குர்ஆன் ஒரு மருத்துவ விஞ்ஞானி
இன்றைய நவீன அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு, தீர்க்கதரிசனமாக குர்ஆன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் நாம் கண்கூடாக இதைப் பார்த்திருக்கிறோம். கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை ஆழமாக ஆராய்ந்தால், ஐந்து மருத்துவக் கருத்துகளை, மிக சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும், மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில், மகப்பேறு மருத்துவர்களால் சென்ற பத்தாண்டு வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு விஷயத்தை, மிக அழகான சம்பவம் மூலம் விளக்குகிறது. மரியம் என்ற அத்தியாயத்தில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள்.
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார். (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிலிருந்து: “(மர்யமே!) கவலைப் படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார். “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக!
இந்த வசனத்தின் கருத்துக்களை சற்று ஆழமாக ஆராய்ந்தால், இதில் கீழ்க்காணும் மருத்துவ அறிவியல் அடங்கியுள்ளது.
1.தண்ணீரில் பிரசவம் நடந்தால், பிரசவ வேதனை குறையும்.
2.பிரசவத்தின் போது தண்ணீர் பருகினால், பிரசவம் மிக வேகமாக இலகுவாக முடியும்.
3.பிரசவத்தின் போது தண்ணீர் பருகுவதன் மூலம், தாய்ப்பால் சுரக்கும் ஹோர்மோன்கள் அதிகம் சுரந்து, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்
4.பிரசவத்தின் போதும், அதற்குப் பின்னும், பெண்ணுக்கு இரும்புச் சத்து என்னும் Hemoglobin அதிகம் தேவைப்படுகிறது. அதனால் இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீட்சம் பழத்தைப் பற்றி குர்ஆன் கூறுகிறது
5.தண்ணீர்ச் சத்தும், இரத்த சோகையும் சரியானால், கண்ணில் மாற்றம் தெரியும், இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
குர்ஆன் இந்த வசனத்தில், மரியம் (அலை) அவர்களுக்கு, தாங்க முடியாத பிரசவ வேதனை ஏற்பட்ட போது, தண்ணீரில் பிரசவம் நடந்து வலி இன்றி முடிந்தாக கூறுகிறது. சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, தண்ணீரில் பிரசவம் என்று ஒன்று உள்ளது என்று, மருத்துவ உலகமே அறிந்திருக்கவில்லை. அப்படி யாராவது அன்ரைக்குச் சொல்லி இருந்தால், அவரை மருத்துவ அறிவு இல்லாதவர் என்று எள்ளி நகையாடும் நிலையே இருந்தது. சரி, நார்மலாக பிரசவத்தின் போது என்ன உடலியல் மாற்றங்கள் நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு, தண்ணீர் பிரசவத்துக்குச் சென்றால், விளங்க வசதியாக இருக்கும்.
மனித உடலில் மூலையில் pituitary gland என்ற நாளமில்லா சுரப்பி உள்ளது. இதில் பின்புறம் இருக்கும் posterior pituitary இரண்டு ஹோர்மோன்களைச் சுரக்கிறது.
1. oxytocin 2. vasopressin இதில் oxytocin என்ற ஹோர்மோன் தான், பிரசவ நேரத்தில், (கர்ப்பப்பை uterus மற்றும் கற்பவாய் cervix விரிவடைவதன் மூலம் தூண்டப்பட்டு) அதிகம் சுரக்கிறது. இந்த ஹோர்மோன், கர்ப்பப்பையை, நன்றாகச் சுருங்கி சிசுவைக் கீழே தள்ளவும், கர்ப்பவாய் (cervix), மற்றும் யோனி குழாய் (vaginal canal) மிருதுவாக விரிவடையச் செய்யவும், இதன் மூலம் குழந்தை பாதுகாப்பாக பிறக்கவும் உதவுகிறது. மேலும் இந்த ஹோர்மோன் தான், குழந்தை பிறந்த உடன், மார்பகத்தில் உற்பத்தியான பால், வெளிவர உதவுகிறது.
