பேச்சின் ஒழுங்குகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை 

நாம் பேசும் வார்த்தைகள் யாவும் நல்வார்த்தைகளாக இருக்க வேண்டும். அதிலும், மற்றவர்களை காயப்படுத்தாமல் பேச வேண்டும். நல்ல வார்த்தைகள் பேசுவது கூட தர்மமாகும் என நபி (ஸல்) கூறியுள்ள செய்திகளை பார்ப்போம். 

நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
(அல்குர்ஆன்: 33:70)

مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ؕ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.
(அல்குர்ஆன்: 35:10)

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும்.

ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2989) 

நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களை பேசுவதாகும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொர்க்கம் செல்வதற்கான வழியை காட்டும்படி கேட்ட போது அழகிய முறையில் பேசும் படி அவருக்கு கட்டளையிட்டார்கள்.

நல்ல பேச்சுகள் சுவர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்கும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ:
أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِذَا رَأَيْتُكَ طَابَتْ نَفْسِي، وَقَرَّتْ عَيْنِي فَأَنْبِئْنِي عَنْ كُلِّ شَيْءٍ فَقَالَ: «كُلُّ شَيْءٍ خُلِقَ مِنْ مَاءٍ» قَالَ: فَأَنْبِئْنِي بِعَمَلٍ إِنْ عَمِلْتُ بِهِ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: «أَفْشِ السَّلَامَ، وَأَطِبِ الْكَلَامَ وَصِلِ الْأَرْحَامَ وَقُمْ بِاللَّيْلِ، وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلِ الْجَنَّةَ بِسَلَامٍ»

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரி­லிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)
நூல்: (அஹ்மத்: 10399) (9996)

நல்ல பேச்சு நரகிலிருந்து காக்கும் கேடயம் 

நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத்தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களை பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி­)
நூல்: (புகாரி: 6023) 

இஸ்லாம் சகுனம் பார்ப்பதை தடைசெய்கிறது. மனிதன் துர்சகுனம் பார்ப்பதினால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களை செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு இந்த சகுணம் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையை செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்லவார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறது.

சகுனங்களில் சிறந்த நற்குறி 

மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதினால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.

 أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«لاَ طِيَرَةَ، وَخَيْرُهَا الفَأْلُ» قَالُوا: وَمَا الفَأْلُ؟ قَالَ: «الكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)
நூல்: (புகாரி: 5754) 

வீதிகளில் நல்ல வார்த்தைகளை பேசுதல் 

தீய பேச்சுக்களை பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது மிக மோசமானதாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொதுவீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்கு காது கூசுகின்ற அளவிற்கு பயங்கரமான வார்த்தைகள் வீசி எரியப்படுகின்றன. சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே. இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

قَالَ أَبُو طَلْحَةَ
كُنَّا قُعُودًا بِالْأَفْنِيَةِ نَتَحَدَّثُ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ عَلَيْنَا فَقَالَ: «مَا لَكُمْ وَلِمَجَالِسِ الصُّعُدَاتِ اجْتَنِبُوا مَجَالِسَ الصُّعُدَاتِ، فَقُلْنَا إِنَّمَا قَعَدْنَا لِغَيْرِ مَا بَاسٍ قَعَدْنَا نَتَذَاكَرُ وَنَتَحَدَّثُ» قَالَ: «إِمَّا لَا فَأَدُّوا حَقَّهَا غَضُّ الْبَصَرِ، وَرَدُّ السَّلَامِ، وَحُسْنُ الْكَلَامِ

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்” என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும், சலாமிற்குப் பதிலுரைப்பதும், அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி­)
நூல்: (முஸ்லிம்: 4365) (4020)

பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சும் நல்லவையே!

நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறரது மகிழ்ச்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்துவிடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யோகமாக இருந்துள்ளார்.

عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ،
أَنَّ رَجُلًا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி­)
நூல்: (புகாரி: 6780) 

 عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ
قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி­) அவர்களிடம், ”நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி­ருந்து) எழமாட்டார்கள்.

சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்
நூல்: (முஸ்லிம்: 1188) 

யாகாவாராயினும் நாகாக்க

நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையை கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்கு சொன்னார்கள்.

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ  اللَّهِ – مُرْنِي فِي الْإِسْلَامِ بِأَمْرٍ لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ. قَالَ: «قُلْ آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ» . قَالَ: قُلْتُ: فَمَا أَتَّقِي، فَأَوْمَأَ إِلَى لِسَانِهِ

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ”உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்” என்று கேட்டார்.

”அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ர­லி)
நூல்: (அஹ்மத்: 19431) (14870)

தேவையற்றப் பேச்சுக்கள் வேண்டாம்

தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டுபண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களை பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்துகொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏

(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 17:53)

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ – سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ‏

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ”எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்” எனவும் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 28:55)

வீணானதைப் புறக்கணிப்பார்கள்

 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏

அவர்கள் பொய் சாட்சி கூறமாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:72)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)
நூல்: (புகாரி: 6018) 

நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில் நல்லதையே பேசட்டும் என்ற கட்டளைக்கு முன்பாக அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும் என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.

عَنْ رِجَالٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيَقُلْ حَقًّا، أَوْ لِيَسْكُتْ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வை பயந்து தனது அண்டைவீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்துகொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வை பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வை பயந்து நல்லதையே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.

அறிவிப்பவர் : சில நபித்தோழர்கள்,
நூல் : (அஹ்மத்: 20285) (19403)

நாவை பாதுகாத்தல் 

பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றை கேட்கக் கூடாது என்பதை வ­லியுறுத்தும் வண்ணம் தன் காதை பொத்திக்கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றை பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றை பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக்கொண்டிருக்கும். இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலி­யுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது.

தீமையை பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது. ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும். சிலருடைய பேச்சுக்கள் நம்மை தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக்கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும்.

தன் குடும்ப விஷயங்களை பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணும். அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்லக்கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே என்று கட்டளையிட்டார்கள்.

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ:
جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ، فَقَالَ: «لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ، لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ، أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ» . فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ؟ قَالَ: «لَا، إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا، وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا، وَالْمِنْحَةُ الْوَكُوفُ، وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَأَطْعِمِ الْجَائِعَ، وَاسْقِ الظَّمْآنَ، وَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ»

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சொர்க்கத்தில் என்னை கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக்கொடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறிவிட்டு) உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு. தாகித்தவனுக்கு நீர்புகட்டு. நல்லதை ஏவி தீமையை தடு. இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றி­ருந்தே தவிர (மற்றவற்றி­லிருந்து) பாதுகாத்துக் கொள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்பராஉ பின் ஆஸிப் (ரலி­)
நூல்: (அஹ்மத்: 18647) (17902)

தீய பேச்சுக்கள் வேண்டாம்

கெட்ட பேச்சுக்களை பேசுவது இறை நம்பிக்கையாளனிடம் இருக்கக் கூடாத பண்பு. மானக்கேடான அறுவறுக்கத்தக்க காரியங்களை செய்வது நல்லவர்களின் பண்பல்ல என்று இறைவன் கூறுகிறான். சிலர் அசிங்கமான இருபொருள் தருகின்ற வார்த்தைகளை பேசி மகிழ்கிறார்கள். அந்த வார்த்தை ஆபாசத்தை எடுத்துக் காட்டாவிட்டாலும் அதைக் கொண்டு தவறான அர்த்தத்தை நாடுகிறார்கள். இப்படி மறைமுகமாக கெட்ட வார்த்தைகளை பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ

”வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்” என (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:33)

 اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
(அல்குர்ஆன்: 16:90)

நயவஞ்சகனின் குணம்

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الحَيَاءُ وَالعِيُّ شُعْبَتَانِ مِنَ الإِيمَانِ، وَالبَذَاءُ وَالبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)
நூல்: (திர்மிதீ: 2027) (1950)

நாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது. எத்தனையோ மோசமான வார்த்தைகள் நாவில் தவழுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதாரண பேச்சுக்களைப் போல் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் விடும் வார்த்தைகள் நமக்கு அற்பமானதாக தெரிந்தாலும் அது இறைவனுடைய பார்வையில் படுமோசமானதாக கருதப்படலாம். அதனால் நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கிய நிலையை கூட எய்தலாம். எனவே சிறிய கெட்டவார்த்தை பெரிய கெட்டவார்த்தை என்றெல்லாம் பாகுபடுத்தாமல் தீயதை முழுமையாக தவிர்ந்துகொள்வதே ஏற்புடையது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)
நூல்: (புகாரி: 6478) 

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்

 يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ‏

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன்: 33:32)

