இறுதி நபித்துவம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தான் இறுதி இறைத்தூதர் அவர்களுக்கு பிறகு எந்த நபியும் எந்த தூதரும் வர மாட்டார்கள். அவர்களே நபிமார்களில் இறுதியானவர்.. இதைப் பற்றி நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் இந்த உரையில் காண்போம்.. 

இறுதி நபித்துவம்
إِنَّ ” مَثَلِي وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي، كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ، إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ، وَيَعْجَبُونَ لَهُ، وَيَقُولُونَ هَلَّا وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ؟ قَالَ: فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ

‘எனக்கும், எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் அழகாக அலங்கரித்து ஒரு வீட்டைக் கட்டி விட்டு ஒரு மூலையில் செங்கல் அளவிற்கு இடத்தை விட்ட ஒரு மனிதனைப் போன்று. மக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து ஆச்சரியம் அடைந்து ‘அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த செங்கல்! நானே நபிமார்களின் முத்திரையானவன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 3535) 

தனக்கு பின்னால் வஹியோ தூதரோ வர வேண்டியதில்லை என்பதை முன்னறிவிப்புச் செய்யும் விதமாக, வீட்டை தூதுத்துவத்துக்கும் குறையை முழுமைப்படுத்துகின்ற செங்கலை தனக்கும் உதாரணமாகக் கூறியுள்ளார்கள். இன்னும் நபிமார்களின் முத்திரை என்றும் சாதாரணமான மக்களுக்கும் விளங்கும் விதமாகக் கூறியுள்ளார்கள். ஒரு பொருளை முத்திரை (சீல்) வைத்து அடைத்து விட்டால் அது திறக்கப்படக் கூடாது.

அதுபோலத் தான் தூதுத்துவம் என்பதும், தான் வந்ததால் முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே தூதுத்துவம் அடைக்கப்பட்ட பொருளைப் போன்று ஆகிவிட்டது என்பதைக் குறிக்கும் விதமாக நபியவர்கள் மிக நுட்பமான உதாரணத்தைக் கூறியுள்ளார்கள்.

இந்த உதாரணத்தின் மூலம் வருங்காலத்தில் எந்த நபியும் வர வாய்ப்பு இல்லை என்பதை முஸ்லிம்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள். பிற்காலத்தில் தானும் ஒரு நபி தான் என்று கூறுபவர்களை மக்கள் நம்பக்கூடாது என்பதற்கும் இந்த உதாரணத்தின் மூலம் நபிகளார் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள். இன்னும் நபியவர்கள் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் விதமாகக் கூறியுள்ள செய்திகள் ஏராளம் உள்ளன.

எனக்கு பின் எந்த நபியும் ரஸூலும் இல்லை
إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انْقَطَعَتْ فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ

‘தூதுத்துவமும் நபித்துவமும் முற்றுப் பெற்று விட்டது. எனக்குப் பின்னால் எந்த நபியும் ரஸூலும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (திர்மிதீ: 2272) (2198)

நபியவர்களுக்குரிய தனிப் பெயர்’
إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ

‘எனக்குப் பல பெயர்கள் உண்டு. நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன். அல்லாஹ் என் மூலம் இறை மறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்பவர்) ஆவேன். நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்’ என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம் (ரலி)
நூல்கள்: (புகாரி: 4896) , முஸ்லிம் (4342)

அல்ஆகிப் (இறுதியானவர்) என்ற தன் பெயரை விளக்கும் போது ‘எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ள செய்தி கூடுதலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً، وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ
நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச் சிறப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிற நபிமார்களை விட ஆறு விஷயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.

 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பட்டுள்ளேன்.
 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய) பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டது.
 3. போர் பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 4. எனக்குப் பூமி முழுவதும் தூய்மையானதாகவும், பள்ளிவாயில்களாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
 5. நான் மனித இனம் முழுவதுக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
 6. என்னுடன் நபிமார்கள் முற்றுப் பெற்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 907) 

அல்லாஹ் எல்லா நபிமார்களுக்கும் அற்புதங்களையும் தனிச் சிறப்புகளையும் வழங்கியிருக்கிறான். அந்த வகையில் நபியவர்கள் தனக்குரிய தனிச் சிறப்புகளைப் பற்றிக் கூறும் போது, பிற நபிமார்களுக்கு இல்லாத தனிச் சிறப்பாக தன்னோடு நபிமார்களின் வருகை முடிந்து விட்டது என்பதை குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். ஏனென்றால் நபியவர்கள் வரை, ஒரு நபிக்குப் பின் மற்றொரு நபி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வருகைக்கு பிறகு அது தடை செய்யப்பட்டு விட்டது.

கலீஃபாக்கள் வருவார்கள்
كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ

‘நபிமார்கள் பனூ இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இருந்தனர். ஒரு நபி மரணிக்கும் போது அவருக்குப் பின்னால் மற்றொரு நபி வருவார். எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லை! கலீஃபாக்கள் அதிகமாக வருவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 3455)

இதற்கு முன்னர் வாழ்ந்த இஸ்ரவேலர்களின் சமுதாயத்திற்கு ஒப்பிட்டுக் கூறும் போது அந்த சமுதாயத்தில் ஒரு நபிக்குப் பின் மற்றொரு நபி தொடர்ந்து வருவார். ஆனால் தன் சமுதாயத்தில் இறைத் தூதர்கள் வர மாட்டார்கள். கலீஃபாக்கள் மட்டும் தான் வருவார்கள் என்பதைத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று திருக்குர்ஆனும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ ؕ

உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 4:79)

قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ

‘மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்’

(அல்குர்ஆன்: 7:158)

وَاُوْحِىَ اِلَىَّ هٰذَا الْـقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْۢ بَلَغَ‌

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 6:19)

இந்த திருக்குர்ஆனின் போதனைகள் யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் நபிகளாரே இறைத்தூதர் என்று இவ்வசனம் கூறுகிறது. இன்னும் இதுபோன்ற பல வசனங்கள், நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் இறைத்தூதர் என்று பிரகடனப்படுத்துகிறது.

பொய்யர்களின் வருகை

நபி (ஸல்) அவர்களின் புகழுக்கு ஆசைப்பட்டும், மக்களிடத்தில் ஆன்மீகத்தின் பெயரால் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், தனக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் முஸைலமா என்ற பொய்யனும், இன்றைய காலத்தில் மிர்ஸா குலாம், ரஷாத் கலீபா போன்ற போலிகளும் தங்களை நபியென்று வாதிட்டனர். இவர்களைப் பற்றி:

 وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي

‘என்னுடைய சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் வந்து, அவர்கள் அனைவரும் தன்னை நபியென்று வாதிடுகின்ற வரையும் மறுமை நாள் ஏற்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸவ்பான் (ரலி)
நூல்: (திர்மிதீ: 2219) (2145)

قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ،

நபியவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். இதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழிதவற மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இர்பால் பின் ஸாரியா (ரலி)
நூல்: (இப்னு மாஜா: 43) 

முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதித் தூதுவர். அவர்களுக்குப் பிறகு எந்த நபியும் வர முடியாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் நேரடியாக மற்றும் உதாரணங்களின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே தெளிவான வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்போமாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.