(பாலை உருவாக்க anterior pituitary இல் இருந்து prolactin என்னும் ஹோர்மோன் உதவுகிறது vasopressin என்னும் ஹோர்மோன், உடலில் தண்ணீரின் அளவைக் கட்டுபடுத்த உதவுகிறது. இந்த இரண்டு ஹோர்மோன்கள் சுரந்து வெளியாகும் இடம், ஒரே இடத்தில், ஒன்றோடு ஒன்று ஒட்டியே உள்ளது. சரி இனி தண்ணீர் பிரசவம் பற்றி American Academy of Pregnancy -என்ன கூறுகிறது?
Water Birth என்பது லேசான சூடான தண்ணீர் தொட்டியில் பிரசவம் நடப்பது. இதில், வலி ஏற்பட்ட உடன் தண்ணீரில் இருந்து விட்டு, டெலிவரி நேரம் மட்டும் வெளியில் வந்து குழந்தை பெறுவது அல்லது குழந்தை பிறக்கும் வரை தண்ணீரிலே இருப்பது. இந்தக் கோட்பாடுக்கு அடிப்படையாவது, சிசு ஒன்பது மாதங்கள் கருவறையில் இருக்கும் போது amniotic fluid என்னும் தண்ணீரில் தான் உள்ளது, அதுபோல் அதே சூழலில் பிறந்தால் குழந்தைக்கு மிருதுவாகவும், தாய்க்கு அழுத்தத்தைக் குறைப்பதாகவும் உள்ளது. தண்ணீரில் இருக்கும் போது, oxytocin ஹார்மோன் நார்மலை விட அதிகமாகச் சுரக்கப்பட்டு, வெகு விரைவாக கற்பப்பை சுருங்கி, கற்பப்பை வாய் விரிந்து, வலி குறைவாக , விரைவாக பிரசவம் ஆகிறது.
தண்ணீர்ப் பிரசவத்தின் பின் பகுதியில் பெண்களின் ஆற்றலை அதிகரிக்கிறது ·தண்ணீர் இனிமையான, சுகமான, ஓய்வை கொடுக்கிறது. ·தண்ணீரின் மிதப்பு தன்மையால், உடல் எடை குறைவதோடு, தடையில்லாத அசைவு, மற்றும் புதிய நிலையைத் தருகிறது. ·தண்ணீரின் மிதப்புத் தன்மையால், கர்ப்பப்பை நல்ல முறையில் சுருங்கி, நல்ல இரத்த ஓட்டம் தாயின் உடலில் ஏற்பட்டு அதனால், கர்ப்பப்பை தசைகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதன் மூலம், பிரசவ வலி குறைகிறது, மேலும் குழந்தைக்கு நல்ல ஆக்சிஜென் கிடைக்கிறது. ·தண்ணீரில் மூழ்குவதால், இரத்த அழுத்தம் குறைந்து , மன அழுத்தம் குறைகிறது. ·தண்ணீர், மன அழுத்தம் சம்பந்தமான ஹார்மோன்களைக் குறைப்பதோடு, தாயின் உடலில் வலியைக் குறைக்கும் எண்டார்பின் (endrophin) என்னும் வேதிப்பொருள் உருவாக உதவுகிறது.
தண்ணீர், பெண்ணின் perineum என்னும் கீழ்ப் பகுதி நன்றாக மிருதுவாகவும், ரிலாக்ஸ் ஆக உதவுவதால், அந்தப் பகுதியில் பிரசவத்தால் காயம் ஏற்படுதல், தையல் போடுதல் தேவை வெகுவாகக் குறைகிறது. தண்ணீரால், பெண்ணின் உடல் ரிலாக்ஸ் ஆவதால், மனமும் relax ஆகிறது. அதனால், அந்தப் பெண்ணால், பிரசவ முறைகளில் நன்றாகக் கவனமும், ஒத்துழைப்பும் கிடைக்கிறது. ·தண்ணீர் ஒரு தனிமையான உணர்வைப் பெண்ணுக்கு ஏற்படுத்துவதால் , பெண்ணின் பயம் , மன உளைச்சல், போன்றவை வெகுவாகக் குறைகிறது.