மோசமான மனிதர்

தீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ قَالَتْ
اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ائْذَنُوا لَهُ، بِئْسَ أَخُو العَشِيرَةِ، أَوِ ابْنُ العَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الكَلاَمَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الكَلاَمَ؟ قَالَ: «أَيْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ، أَوْ وَدَعَهُ النَّاسُ، اتِّقَاءَ فُحْشِهِ

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்” (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)
நூல்: (புகாரி: 6054) 

நபி (ஸல்) அவர்களின் குணம்

சத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி (ஸல்) அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களை சமுதாயம் தலைவராக ஏற்றுக்கொண்டதற்கான முக்கிய காரணமாகும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَكَانَ يَقُولُ: «إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ”உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!” என்று அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­)
நூல்: (புகாரி: 3559) 

ஆதாரமற்ற பேச்சுக்கள்

மணிக்கணக்கில் பேசும் பேச்சுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதாரமற்ற பேச்சுக்களாகவே இருக்கின்றது. சம்பவத்தை நேரடியாக கண்டிருக்கமாட்டார். ஆனால் கண்ணால் கண்டதைப் போல் மற்றவரிடம் விவரித்துக் கொண்டிருப்பார். நீ கண்ணால் பார்த்தாயா? என்று கேட்கும் போது, சற்றுத் தடுமாறி இல்லை, இன்னார் தான் இப்படி சொன்னார் என்று கூறுகிறார். சொல்லப்பட்ட செய்தி சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல் தனக்கு நெருடலை ஏற்படுத்தாமல் இருந்தால் உடனே அதை பரப்பிவிடுகிறார்.

இதை கேட்பவர்களும் இதுபோன்றே நடந்துகொள்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் தீர விசாரிக்காமல் கேட்டவுடன் நம்பிவிடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் நரகப்படுகுழியே பரிசாக கிடைக்கும்.

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ  وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.
(அல்குர்ஆன்: 24:15)

அல்லாஹ் வெறுக்கும் 3 செயல்கள் 

حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ
إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். ‘இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்’ (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவது, அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது ஆகியவை ஆகும்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி­) யின் எழுத்தாளர்
நூல்: (புகாரி: 1477) 

كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி­)
நூல்: முஸ்லி­ம் முன்னுரை-6

சாதாரண குற்றமல்ல

கெட்ட வார்த்தைகளை பேசுவது விபச்சாரத்திற்கு நிகரானது. மர்ம உறுப்பு மட்டும் தான் விபச்சாரத்திற்கு காரணம் என்று நினைக்கிறோம். தவறான பேச்சுக்களைப் பேசுவதும் விபச்சாரத்திற்கு காரணமாக அமைகிறது. எத்தனையோ பல விபச்சாரங்கள் தீயவற்றை பேசுவதிலிருந்தே தொடங்குகின்றன. பேசுகின்ற கெட்ட வார்த்தைகள் விபச்சாரத்தைத் தூண்டினாலும் வேறுவிதமாக அமைந்தாலும் தீயது என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டால் நாவு விபச்சாரம் செய்ததாக பொருள் என்று பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

قَالَ أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகின்றது. 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)
நூல்: (புகாரி: 6243) 

சொர்க்கத்திற்கு  உத்தரவாதம் தரும் 2 செயல்கள்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி­)
நூல்: (புகாரி: 6474) 

நரகில் தள்ளும் நாவு

உறுப்புகளால் செய்யும் தீயசெயல்கள் குற்றங்களாக கருதப்படுகிறது. நாவில் எழும் அசிங்கமான வார்த்தைகள் இது போன்று கருதப்படுவதில்லை. இந்த எண்ணத்தில் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா? என்று கேட்டபோது நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ وَعَمُودِهِ وَذُرْوَةِ سَنَامِهِ؟» فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «رَأْسُ الْأَمْرِ الْإِسْلَامُ وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ» ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ؟» فَقُلْتُ لَهُ: بَلَى يَا نَبِيَّ اللَّهِ. فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ: «كُفَّ عَلَيْكَ هَذَا» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: ” ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ، أَوْ قَالَ: عَلَى مَنَاخِرِهِمْ، إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ”அல்லாஹ்வின் நபியே! ஆம் (எனக்கு சொல்லுங்கள்)” என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ”இதை நீ பாதுகாத்துக் கொள்” என்று கூறினார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ”மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி­)
நூல்: (அஹ்மத்: 22016) (21008)

