உலகில் அதிக வரி விதிக்கப்படும் இந்தியா

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

உலகில் அதிக வரி விதிக்கப்படும் இந்தியா

இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. அதிக குழப்பங்களைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவில் வரி விதிக்கும் நாடு இந்தியா என உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ‘ஜி.எஸ்.டி. 5 வரி விகிதங்களைக் கொண்டதாக உள்ளது. 5 சதவீத வரி, 12 சதவீத வரி, 18 சதவீத வரி, தங்கத்தின் மீது தனியாக 3 சதவீதமும், வைரத்தின் மீது 0.25 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள முத்திரைத் தாள் கட்டணங்கள், மின்சாரத்திற்கான வரி, மதுபானங்கள் மீதான வரி ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படாமல் உள்ளன. இதுபோக தமிழக அரசு கேளிக்கை வரியை ஜி.எஸ்.டி.க்கு மேல் விதிக்கிறது.

மகாராஷ்டிர அரசு மோட்டார் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறது. இவ்வாறு குழப்பான சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் விதிக்கப்படுகிறது என உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. உலக அளவில் 49 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஒரே வரி விகிதம் உள்ளது. 28 நாடுகளில் இரண்டு வரி விகிதம் உள்ளது. இத்தாலி, லக்ஸம்பர்க், பாகிஸ்தான், சானா, இந்தியா ஆகிய ஐந்தே ஐந்து நாடுகளில் மட்டும் தான் நான்கு வரி விதிப்பு முறை உள்ளது. அதிலும் இந்தியாவில் மட்டும் தான் பல்வேறு விகிதங்களில் அதிக வரி உள்ளது என்று உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. 28 சதவீத வரி விதிப்பில் இருந்த 228 பொருட்கள் 50 பொருட்களாகக் குறைக்கப்பட்டன. மாநில அரசுகளுடன் இணைந்து ஜி.எஸ்.டி.யைச் செயல்படுத்துவதில் பல குழப்பங்கள் உள்ளன.

ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தும் விதமாக 12 சதவீத மற்றும் 18 சதவீத வரிகளை இணைத்து ஒரு வரி விகிதமாக்கும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சமீபத்தில் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக வங்கி ‘ஜி.எஸ்.டி.யை திரும்பத் திரும்ப பல மாதங்களுக்கு சரி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்’ எனக் கூறியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது ‘இந்தியாவில் வருமான வரியையே நீக்கி விட வேண்டும். இதன் மூலம் இந்தியா வளர்ச்சியடையும்’ என்று பா.ஜ.க.காரர்கள் கூறினார்கள். இப்போது இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணத்தை எல்லாம் வங்கிகளுக்குள் கொண்டு வந்து, வருமான வரி விதிப்பதோடு, அதிக அளவில் ஜி.எஸ்.டி.யையும் விதிக்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வங்கியில் இருப்பு வைத்துள்ள ஏழைகளுக்கு அபராதத்தோடு ஜி.எஸ்.டி.யும் விதிப்பது இந்தக் கொடுமைகளில் உச்ச கட்டமாகும். இது தவிர மாநில அரசுகள் தனியாக வரி விதிக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் வேறு தனியாக வரி விதிக்கின்றன. இந்த வரியைக் கட்டுவதற்குள் பொது மக்களின் நாக்கு தள்ளி விடுகிறது.

Source : unarvu (23/03/2018 )