வானம்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

வானம்

வானம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது வளிமண்டலத்தையும்,அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். வானியலில் வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம். முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும்.

பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே.  பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமமானது, சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது.

நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்திநேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.

வானக்கோளம்

வானக்கோளம் (celestial sphere) என்பது ஒரு கற்பனைக் கோளம். இது பூமியை மையமாகக் கொண்டு எவ்வித ஆரத்துடனும் கற்பனை செய்யப்பட்ட ஒரு கோளம்.இந்த வானியல் கருத்து நம்மிடையே தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ளது. இதனால் வானத்தில் பூமியிலிருந்து காணப்படும் எவற்றையும் படிமத்தில் இடம் காட்டமுடிகிறது. ஒவ்வொரு வானப் பொருளுக்கும் ஆயங்கள் கொடுத்து அவைகளின் இடத்தை வரையறுக்கலாம்.

முகில் அல்லது மேகம் 

முகில் அல்லது மேகம் (cloud) என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத் துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன  இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன.

காற்று அதன் பனிநிலைக்கு குளிரும்போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவில் பெறும் போது பனிநிலையின் வெப்பநிலை உயர்ந்து சூழல்வெப்பநிலையை அடைகிறது. இவற்றை பூமியின் அடிவளிமண்டலம், மீவளிமண்டலம், இடைவளிமண்டலம் உள்ளிட்ட ஓரியல் மண்டலத்தில் காணலாம். மேகங்களைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிவியல் மேக ஆய்வியல் எனப்படுகிறது. வானிலை ஆய்வியலின் ஒரு பிரிவான வானிலை இயற்பியல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு.

மேகங்கள்

மேகங்களின் வகைகள் அதன் அமைப்பு,அமைவிடம், மூலப்பொருட்கள், வடிவம் போன்ரவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வளிமண்டலத்திலுள்ள மேகங்கள் அவை இருக்கும் அடுக்குகளின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. இலத்தீன் பெயரிடும் முறை மற்றும் பொதுவானப் பெயரிடும் முறை என்பவை அவ்விரு முறைகளாம். பூமியின் மேற்பரப்புக்கு அருகில் நெருக்கமாக உள்ள அடிவளி மண்டல அடுக்கு மண்டல மேகங்கள் இலத்தீன் பெயரிடும் முறையில் பெயரிடப்படுகின்றன. இலியூக் ஓவார்ட்டின் பெயரிடும் முறை உலகளாவிய தழுவல் காரணமாக பின்பற்றப்படுகிறது.

இத்திட்டம் முறையாக 1802 இல் முன்மொழியப்பட்டு, ஒரு நவீன சர்வதேச அமைப்புக்கான அடிப்படைத்திட்டமாக மாறியது, இத்திட்டம், மேகங்களை ஐந்து பௌதீக வகை வடிவங்களாகவும் மூன்று உயர அளவுகளாகவும் (முன்னர் இவை ஈட்டேகசுகள் என்று அறியப்பட்டன) வகைப்படுத்தியது. இந்த பௌதீக வகைகள், வெப்பச்சலன செயல்பாட்டின் தோராயமான ஏறுவரிசையில் வகைப்படுத்தப்படுகின்றன. அடுக்கியல்வடிவ விரிப்பு மேகங்கள் (சிட்ராட்டிபார்ம்), பரவிய வடிவ மேகங்கள் (சிர்ரிபார்ம்) மற்றும் திட்டுகள், உருளைகள், கோடுகள், மற்றும் இணைப்புகளால் கட்டமைக்கப்படும் அடுக்குத்திரள் வடிவ மேகங்கள் (சிட்ராட்டோகுமுளிபார்ம்), திரள்வடிவ குவியல்கள் (குமுளிபார்ம்), சிக்கலான கட்டமைப்பு கொண்ட இராட்சத திரள் குவியல்கள் (குமுலோநிம்பசு) என்பவை இந்த ஐந்து வகையான வகைபாடுகளாகும்.

பௌதீக வடிவங்கள் அவை காணப்படும் உயரத்தின் அடிப்படையில் பத்து அடிப்படை மரபு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன, அதிக உயர வகை மேகங்கள் சிர்ரோ-முன்னொட்டைப் பெறுகின்றன. மற்றும் பெரும்பாலான இடை உயரவகை மேகங்கள் ஆல்ட்டோ முன்னொட்டைப் பெறுகின்றன. இவை தவிர பெரும்பாலான மேகங்கள் மேலும் சில இனங்களாகவும் வகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

மீவளிமண்டலம் மற்றும் இடைவளி மண்டலம் ஆகியவற்றுக்கு மேலே இரண்டு பரவிய பனிமுகில் மேகங்கள் அவற்றின் முக்கிய வகைகளுக்கான பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளன. இவை அடிக்கடி காணப்படுவதில்லை. பெரும்பாலும் பூமியிலுள்ள துருவ மண்டலங்களில் காணப்படுகின்றன. சூரிய குடும்பம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள மற்ற கிரகங்கள் மற்றும் நிலவுகளின் சுற்றுச்சூழல்களில் காணப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் வெவ்வேறு வகையான வெப்பநிலை பண்புகளின் காரணமாக, அவை பெரும்பாலும் மீத்தேன், அம்மோனியா மற்றும் கந்தக அமிலம் மற்றும் நீர் போன்ற மற்ற பொருட்களால் ஆக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் ஓரியல் வளிமண்டல முகில்களை வடிவம் மற்றும் உயரநிலைளில் இருந்து பெறப்படும் பத்து அடிவளிமண்டல முகில்களாகவும் அதற்கு மேலுள்ள இரண்டு கூடுதல் முக்கிய வகைகளாகவும் வகைப்படுத்த முடியும். செங்குத்து அளவைக் குறிக்கும் மூன்று இனங்கள் திரள் மேகங்கள் வகையில் அடங்கும். ஒரு உயரடுக்கின் அளவை விட அதிகமான செங்குத்து அளவைக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட உயர அடுக்கில் உயர்ந்துள்ள மேகங்கள் குறைந்த அல்லது நடுநிலை மேகங்களாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்படுகின்றன.

அவை தோன்றுமிடம் இங்கு கருத்திற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அவற்றை பலவடுக்கு மற்றும் செங்குத்து வகை மேகங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.

 

Source: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D