உண்மையை உடைத்துப் பேச வேண்டும்

உண்மையை பேசுவதற்கு யாருக்கும் அஞ்சக்கூடாது. நாட்டின் அரசனை எதிர்த்துப் பேசுவது என்பது சாதராண ஒன்றல்ல. அவ்வாறு பேசினால் ஆளுபவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சகல அதிகாரமும் அவன் கையில் இருக்கிறது. இவ்வளவு வ­லிமையைப் பெற்றவன் உண்மைக்குப் புறம்பாக செல்லும் போது சத்தியத்தை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறெதற்கும் சக்தி இல்லாத ஒருவர் அவனிடத்தில் நியாயத்தை கேட்பது மிகப்பெரிய ஜிஹாத் ஆகும். நமக்கு வேண்டியவர்கள் நமக்கு மேல் அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு நல்லதை எடுத்துச் சொல்வதற்கே பயப்படுகின்ற நாம், எப்போது ஆட்சியாளனுக்கு உண்மையை உணர்த்தப்போகிறோம்?

عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ
بَايَعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وَعَلَى أَثَرَةٍ عَلَيْنَا، وَعَلَى أَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَعَلَى أَنْ نَقُولَ بِالْحَقِّ أَيْنَمَا كُنَّا، لَا نَخَافُ فِي اللهِ لَوْمَةَ لَائِمٍ

இன்பத்திலும், துன்பத்திலும், விருப்பிலும், வெறுப்பிலும், எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை  அளிக்கப்படும் போதும், (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம்.

அறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி­)
நூல்: (முஸ்லிம்: 3754) 

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ،
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»

நபி (ஸல்) அவர்கள் வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்திருந்த நிலையில் ஒரு மனிதர் அவர்களிடம் ”எந்த ஜிஹாத் சிறந்தது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”அக்கிரமம் புரியும் அரசனிடத்தில் சத்தியத்தை எடுத்துரைப்பது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி­)
நூல்: (நஸாயீ: 4209) (4138)

மூத்தவரை முற்படுத்துதல்

கருத்து தெரிவிக்கும் போது முத­லில் பெரியவரை பேசவிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். எதை எப்படி கையாள வேண்டும் என்ற யுக்தியும் அறிந்தவர்கள். வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது அவர்களை பின்தள்ளிவிட்டு இளைஞர்களை பேசவிடுவது அவர்களை அவமதித்ததாகவும் கருதப்படும்.

فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ، وَمُحَيِّصَةُ، وَحُوَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ يَتَكَلَّمُ، فَقَالَ: «كَبِّرْ كَبِّرْ» وَهُوَ أَحْدَثُ القَوْمِ، فَسَكَتَ فَتَكَلَّمَا

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும், ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ”பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு” என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீஹஸ்மா (ர­லி)
நூல்: (புகாரி: 3173)

தெளிவாக பேச வேண்டும்

அவசரம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக வார்த்தைகளை தெளிவாக உச்சரித்து பேசினால் நம்முடையக் கருத்து கேட்பவர்களிடம் உடனே எடுபடும். நம்முடைய பேச்சிற்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ العَادُّ لَأَحْصَاهُ

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)
நூல்: (புகாரி: 3567) 

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ
أَلاَ يُعْجِبُكَ أَبُو فُلاَنٍ، جَاءَ فَجَلَسَ إِلَى جَانِبِ حُجْرَتِي، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي، وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَسْرُدُ الحَدِيثَ كَسَرْدِكُمْ

நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக, வேகவேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)
நூல்: (புகாரி: 3568) 

பல விஷயங்களை பேசிவிட்டு முக்கியமான விஷயத்தை குறிப்பிடும் போது சொல்ல வருகின்ற கருத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டால் கேட்பவரின் உள்ளத்தில் அது ஆழமாக பதிந்துவிடும். இல்லையென்றால் கேட்பவர் இதை சர்வசாதாரணமாக நினைத்துவிட வாய்ப்புள்ளது.

عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا، حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ، سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا

நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி­)
நூல்: (புகாரி: 95) 

சப்தமாக பேசவேண்டிய தேவை ஏற்பட்டால் மாத்திரம் சப்தமிட்டுப் பேச வேண்டும். தேவையில்லாமல் கத்துவது கழுதையின் குரலுக்குச் சமம்.

وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْر

”நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).
(அல்குர்ஆன்: 31:19)

நல்ல பேச்சுக்களை மட்டும் பேசி சொர்க்கம் செல்லக்கூடிய மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.