136. நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்?
மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா?
பதில்
மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ, நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கென்றோ தனிப்பட்ட எந்த துஆவும் ஹதீஸ்களில் இல்லை.
“அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்)
இதுபோன்ற பொதுவான துஆ ஓதிக் கொள்வது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது குறிப்பாக எதையும் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்களில் வரவில்லை.
“மனாஸிக்குல் ஹஜ் வல் உம்ரா’ என்ற நூலில் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு’ என்று தொழுகையில் வருகின்ற ஸலவாத்தைச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். எனினும் இதற்கு ஹதீஸ் ஆதாரம் எதையும் காட்டவில்லை.
இப்னு உமர் (ரலி) அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்ர்! அஸ்ஸலாமு அலைக்க யா அபத்தீ (என்னுடைய தந்தையே!)’ என்று கூறுவார்கள்.
இந்த நடைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். நபித்தோழர்களின் கருத்து மார்க்கமாகாது என்ற அடிப்படையில் இதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.
இப்னு தைமிய்யா இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்தையும் உஸைமீன் மேற்கோள் காட்டுகிறார்.
மஸ்ஜிதுந்நபவிக்கு வருகின்ற ஒவ்வொரு மனிதனும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். காரணம் முன்னோர்களான நபித்தோழர்கள் இதைச் செய்து கொண்டிருக்கவில்லை.
மாறாக, அவர்கள் பள்ளிக்கு வந்து தொழுவார்கள். அந்தத் தொழுகையில், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’ (நபியே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டுமாக!) என்ற, நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதக் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவார்கள். தொழுகை முடிந்து பள்ளியில் அமர்வார்கள் அல்லது வெளியே சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் மீது தொழுகையில் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வது மிகச் சிறந்தது என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தது தான்.
இவ்வாறு இப்னு தைமிய்யா கூறுவதாக ஸாலிஹ் அல் உஸைமீன் குறிப்பிடுகின்றார்.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது பிரத்தியேக துஆ எதுவும் கூறாமல் பொது மையவாடிகளில் ஓதும் பிரார்த்தனையை மட்டுமே கூறவேண்டும்.