மாமனிதர் நபிகளாரின் உணவு
உண்டு சுகிக்கவில்லை
மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம். மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம் என விடையளித்தார். அறிவிப்பவர் : உர்வா(புகாரி: 2567, 6459)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன். அதற்கு அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை என்றார். தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சலிக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம் என்று விடையளித்தார். அறிவிப்பவர் : அபூஹாஸிம்(புகாரி: 5413)
நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹஹுரைரா (ரலி) கூறுகிறார்.(புகாரி: 5374)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.(புகாரி: 5416, 6454)
ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே என விளக்கமளித்தார். (புகாரி: 5423)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி சாப்பிடுங்கள் என்று அனஸ் (ரலி) கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை எனக் கூறினார். அறிவிப்பவர் : கதாதா (ரலி)(புகாரி: 5385, 5421, 6457)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். (புகாரி: 2069, 2508)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கு அவர் என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார் என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) அறிவிக்கிறார். ((முஸ்லிம்: 3802)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன் என அபூ ஹஹுரைரா (ரலி) மறுத்து விட்டார். (புகாரி: 5414)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் குழம்பு ஏதும் உள்ளதா? எனக் கேட்டனர். வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே என இரு முறை கூறினார்கள். (முஸ்லிம்: 3824)
நான் எனது வீட்டின் நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். அருகே வா என்று அவர்கள் அழைத்ததும் அருகில் சென்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். தமது வீட்டுக்குச் சென்றவுடன் காலை உணவு ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் இருக்கிறது என்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். குழம்பு ஏதும் உள்ளதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லை என்று குடும்பத்தினர் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வாருங்கள் என்றார்கள். வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர். எனக்கும், அவர்களுக்கும் தலா ஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள். மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டு இன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார். (முஸ்லிம்: 3826)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்; எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கான உணவைத் தயார் செய்வீராக! என்று அபூ ஷுஐப் (ரலி) தமது ஊழியரிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ ஷுஐப் (ரலி) இவருக்கும் அனுமதி அளிக்கிறேன் என்றார். (புகாரி: 2081, 2456, 5434, 5461)
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டனர். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அவ்விருவரும் பசி என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன் என்றார்கள்… (ஹதீஸ் சுருக்கம்).(முஸ்லிம்: 3799)
இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும். ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை. செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை.
*அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?
*குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?
*காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?
*அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?
*ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?
*முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?
*காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிலிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?
*பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் ;அளவுக்கு அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்துள்ளது எப்படி?
இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும். இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரே? வேறு வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே! அது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுக போகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை….