நன்றி மறந்தவர்கள்
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இவ்வுலகில் மனிதனை படைத்தது முதல் அவனுக்கு எவ்வித குறையுமின்றி உணவுகளையும், காய், கனிகளையும், செலவச் சோலைகளையும் வல்ல அல்லாஹ் வழங்கியுள்ளான். இன்னும், எண்ணற்ற தேவைகளையும் குறையில்லாது வழங்கிக் கொண்டே இருக்கின்றான். அறிவீன மக்கள், படிப்பின்னை பெறாது நன்றி கெட்டவர்களாகவே! இருக்கின்றனர்.
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (அல்குர்ஆன்: 7:10) ➚
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:147) ➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவராவார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),(புகாரி: 6768)
நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.(அல்குர்ஆன்: 5:6) ➚
“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்). (அல்குர்ஆன்: 7:17) ➚
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன்:) ➚
இந்த பிரசவ வேதனையை விட கொடுமையான ஒன்றிருக்குமானால் அது அந்த குழந்தைகளின் மூலம் அந்த வயது முதிர்ந்த பெற்றோர் அனுபவிக்கின்ற துன்பமாகும். தன்னுடைய வயதான காலகட்டத்தில் தன் மகன் தன்னை பராமரிப்பான், காப்பாற்றுவான் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக அவர்களை கைவிட்டு அட்ரஸ் இல்லாத அனாதைகளாக மாற்றக்கூடிய கல் நெஞ்சங்கள் பலர் உள்ளனர். இஸ்லாம் பெற்றோர்களுக்கு எவ்வளவு கண்ணியத்தையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கின்றது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம். (அல்குர்ஆன்: 2:52) ➚
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். (அல்குர்ஆன்: 2:56) ➚
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (அல்குர்ஆன்: 2:152) ➚
நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே, எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விருமலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:158) ➚
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே! உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே! வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன்: 2:172) ➚
ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே! (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (அல்குர்ஆன்: 2:185) ➚
(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் ‘இறந்து விடுங்கள்’ என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 2:243) ➚
‘பத்ரு’ போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 3:123) ➚
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதிசீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம். (அல்குர்ஆன்: 3:145) ➚
அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:37) ➚
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:147) ➚
நபி (ஸல்) அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இரு பாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு விடும். இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),(புகாரி: 1380)
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள். அறிவிப்பவர் : முகீரா (ரலி),(புகாரி: 1130)
தமது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில், நபி(ஸல்) அவர்களே! அல்லாஹ்விடத்தில் நல்லடியாராக இருக்க வேண்டும்; அருளப்பட்ட அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும் என் பதற்காக அதிகமுயற்சியை வணக்க வழிபாட்டிற்காக செலுத்தியிருக்கிறார்கள்.
நம்பிக்கைக் கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். (அல்குர்ஆன்:) ➚
மக்கள், ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பெண்களின் நிராகரிப்பே! காரணம் என்றார்கள். அப்போது பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு, கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டேதேயில்லை என்று சொல்லிவிடுவாள் என்று பதிலத்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 1052)
இறைவனை மட்டும் வணங்குவோர் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன்: 16:114) ➚
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழ்வதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது ‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே! உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி),(புகாரி: 5458)
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைக்காக நன்றி செலுத்தும் போது பன்மடங்கு அதிகமாக அல்லாஹ் சந்தோஷம் அடைவதாக கூறினார்கள். நம்மை படைத்த இறைவனையே! சந்தோசப்படுத்தி பார்கலாம் என்றால் அதை நாம் எவ்வளவு முறை செய்கின்றோம். இதனை நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒவ்வொன்றிற்கும் தவறாது நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இறைவனை நினைக்கும் போது அல்லாஹ்வும் நம்மை நினைத்து அருள் புரிவான்.
இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!