ரகசியம் ஓர் அமானிதமே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

“நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது” என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம் ஒரு செய்தியைத் தெரிவிப்பார். அவரும் இதை ஒப்புக்கொண்டு அந்தச் செய்தியைச் செவியுறுவார். மீண்டும் அவர் தனது வேண்டுகோளைப் புதுப்பித்தவராக, “நீ இதை யாரிடமும் சொல்லி விடாதே!” என்று கேட்டுக் கொள்வார்.

இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல! பல தடவை இவ்வாறு கேட்டுக் கொள்ளும் போது, சொல்ல மாட்டேன் என்று தலையாட்டி விட்டு, செய்தியைச் சொன்னவர் இடத்தைக் காலி செய்த அடுத்த நிமிடத்தில் மற்றொரு நண்பரிடம் இதைக் கூறி விடுவார். அதுவும், இதை யாரிடமும் சொல்லி விடாதே! என்ற நிபந்தனையுடன் இந்த ரகசியத்தைச் சொல்வார். கொஞ்சமும் மன உறுத்தலின்றி, கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய கவலையின்றி அப்படியே அந்தச் செய்தியைக் கொட்டி விடுவார். கொட்ட வேண்டியதையெல்லாம் கொட்டி விட்டு கடைசியில், “இதை அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார், எனவே நீ யாரிடமும் சொல்லாதே!” என்று கேட்டுக் கொள்வார். இவரிடம் கேட்டவர் இதே நிபந்தனையுடன் அடுத்த நபரிடம் இவ்வாறே முடிச்சவிழ்ப்பார்.

ரகசியத்தைப் பரப்புவது ஓர் அமானித மோசடி!

ரகசியத்தைப் பரப்புவதில் மேற்கண்ட ரகத்தினர் ஒரு வகை! இன்னொரு வகையினர் இருக்கின்றனர். இவர்கள் ரகசியத்தைப் பரப்புவதில் தனக்கு ஆர்வமில்லாததைப் போல் நடிப்பார்கள்.

“இன்னார் என்னிடம் ஒரு செய்தியைக் கூறினார். அதை நான் பரப்ப விரும்பவில்லை” என்று கூறி நிறுத்தி விடுவார்கள். அருகிலிருப்பவர் அதை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் பலமுறை கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு வந்ததும், தனக்கு விருப்பமில்லாதது போல் சொல்லி முடிப்பார்கள். ரகசியத்தைப் பரப்புவதில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

ரகசியத்தைப் பரப்புவதில் மற்றொரு ரகத்தினர், “சொல்லட்டுமா? சொல்லட்டுமா?” என்று கேட்டு, வழிப்பறிக்காரன் கத்தியைக் காட்டி மிரட்டுவது போல் மிரட்டிக் கொண்டிருப்பார். இதன் மூலம் அவனிடத்தில் பணம் பறிப்பது அல்லது அவனை அடிமைப்படுத்தி அவனிடத்திலிருந்து ஏதாவது ஒரு வகையான இலாபத்தை அடைந்து கொண்டிருப்பார்.

இத்தகையோரிடம், நீ சொல்லடா என்று சொல்லி அவனது பயமுறுத்தல் என்ற இரும்புச் சங்கிலியை தகர்த்தெறிந்து விட்டு வெளியே வந்து விடும் போது, அவன் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி ஊர் முழுக்க அல்ல! உலகம் முழுக்க பரப்பி விடுவார். இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஒருவரிடம் ரகசியம் சொல்பவர், யாரிடமும் சொல்லாதே என்ற நிபந்தனையிட்டே அந்தச் செய்தியைச் சொல்கின்றார். அவரும் அதை ஒப்புக் கொண்டு, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த பின்னர் தான் அந்தச் செய்தியைப் பெறுகின்றார். அதன் பின்னர் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ அதைப் பரப்புகின்றார் என்றால் இவர் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுகின்றார் என்று தான் அர்த்தம்.

 وَاَوْفُوْا بِالْعَهْدِ‌ۚ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْـــُٔوْلًا‏

வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

(அல்குர்ஆன்: 17:34)

இந்த வசனத்தின்படி வாக்குறுதிக்கு மாறு செய்ததற்காக மறுமையில் பதில் சொல்லியே ஆக வேண்டும். மேலும் இவர் செய்கின்ற இந்தப் பாவம் அல்லாஹ்வுக்குச் செய்த பாவம் மட்டுமல்லாமல் அடியாருக்குச் செய்த பாவமாகும். அல்லாஹ் தனக்கு ஓர் அடியான் செய்த பாவத்தை அவன் நாடினால் மன்னித்து விடுவான். ஆனால் இந்தப் பாவம் ஒரு அடியான் இன்னோர் அடியானுக்குச் செய்த பாவமாகும். இதை சம்பந்தப்பட்ட அடியான் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

செல்லுபடியாகாத செலவாணிகள்

பாதிக்கப்பட்ட அடியான் மன்னிக்கவில்லையெனில் அதற்கு ஈடு செய்ய மறுமை உலகில் எந்தக் கரன்சியும் – செலவாணியும் செல்லுபடியாகாது. அமல்கள் என்ற செலவாணியைத் தவிர! அப்போது இதுபோன்று வாக்குறுதிக்கு மாறாக ரகசியத்தை வெளியிட்டவன் மலை மலையாகச் செய்த அமல்கள் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவனின் கணக்கில் வரவு வைக்கப்படும். அமல்கள் என்ற கரன்சி காலியாகி விட்டால் உலகில் பாதிக்கப்பட்டவனின் பாவங்கள் இவன் தலையில் கட்டப்பட்டு நரகில் தூக்கி எறியப்படுவான் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ». قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ. فَقَالَ « إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِى يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِى قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِى النَّارِ

“திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, “யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார்.

எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்” என்று சொன்னார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5037) (4678)

ரகசியத்தைப் பேணிய அபூபக்ர் (ரலி)

உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு உஸ்மான் (ரலி), “இந்த விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மானைச் சந்தித்த போது, “இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள்.

ஆகவே நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான் அவர்களை விட அபூபக்ர் அவர்கள் மீதே நான் மிகவும் மன வருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்த போது, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா குறித்து சொன்ன போது நான் உங்களுக்குப் பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது வருத்தம் இருக்கக் கூடும்” என்று கூறினார்கள். நான், ஆம் என்றேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் கூறிய போது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான் உங்களுக்குப் பதில் ஏதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள். 

அறி : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் : (புகாரி: 4005) 

ரகசியம் பாதுகாத்த ஃபாத்திமா (ரலி)

(நபி-ஸல் அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார்.

 حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ قَالَتْ
إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِنْدَهُ جَمِيعًا لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ فَأَقْبَلَتْ فَاطِمَةُ – عَلَيْهَا السَّلاَمُ – تَمْشِي لاَ وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآهَا رَحَّبَ قَالَ مَرْحَبًا بِابْنَتِي ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ ، أَوْ عَنْ شِمَالِهِ ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ إِذَا هِيَ تَضْحَكُ فَقُلْتُ لَهَا أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ خَصَّكِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالسِّرِّ مِنْ بَيْنِنَا ثُمَّ أَنْتِ تَبْكِينَ فَلَمَّا قَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم سَأَلْتُهَا عَمَّا سَارَّكِ

அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே அமைந்திருந்தது. ஃபாத்திமாவைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன்.

அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை பரப்ப நான் விரும்பவில்லை” என்று கூறி விட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த ரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி இப்போது (தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்.

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்ன போது, “எனக்கு ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக் காட்டி நினைவூட்டுவார். ஆனால் அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். என் இறப்பு நெருங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையாக இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி சென்று விடுவேன்” என்று சொன்னார்கள். ஆகவே தான் நான் உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன்.

எனது பதற்றத்தைக் கண்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! “இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது “இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ நீ தலைவியாக இருக்க விரும்பவில்லையா?” என்று ரகசியமாகக் கேட்டார்கள்.

அறி : ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 6285) , 6286, 3263

ரகசியம் காத்த அனஸ் (ரலி)
عَنْ أَنَسٍ قَالَ أَتَى عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
وَأَنَا أَلْعَبُ مَعَ الْغِلْمَانِ – قَالَ – فَسَلَّمَ عَلَيْنَا فَبَعَثَنِى إِلَى حَاجَةٍ فَأَبْطَأْتُ عَلَى أُمِّى فَلَمَّا جِئْتُ قَالَتْ مَا حَبَسَكَ قُلْتُ بَعَثَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِحَاجَةٍ. قَالَتْ مَا حَاجَتُهُ قُلْتُ إِنَّهَا سِرٌّ . قَالَتْ لاَ تُحَدِّثَنَّ بِسِرِّ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَحَدًا. قَالَ أَنَسٌ وَاللَّهِ لَوْ حَدَّثْتُ بِهِ أَحَدًا لَحَدَّثْتُكَ يَا ثَابِت

நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வர தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், “தாமதமானதற்கான காரணம் என்ன?” என்று என் தாயார் வினவினார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்” என்று பதிலளித்தேன். “அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். “அது ரகசியமாகும்” என்றேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே” என்று கூறினார்.

அறி : அனஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4891) (4533)

மாபெரும் அமானித மோசடி

இன்று மணமுடித்த மாப்பிள்ளை தனது முதலிரவில் அனுபவித்த ரகசியத்தைப் பற்றி நண்பர்களிடம் சர்வ சாதாரணமாகப் பகிர்ந்து கொள்கின்றான். அது போல் பெண்ணும் முதலிரவு ரகசியத்தைப் பற்றி தன் தோழிகளிடம் பகிர்ந்து கொள்கின்றாள். நான்கு பெண்கள் ஓரிடத்தில் கூடிவிட்டால் அவர்களிடத்தில் அதிகமாக உலவும் பேச்சு இந்த வகையான பேச்சு தான். இந்த வக்கிரமான, அக்கிரமமான ஆபாச வர்ணனைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِى إِلَى امْرَأَتِهِ وَتُفْضِى إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا

தானும் தனது மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் அவளது அந்தரங்கத்தைப் பரப்புபவன் தான் மறுமையில் அல்லாஹ்விடம் மிக மிகக் கெட்ட ரக மனிதனாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : (முஸ்லிம்: 2832) (2597)

எனவே ரகசியங்களைக் காத்து, இத்தகைய அமானித மோசடியிலிருந்து விலகிக் கொள்வோமாக!

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எம். ஷம்சுல்லுஹா