தொழுகையை பேணுவோம்!
தொழுகையை பேணுவோம்!
இஸ்லாம் என்றாலே தொழுகைதான்
பல்வேறு கடவுள் நம்பிக்கைகள் கொண்ட சமுதாயங்கள் உலகில் உள்ளன. அதில் இறைவன் ஒருவன் தான். என்று அவனை மட்டுமே வணங்கி, இணைவைக்காமல் வாழ்ந்து சொர்க்கத்தை பெற வேண்டும் என்ற ஆசையில் வாழும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். வந்தே மாதரம் என்று கூறினால் மண்ணை வணங்குவதாக ஆகிவிடும். என் உயிரே போனாலும் அப்படி கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். கடவுடள் கொள்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத முஸ்லிம்கள், சுவனத்தை எதிர்நோக்கியுள்ள இந்த முஸ்லிம்களில் ஒரு பெரும் கூட்டத்தினர் , சுவனத்திற்கு செல்வதற்கு தடையாக உள்ள மிகப் பெரிய ஒரு விஷயத்தை கண்டும் காணாத மக்களாக உள்ளனர். அது தான் வணக்கத்தில் மிக முக்கியமான வணக்கமான தொழுகை. ஏனெனில் இஸ்லாம் என்றாலே தொழுகையை நிலைநாட்டுவது தான்.
قَالَ أَبُو عَبْدِ اللهِ جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (ஜிப்ரீல்) இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள் இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீ இணையாகக் கருதாத நிலையில் அவனை நீ வணங்குவதும் தொழுகையை நீ நிலைநிறுத்து வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நீ வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீ நோன்பு நோட்பதுமாகும் என்று கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 50)
இந்த ஐந்து இல்லையென்றால் இஸ்லாமே இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல் தொழுகையை நிலைநிறுத்துதல் ஸகாத்து வழங்குதல் ஹஜ் செய்தல் ரமலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறி : இப்னு உமர் (ரலி), நூல் : (புகாரி: 8)
இறைமறுப்புச் செயல்
தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறைமறுப்புச் செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையை கைவிடுவது தான்.
அறி : ஜாபிர் (ரலி), நூல் : (முஸ்லிம்: 116)
தொழுகை ஒரு முஃமினிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்பதால் ஆட்சியாளர்கள் தொழுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
قَالَ دَخَلْنَا عَلَى عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهْوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : دَعَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَبَايَعْنَاهُ
7056 – فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةٍ عَلَيْنَا ، وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ إِلاَّ أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنَ اللهِ فِيهِ بُرْهَانٌ
ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் நாங்கள் சண்டையிடமாட்டோம். எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நாங்கள் கண்டாலேத் தவிர என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அறி : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல் : (புகாரி: 7056)
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள். தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையை தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாற்றமாக) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்கு குற்றத்தில் பங்குண்டு) என்று கூறினார்கள். மக்கள் அவர்களுடன் நாங்கள் போரிடலாமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்) என்று கூறினார்கள்.
அறி : உம்மு சலமா (ரலி), நூல் : (முஸ்லிம்: 3775) (3447)
மறுமை நாளில் நரகவாசியிடம் சொர்க்கவாசிகள் ஏன் நரகத்தில் வந்து அவதிப்படுகிறீர்கள் என்று கேட்பார்கள்
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (எனக் கூறுவார்கள்)
நன்மையை வாரி வழங்கும் தொழுகை
இந்த அளவிற்கு நம்மை நரகில் தள்ளும் ஒரு குற்றம், தொழுகையை விடுவது. இதைச் செய்து பாவியாக மரணிக்க வேண்டுமா? ஏன் இந்த தலையெழுத்து? தொழுகையை சரியாக நிறைவேற்றி, நல்ல மனிதர்களாக மரணிப்போமே! தொழுகையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள். நபியவர்கள் சொல்கிறார்கள்.
ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழவேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புரப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் இறைவா நீ இந்த மனிதன் மீது அருள்புரிவாயாக உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.
அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 647)
ஆம். தொழுகை முழுவதும் நன்மையால் நிறம்பி கிடக்கிறது. நினைத்தால், உளு செய்தால், அதற்காக நடந்து வந்தால், முன் ஸஃப்பில் நின்றால், தொழுதால், தொழுத பின் அமர்ந்தால் என தொழுகையை சுற்றி அனைத்துமே நன்மை தான்.
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்
ஒரு தொழிலாளி ஒரு செயலை செய்தால், அது நமது முதலாளிக்கு பிடிக்குமா? என்று பார்த்துப் பார்த்து செய்வார். ஒரு மனைவி ஒரு செயலை செய்தால், அது தன் கணவருக்கு பிடிக்குமா? என்று பார்த்துப் பார்த்து செய்வாள். பிள்ளைக்கு பிடித்த உணவை சமைத்து வைப்பாள் ஒரு தாய். நம்முடைய இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல் எது என்று தெரிந்து கொள்ள என்றைக்காவது ஆசைப் பட்டிருக்கிறோமா? நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி கேட்கிறார்.
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும் என்று பதில் கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : (புகாரி: 527)