தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்….

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் தடுத்த தீய மூன்று குனாதிசயங்களை இந்த உரையில் காண்போம்..

தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்….
مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الْكِبْرِ وَالْغُلُولِ، وَالدَّيْنِ فَهُوَ فِي الْجَنَّةِ

‘ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்கள்: (அஹ்மத்: 22390) (21356), திர்மிதீ (1497)

மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம் பல விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் இருக்கக் கூடாது. அவை இருந்தால் அவர் சொர்க்கம் புக முடியாமல் போய் விடும். அதே நேரத்தில் இந்த மூன்றும் இல்லாவிட்டால் அவர் கண்டிப்பாக சொர்க்கம் போவார். அவை:

1. தற்பெருமை,

2. மோசடி,

3. கடன்.

1.தற்பெருமை

எவனிடம் தற்பெருமை குடிகொண்டு விடுமோ அவன் அழிவின் விளிம்பிற்குப் போய் விட்டான் என்று கூறலாம். அவனிடம் நற்காரியங்கள் அனைத்தும் நீங்குவதற்கும் நற்செயல்கள் வராமல் இருப்பதற்கும் இந்தத் தற்பெருமை காரணமாக அமைந்து விடும்.

 تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

(அல்குர்ஆன்: 28:83)

பூமியில், நான் தான் பெரியவன் என்று எண்ணி நடப்பவனுக்கு மறுமையில் சொர்க்கம் என்ற வீடு உறுதியாகக் கிடையாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். இந்த எண்ணம் எவரிடம் குடிகொண்டு விடுமோ அது சொர்க்கம் செல்வதற்கு மிகப் பெரிய தடைக் கல்லாக அமைந்து விடும். இந்தத் தற்பெருமை இல்லையேல் அவர் சொர்க்கம் செல்வது இலகுவாகி விடும்.

கடுகளவும் இருக்கக் கூடாது
لَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ، وَلَا يَدْخُلُ الْجَنَّةَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ كِبْرِيَاءَ

‘தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 148) 

பெருமை இறைவனுக்கு மட்டுமே உரியது

பெருமை என்பது இறைவனுக்கு மட்டுமே உரியது. அதற்குத் தகுதியுள்ளவன் இறைவன் மட்டுமே! இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்பை எவரும் செய்யத் துணிந்தால் அவர் இறைவனால் வேதனை செய்யப்படுவார்.

الْعِزُّ إِزَارُهُ، وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ، فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறுகிறான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5114) 

எனவே இறைவனுக்கு மட்டும் சொந்தமான இந்தப் பெருமையை விட்டு விட்டு, பணிவு என்ற நற்பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

2.மோசடி

சொர்க்கம் தடை செய்யப்படுவதற்குகத் காரணமாகத் திகழும் இரண்டாவது காரணம் மோசடி! இந்தத் தன்மையிலிருந்து விடுபட்டவர் சொர்க்கம் செல்வார். இந்த மோசமான காரியத்தைச் செய்து வருபவர் சொர்க்கம் புக முடியாது. இந்த மோசடித் தன்மை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இது இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனின் தன்மையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

‘நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும்’
آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ

‘பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (புகாரி: 33) , முஸ்லிம் (107)

மோசடி என்ற மோசமான காரியத்தைத் தொடர்ந்து செய்து வரும் ஒருவர், அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் அவரிடம் நயவஞ்கத் தன்மையில் ஒன்று இருந்து கொண்டே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ، وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ

‘நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 109) 

மோசமான கூட்டம் மோசடி செய்யும்
إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ

‘உங்களுக்குப் பிறகு ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமானயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: (புகாரி: 2651) 

ஈமான் இருக்காது

மோசடி செய்பவர், மோசடி செய்யும் போது ஈமான் இல்லாமல் போய் விடும் என்று கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

وَلَا يَغُلُّ أَحَدُكُمْ حِينَ يَغُلُّ وَهُوَ مُؤْمِنٌ، فَإِيَّاكُمْ إِيَّاكُمْ

‘மோசடி செய்பவன், மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை. (இதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு) உங்களை நான் எச்சரிக்கிறேன் உங்களை நான் எச்சரிக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 103) 

சொர்க்கத்தைத் தடை செய்யும் இந்த மோசமான காரியத்தை விட்டும் விலகி, சொர்க்கத்தைக் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

