இன்பத்திலும், துன்பத்திலும் (ஸஹாபாக்கள்)

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3
முன்னுரை

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் மற்றவர்களை விட பல வகையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு கடிமான காலத்தில் நபித்தோழர்கள் பட்ட சிரமங்களையும், பல இன்னல்களையும் இந்த உரையில் பார்க்க இருக்கிறோம்.

கிடைத்த உணவு பொருளை பங்கிடுதல்
قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَيْنَ أَصْحَابِهِ تَمْرًا، فَأَعْطَى كُلَّ إِنْسَانٍ سَبْعَ تَمَرَاتٍ، فَأَعْطَانِي سَبْعَ تَمَرَاتٍ إِحْدَاهُنَّ حَشَفَةٌ، فَلَمْ يَكُنْ فِيهِنَّ تَمْرَةٌ أَعْجَبَ إِلَيَّ مِنْهَا، شَدَّتْ فِي مَضَاغِي

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம் பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 5411)

அன்றைய காலத்தில் போரில் வெற்றி பெற்றால் தோற்றவர்கள் விட்டு சென்ற உணவு, ஆயுதம், கால்நடைகள், அடிமைகள் ஆகியவை வெற்றி பெற்றவர்கள் தங்களுக்குரியதாக ஆக்கி கொள்ளும் வழமை இருந்தது. அலி (ரலி) அவர்களும், பாத்திமா (ரலி) அவர்களும் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு வேலைகள் செய்து கைகளெல்லாம் காய்த்து போய்விட்டன. எனவே, போரில் கிடைக்கப்பெற்ற அடிமைகளை தங்களுக்கு உதவிக்காக தருமாறு கேட்டனர்.

அதனை கேட்ட ரஸூல் (ஸல்) அவர்கள் திண்ணைத் தோழர்களை கருத்தில் கொண்டு திண்ணையில் உண்ண உணவும், இருக்க இருப்பிடமும், வறுமையை போக்க ஒரு வேலை கூட இல்லாத நிலையில் சிலர் இருக்கும் போது உங்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்படுகிறதா?என்று மறுத்து விட்டார்கள். வறுமையில் வாடி நிற்கும் மக்களை நினைத்து தன் சொந்த மகள் உதவி கேட்டும் நபி (ஸல்) புறக்கணித்து விட்டார்கள்ர்கள்.

அந்தளவிற்கு ஸஹாபாக்களின் துயரத்தை தன் துயரமாக எண்ணினார்கள் நபியவர்கள் .

உண்ண உணவில்லாத நிலையிலும் போருக்கு சென்ற சத்திய ஸஹாபாக்கள்
بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ ثَلَاثُمِائَةٍ، نَحْمِلُ أَزْوَادَنَا عَلَى رِقَابِنَا، فَفَنِيَ أَزْوَادُنَا، حَتَّى كَانَ يَكُونُ لِلرَّجُلِ مِنَّا تَمْرَةٌ» ، فَقِيلَ: يَا أَبَا عَبْدِ اللَّهِ وَأَيْنَ تَقَعُ التَّمْرَةُ مِنَ الرَّجُلِ؟ فَقَالَ: «لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا،

நபி (ஸல்) அவர்கள் எங்களில் முன்னூறு நபர்களை கொண்ட ஒரு படையை ஒரு போருக்கு அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்த போருக்கு தேவையான உணவுப் பொருட்களை எல்லாம் தயார் செய்து கட்டிக் கொண்டு சென்றோம். அக்கிரமத்தை எதிர்த்து களத்தில் இறங்குவதற்கு ஒரு நாளிற்கு ஒரு பேரிச்சை என்ற வீதம் தான் எல்லோருக்கும் கிடைக்கும். இச்செய்தியை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அடுத்த தலைமுறையில் வஹது பின் கைஸா என்பவரிடம் எடுத்துரைக்கிறார்கள். இதனை கேட்டவர் ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சை எப்படி பத்தும் என்றார். அதற்கு ஜாபிர் அவர்கள் சில நேரங்களில் அதுகூட இல்லாமல் இருந்தது உண்டு என்றார்.

(அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல் : (இப்னு மாஜா: 4159) )

திண்ணைத் தோழர்களின் நிலை
 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ، إِمَّا إِزَارٌ وَإِمَّا كِسَاءٌ، قَدْ رَبَطُوا فِي أَعْنَاقِهِمْ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ السَّاقَيْنِ، وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ، فَيَجْمَعُهُ بِيَدِهِ، كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ.

அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்: 
திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறுசிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும்போது) சிலரின் போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும். வேறு சிலரின் போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தங்களின் மறைவிடங்களைப் பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். 

(நூல் : (புகாரி: 221) )

தன் உடலை மறைத்து கொள்வதற்கு மனிதனுக்கு ஆடை என்பது ஓர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. அந்த ஆடையும்  இல்லாமல், இருக்கின்ற ஆடையினால் தங்கள் மறைவிடங்களைப் மறைத்து வாழ்ந்து இருக்கிறார்கள் என்றால் திண்ணைத் தோழர்களின் தியாகம் எத்தகையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பசியினால் மயங்கிவிழுந்த திண்ணை ஸஹாபாக்கள்.
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلاَةِ مِنَ الخَصَاصَةِ وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ حَتَّى تَقُولَ الأَعْرَابُ هَؤُلاَءِ مَجَانِينُ أَوْ مَجَانُونَ ، فَإِذَا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ إِلَيْهِمْ ، فَقَالَ : لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللهِ لأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً قَالَ فَضَالَةُ : وَأَنَا يَوْمَئِذٍ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) ”இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்” என்று கூறுவார்கள்.

நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி ”அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்” என்று கூறுவார்கள்.

நூல்: (திர்மிதீ: 2368) (2291)

பசியாலும் வறுமையாலும் திண்ணை ஸஹாபாக்களின் வாழ்கை கழிந்தாலும் அப்படிப்பட்ட சூழலிலும் அல்லாஹ் கடமையாக்கிய வணக்க வழிபாடுகளில் பேணுதலாக இருந்திருக்கிறார்கள். இதுவே நாமாக இருந்தால்…? சற்று சிந்தித்து பாருங்கள் நம்முடைய நிலையை…? 

அச்சநேரத் தொழுகை கடமையாக்கப்படுகிறது
 فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ‌‌ ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْکُرُوا اللّٰهَ کَمَا عَلَّمَکُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ

நீங்கள் அச்சத்தில் இருந்தால் நடந்தோ, வாகனத்திலோ (தொழலாம்). அச்சம் தீர்ந்ததும் நீங்கள் அறியாமல் இருந்ததை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினையுங்கள்!

(அல்குர்ஆன்: 2:239)

போர்க்களத்திலும் தொழுகையை விட்டதில்லை
عَنِ ابْنِ عُمَرَ نَحْوًا مِنْ قَوْلِ مُجَاهِدٍ إِذَا اخْتَلَطُوا قِيَامًا. وَزَادَ ابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيُصَلُّوا قِيَامًا وَرُكْبَانًا)).

‘(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ‘எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிவு,
நூல் : (புகாரி: 943) 

ஸஹாபாக்களின் அன்றாட நிலை
إِنَّا كُنَّا نَفْرَحُ بِيَوْمِ الجُمُعَةِ، كَانَتْ لَنَا عَجُوزٌ تَأْخُذُ مِنْ أُصُولِ سِلْقٍ لَنَا كُنَّا نَغْرِسُهُ فِي أَرْبِعَائِنَا، فَتَجْعَلُهُ فِي قِدْرٍ لَهَا، فَتَجْعَلُ فِيهِ حَبَّاتٍ مِنْ شَعِيرٍ – لاَ أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ: – لَيْسَ فِيهِ شَحْمٌ، وَلاَ وَدَكٌ، فَإِذَا صَلَّيْنَا الجُمُعَةَ زُرْنَاهَا فَقَرَّبَتْهُ إِلَيْنَا، فَكُنَّا نَفْرَحُ بِيَوْمِ الجُمُعَةِ مِنْ أَجْلِ ذَلِكَ، وَمَا كُنَّا نَتَغَدَّى وَلاَ نَقِيلُ، إِلَّا بَعْدَ الجُمُعَةِ