குழந்தை கருவறைக்குள் எந்த சூல்நிழையில் இருந்ததோ, (தண்ணீர் சூழ்ந்த சூழ்நிலை), அதே நிலை கிடைக்கிறது. குழந்தைக்கு நல்ல ஆக்சிஜென் கிடைப்பதால், பின்னர் மூளை வளர்ச்சி குறைவு, போன்ற நிலை ஏற்படும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. மகப்பேறு மருத்துவ உலகிற்கே ஜாம்பவானான ( ROYAL COLLEGE OF OBSTETRICS and GYNAECOLOGY )என்ற இங்கிலாந்த் நாட்டில் உள்ள அமைப்பு இதைப் பெரிதாக ஆமோதித்து உள்ளது.
இதே வரலாற்றை விளக்கும், இன்னொரு வசனத்தில், வானவர், மரியம் (அலை) அவர்களிடம், பேரீட்சம் பழத்தை உண்டு, (ஆற்று நீரை) பருகி கண்குளிர்ந்து இருப்பீராக என்று கூறுகிறார். இப்போதும், பெண்களுக்கு பிரசவ வேதனை அதிகம் இருக்கும் போது, தண்ணீரை அதிகம் குடிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படி தண்ணீர் குடித்தால் , வேதனையால், ஏற்படும் தண்ணீர் சத்துக் குறைவு வர வாய்ப்பு இல்லாமல் போய் விடுவதோடு, பிரசவமும் எளிதில் முடியும் என்று, சொல்வார்கள்.. இதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளன. அதைச் சற்று விவரமாகப் பார்ப்போம். ஏற்கனவே, Posterior Pituitary இல் இருந்து தான் Oxytocin என்னும் பிரசவத்தைத் தூண்டும் ஹோர்மோனும், vasopressin என்னும் உடலில் தண்ணீர் அளவைக் கட்டுக்குள் வைக்கும் ஹார்மோன் சுரக்கிறது என்று பார்த்தோம்.
இந்த இரண்டு ஹார்மோன் சுரக்கும் இடங்கள் தனித் தனியே இல்லாமல், ஒன்றோடு ஒன்று ஒட்டியே உள்ளது என்று பார்த்தோம். Vasopressin ஹார்மோனின் வேலை, உடலில் தண்ணீர்ச் சத்து குறையும் போது, கிட்னியின் மூலம் இது சமிக்ஞை பெற்று, இது அதிகம் சுரந்து, கிட்னியில் வேலை செய்து, உடலில் உள்ள மீதித் தண்ணீர் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும். உடலில் தண்ணீர் அதிகரித்து, தண்ணீர் மூலம் உடலுக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டால், இந்த ஹார்மோன் சுரப்பு இயல்பை விட குறைந்து, உடலில் இருந்து தண்ணீரைக் கிட்னியின் மூலம் வெளியில் தள்ளுகிறது. இப்படி உடலில் தண்ணீர் அளவை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கிறது. பிரசவத்தின் போது, தண்ணீர் குடித்தால், உடலில், தண்ணீர் அளவு அதிகரிக்கும் போது, தண்ணீரை உடலில் இருந்து வெளியேற தயார் செய்ய ,(மேற்சொன்ன அறிவியல் விதிப்படி)
இந்த உடலில் Vasopressin ஹார்மோன் சுரப்பது குறையும். இந்த ஹார்மோன் சுரக்கும் இடமும், பிரசவத்தை எளிதாக்கும் oxytocin ஹார்மோன் சுரக்கும் இடமும் ஒன்றோடு ஒன்று ஒட்டியே ஒரே இடத்தில் இருப்பதால் , Vasopressin ஹார்மோன் சுரப்பது குறையும் போது, அதே இடத்தில் உள்ள ஹார்மோன் சுரக்கும் செல்கள், குறைந்த அந்த வேலையை ஈடு செய்யும் விதமாக, அதிக ஷீஜ்ஹ்tஷீநீவீஸீ சுரந்து, கர்ப்பப்பை வெகு சீக்கிரம் சுருங்கி ,கருப்பை வாய் இலகுவாக விரிந்து பிரசவம் சற்று சிரமம் இல்லாமல் முடிகிறது. (மகப்பேறு மருத்துவர்கள், பிரசவத்தின் போது, பிரசவம் இலகுவாக, பாதுகாப்பாக, சீக்கிரம் நடக்க, இந்த oxytocin ஹார்மோனை இன்ஜெக்சன் வடிவில் கொடுப்பார்கள்.). தண்ணீர் குடிப்பதைப் பற்றி, சற்றும் அலட்டிக்கொள்ளாமல், பதினாலு நூற்றாண்டுக்கு முன்பு, அறிவியல் கண்டுபிடிப்பு இல்லாத காலத்தில், சர்வ சாதரணமாக இன்றும், மருத்துவர்கள் கூட விளங்க சற்று கஷ்டமான கருத்தை குர்ஆன் கூறி, அது இறைவனின் வேதம் தான் என்று இன்றளவும் மெய்பித்து உள்ளது.
