட்டனர். இது குறித்து காவல் துறையில் புகார் அளித்த பிரதீப்பின் தந்தை ‘எனது மகனுக்கு குதிரை மீது பிரியம் அதிகம். அதுவே அவன் கொல்லப்படுவதற்கு காரணமாகி விட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் குதிரையில் செல்லக் கூடாது. எனவே அந்த குதிரையை விற்று விடு! என்று உயர்சாதியினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலின் தொடர்ச்சியாக என் மகன் கொல்லப்பட்டு விட்டான்’ என்றார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தாழ்த்தப்பட்ட இளைஞரின் கொலை தொடர்பாக உயர்சாதியைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் என்பது பா.ஜ.க.வின் ரோல்மாடல் மாநிலம். இவர்கள் இந்தியாவில் ராமராஜ்ஜியம் அமைத்தால் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இப்படித்தான் நாடு முழுவதும் கொல்லப்படுவார்கள் என காட்டி இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் இதிலிருந்து உரிய பாடம் படித்து ராமராஜ்ஜியம் அமைக்க நினைக்கும் பி.ஜே.பி.யினரின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதில் தான் அவர்களின் உயிர் வாழும் உரிமையே அடங்கி இருக்கிறது என்பதை அவர்கள் புரிய வேண்டும். புரிந்து நடக்க முன் வருவார்களா?

Source : unarvu ( 06 / 04 / 2018 )