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார். 
நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் கிழவியொருத்தி நட்பாக இருந்தாள். அவள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த ‘சில்க்’ என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி, அவற்றைத் தன்னுடைய பாத்திரமொன்றில் போட்டு, அவற்றுடன் வாற்கோதுமை விதைகள் சிலவற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவாள்.

நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்தக் கிழவியைச் சந்திப்போம். அவள் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவாள். இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக் கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி),
நூல் : (புகாரி: 2349) 

அற்பமான இந்த கீரை வகை உணவு கூட பெரிதாக நினைத்து அனைவரும் ஆர்வத்துடன் பருகுவார்கள் என்றால் எந்தளவிற்கு அவர்கள் உணவிற்காக கஷ்டப்பட்டிருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வுடைய தூதரே போகின்ற போக்கை பார்த்தால் மதீனாவாசியாகிய எங்களை காட்டிலும் மதீனாவிற்கு தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பது போல கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான் என்று ஆறுதல் அளித்தார்கள். அப்துல்லாஹ் பின் ஹபீபுல் ஆஹ்  என்பவர் மதீனாவின் நிர்வாகியாக பொறுப்பேற்றவர்.

அப்போது அவரிடம் ஒருவர் நாங்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்கள் எங்களுக்கு ஏதேனும் கொடுங்கள் என்றார். அதற்கு அவர் உங்களுக்கு குடும்பம், மனைவி, இருப்பிடம் இருக்கிறதா என்றார் ? அதற்கு ஆம் இருக்கிறது என்றார் அந்த ஏழையான முஹாஜிர். அதற்கு, அப்துல்லாஹ் பின் ஹபீபுல் ஆஹ், அப்படியென்றால் நீ ஏழை கிடையாது. நீ தான் பணக்காரர்கள் என்கிறார். அதற்கு அந்த முஹாஜிர், என்னிடம் பணியாளரும் இருப்பதாக தெரிவித்தார். அப்படியானால் நீ ஒரு மன்னர் என்று கூறினார். ஏனென்றால், மதீனாவில் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். 

….

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ۚ‏ اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ؕ‏ هُنَالِكَ ابْتُلِىَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்தபோது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.

அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்தபோது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப்பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.

(அல்குர்ஆன்: 33:9-12)

தியாகத்தில் இன்பம் காணும் ஸஹாபிய தம்பதியினர்

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்? அல்லது ‘இவருக்கு விருந்தளிப்பவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (விருந்தளிக்கிறேன்)’ என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.

அவர் தனது (மனைவியிடம்) ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’ என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, ‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’ என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு’ என்று கூறினார்.

அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.

காலையானதும் அந்த அன்சாரி, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூடு, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்’ என்றும் (அல்குர்ஆன்: 59:9) ம் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 3798) 

தான் வறுமையான சந்தர்ப்பத்தில் கூட நபிகளார் கூறிய விருந்தோம்பல் குறித்து முக்கியத்துவம் அளித்த ஸஹாபிய தம்பதியினரின் செயல்களை பார்த்து அல்லாஹ்வே சிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அந்தளவிற்கு அவர்களின் தியாக பண்பு இருந்திருக்கின்றது. 

அல்லாஹ்வுடைய மார்கத்தை ஏற்றுக் கொண்ட சஹாபாக்கள் அவர்களின் வாழ்கையில் அனைத்து விஷயங்களிலும் தியாக மனப்பான்மை கொண்டவர்களாக அவர்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டார்கள். நாமும் சஹாபாக்களின் வாழ்கையின் மூலம் நிறைய பாடங்களையும் படிப்பினைகளையும் கொண்டு வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!  

வா ஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.