இதைப் பார்க்கும்முன், பிரசவித்த உடன், தாய்ப்பால் எப்படி சுரக்கிறது என்பதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம். தாய்ப்பாலை உண்டு பண்ணும் ஹோர்மோன் PROLACTIN என்பது அதே pituitary gland முன்பகுதியான anterior pituitary gland இல் இருந்து சுரக்கிறது. கற்பம் தரித்தது முதல், பிரசவம் ஆகும் வரை இந்த ஹார்மோன் சுரப்பு இல்லாமல் இருந்து (பால் சுரப்பதைத் தடுத்து), குழந்தை பிரசவித்த உடன் இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது. குழந்தை தாயின் மார்பை சப்பும் போது, சில வினாடிகளில், இந்த ஹார்மோன் ஊற்றென வெளியாகி, பால் சுரப்பை மார்பில் உண்டு பண்ணுகிறது. மார்பில் சுரந்த பாலை, மார்பை விட்டும் nipple என்னும் மார்பகக் காம்புத் துவாரம் வழியே வெளிக் கொண்டு வருவது, இந்த Oxytocin என்ற ஹார்மோன். OXYTOCIN ஹார்மோன் வேலை, பிரசவத்தோடு நின்று விடாமல், பிரசவத்திற்குப் பின்னும், பால் குடி தொடரும் வரை சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர்கிறது.
பால் கொடுக்கும் தாய்மார்கள் அநேகம் அடுத்த கர்ப்பம் ஆகமாட்டார்கள் என்பதற்குக் காரணம், பால் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது, பாலைச் சுரக்க வைக்க PROLACTIN ஹார்மோன் உடலில் இரத்தத்தில் அதிகம் இருக்கும் போது, அது, Ovulation என்னும் கருமுட்டை வெளியாவதைத் தடுக்கும். (இதற்கு விதி விலக்கும், உண்டு) OXYTOCIN ஹார்மோன், மார்பில் (prolactin) மூலம்) சுரந்த பாலை, மார்பகச் சுரப்பிகளை, நன்கு சுருங்க வைத்து , குழந்தை சப்பியவுடன், வெளியேறுகிறது. இதன் சுரப்புக்கும், குழந்தை மார்பைச் சப்புவது அவசியம். அதனால் பிரசவத்தின் போது தண்ணீர் குடித்தால், மேல் சொன்ன அறிவியல் காரணங்களால், (OXYTOCIN ,VASOPRESSIN)சுரக்கும் செல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும்) OXYTOCINஅதிகம் சுரந்து, தாய்பால் மார்பில் இருந்து வெளிவர உதவுகிறது.