3.கடன்

கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்காமல் அல்லது அதைத் திருப்பிக் கொடுப்பதற்குரிய செல்வத்தைச் சேர்க்காமல் இறந்து விடுவது சொர்க்கத்திற்குச் செல்ல முடியாமல் போவதற்குக் காரணமாக அமைகின்றது. இந்தக் கடன் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மனித உரிமைகள் மீறும் விஷயத்தில் கடன் முக்கிய இடத்தை வகிக்கிறது. வசதியில்லாத நிலையில் அல்லது முக்கியத் தேவைக்காக வாங்கும் கடன்களைப் பெரும்பாலும் குறித்த காலத்தில் கொடுப்பதில்லை. மேலும் சிலர் கடனை வாங்கி விட்டுத் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்குச் சரியான தண்டனையாக சொர்க்கம் தடை செய்யப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் கடன்பட்டவர் இறந்து போனால் அவருடைய கடனை நிறைவேற்றும் அளவுக்குச் செல்வத்தை விட்டுச் சென்றால் மட்டுமே தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில் அவர்கள் தொழுகை நடத்தாமல் நபித் தோழர்களை நடத்தச் சொல்வார்கள்.

கடனாளிக்கு நபிகளார் தொழுவிக்கவில்லை

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்த போது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. நபித்தோழர்கள், ‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் கடனாளியா?’ என்று கேட்ட போது நபித் தோழர்கள் இல்லை என்றனர். ‘ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை என்றனர். நபி (ஸல்) அவர்கள் அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்ட போது ‘அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித் தோழர்கள் கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவர் கடனாளியா? என்று கேட்டபோது ஆம் எனக் கூறப்பட்டது. ‘இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, ‘மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்’ என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘நீங்கள் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித் தோழர்கள் கூறினர். ‘இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, இல்லை என்றனர். இவர் கடனாளியா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, ‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்’ என்று நபித் தோழர்கள் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்’ என்றனர். அப்போது அபூகதாதா (ரலி), ‘இவரது கடனுக்கு நான் பொறுப்பு, அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்: (புகாரி: 2289) 

அனைவருக்கும் தொழுகை நடத்திய நபி (ஸல்) அவர்கள், கடனாளிக்கு மட்டும் தொழுவிக்க மறுத்தது, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்த்துவதற்குத் தான்.

மறுமையில் நன்மைகள் பிடுங்கப்படும்

கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து விட்டால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் இறைவனிடம் முறையிடும் போது கடன் வாங்கியவரின் நன்மைகளை எடுத்துக் கடன் கொடுத்தவருக்கு வழங்கப்படும்.

«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»

நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘யாரிடம் வெள்ளிக் காசோ பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களைப் பொறுத்த வரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார்.

அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.

ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்து விட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறிப்படுவார். (அவரே திவாலாகிப்போனவர்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5037) 

கடன் வாங்கியவர் அதை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற மனித உரிமையை மீறினால் மறுமை நாளில் இவர் எவ்வளவு பெரிய நன்மைகளைச் செய்திருந்தாலும் அவருடைய நன்மைகள் கடன் கொடுத்தவருக்கு வழங்கப்பட்டு இவருக்கு ஒன்றும் இல்லாத நிலை கூட ஏற்படலாம். இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை கூட ஏற்படலாம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கடனை விட்டும் பாதுகாப்புத் தேடுவார்கள்.

كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ»

நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆச் செய்யும் போது, ‘இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 2397) 

பொய் சொல்லத் தூண்டும்

கடன் வாங்குதால் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இன்னொரு பாவமும் சேர்ந்து கொள்கிறது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.

كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ»، فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ المَغْرَمِ؟ قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»

நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆச் செய்யும் போது, ‘இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுப்புத் தேடுகிறேன்’ என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 2397) 

தற்பெருமை, மோசடி, கடன் என்ற மூன்று காரியங்களிலிருந்து ஒருவர் விலகி இருப்பதால் நற்செயல்கள் நம்மிடம் வந்து சேர்வதுடன், சொர்க்கத்துக்கு உரியவர்களாகவும் நாம் ஆகலாம். எனவே நம் செயல்பாடுகளில் இந்த மூன்று காரியங்களையும் முற்றிலுமாக விலக்கி வைப்போம். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்தித்தவனாக இந்த உரையை முடிக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.