135. தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ, மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா? அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை தவாஃபுல் விதாவை தள்ளிபோடலாமா? அதிகப்பட்சமாக எத்தனை நாள் வரை தள்ளிப் போடலாம்?

பதில்

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.

(அல்குர்ஆன்: 2:198)

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது கூடத் தவறில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே இதன்படி மார்க்க காரியங்களுக்காகவோ, சொந்தக் காரியங்களுக்காகவோ தவாஃபுல் விதாவைத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.

(அல்குர்ஆன்: 2:197)

இந்த வசனத்தில் ஹஜ் வணக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பிட்ட மாதங்கள் என்று அல்லாஹ் கூறுவதால், துல்ஹஜ் மாதம் முடிவதற்குள் தவாஃபுல் விதாவை நிறைவேற்றுவது சிறந்தது.