மரியம் (அலை) அவர்களை வானவர் ஜிப்ரீல், ‘பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு, கண்குளிர இருப்பீராக‘ என்று கூறினார் என்று கூறுகிறது. இந்த இடத்தில் குர்ஆன் ,பிரசவத்துக்கும் பேரீச்சம் பழத்திற்கும் ஒரு நேர்முறையான சம்பந்தம் உள்ளது என்பதை தெரிவிக்கிறது. அது பற்றிப் பார்ப்போம். இன்றைய நவீன மகப்பேறு மருத்துவர்கள், எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போதும், பிரசவத்திற்கு பின் மூன்று மாதத்திற்கு, இரும்புச் சத்து மாத்திரை தருகிறார்கள். காரணம் பொதுவாகவே, பெண்களுக்கு மாதமாதம், ஏற்படும் மாதவிடாய் காரணமாக இரத்த அளவு குறைவாகவே இருக்கும். மேலும் கர்ப்பமும், பிரசவமும், அவர்களின் இரும்புச் சத்து தேவையை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பம் இரும்புச் சத்து தேவையை எவ்வளவு கூட்டுகிறது? என்று அறிவியல் பூர்வமாகப் பார்ப்போம். Increased iron demand during pregnancy – Fetus and placenta – (சிசு,நஞ்சு அதிக தேவை) 300mg Maternal Hb mass expansion, 500mg Loss in urine/sweat/gut (சிறுநீர், வியர்வை, குடல் மூலம் இழப்பு) 200mg Loss during DELIVERY (பிரசவ இரத்தப் போக்கு மூலம் இழப்பு) 150- 200mg Lactation (தாய்பால் கொடுப்பதால், அதிகத் தேவை) 150-200mg இவ்வளவு அதிக அளவு, கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுவதால்,
இதை, உடல் தன்னால் ஓரளவுக்கு மேல், உற்பத்தி பண்ண முடியாது. அதனால், இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே கற்பத்தால், குமட்டல், வாந்தி இருக்கும் போது, இரும்புச் சத்து மாத்திரையால் இன்னும் குமட்டல் அதிகரிக்கலாம். எனவே உணவு மூலம், எந்தக் குமட்டலும் இல்லாமல் , இயற்கையாக இனிப்பு சுவையுடன் இரும்புச் சத்தை அதிகரிக்கும் உணவு பேரீச்சம் பழம் மட்டுமே, என்று அறிவியல் கூறுகிறது. 100 கிராம் பேரீச்சபழத்தில், சராசரியாக 1.15 mg இரும்புச் சத்து உள்ளது. இது போக பேரீச்சம் பழத்தில், பொட்டசியம், கால்சியம், மக்நீசியம், நார்ச்சத்து, வைட்டமின் B காம்ப்ளெக்ஸ் ,காப்பர் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இப்படி பிரசவத்திற்கு முன்னும், பின்னும் சுவையான iron சத்தின் அவசியத்தையும் சர்வ சாதாரணமாக, எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லாத காலத்தில், அழகாகக் கூறி, இது காட்டாயம் இறை வேதமே என்று நிரூபிக்கிறது.
குர்ஆன் ‘தண்ணீர் பருகியும், பழத்தை உண்டும் கண் குளிர இருப்பீராக’ என்று கூறுகிறது. இதில் அறிவியல் பூர்வமான என்ன உண்மை உள்ளது என்று பார்ப்போம். பொதுவாக ஒருவருக்கு தண்ணீர்ச் சத்து குறையும் (dehydration) போது, ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று , கண் குழிவிழுந்து போதல், மற்றும் கண் மங்குதல். கண் கருத்து வெட்பமாக உணருதல். நீர்ச் சத்து சரியாகிய உடன், கண்ணைச் சுற்றி உள்ள குழி போன்றது சரியாகி விடும். கண் மங்குதல் சரியாகி விடும் மேலும் கண் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும் என்று இன்றைய நவீன மருத்துவ உலகம் கூறுகிறது. இதை நாம் பலர் பலமுறை உணர்ந்துள்ளோம்.
அது போல, இரும்புச் சத்து குறைந்து, இரத்தச் சோகை ஏற்படும் போது, கண் இமையின் உள்பகுதியில் தான், சிவப்பு நிறம் குறைந்து வெளிர்த்துப் போக ஆரம்பித்து, மந்தமான பார்வயைக் கொடுக்கும். இரத்த அளவு சரி செய்யப்பட்டவுடன், இந்த அறிகுறிகள் படிப்படியாக சரியாகி விடும். எவ்வளவு பெரிய இரண்டு விசயங்களை குர்ஆன் மிக சாதரணமாக கூறியுள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த சில வசனங்களிலே , நம் அறிவுக்குப்பட்ட ஐந்து மருத்துவ கருத்துக்கள் என்றால், குர்ஆன் அடிக்கடி கூறுவது போல், “இதில் உள்ளதைச் சிந்திப்பீராக” என்ற கோணத்தில் இந்தக் குர்ஆனைச் சிந்தித்தால், அறிவியலின் பெரிய களஞ்சியமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Source: unarvu 23/01/2018