125. 10ம் நாள் லுஹரை எங்கு தொழுவது? கஸ்ராகவா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

பத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதுடன் மினாவிலும் வந்து 2வது முறை தொழ வேண்டுமா? இரண்டு முறையும் 4 ரக்அத்கள் முழுமையாக தொழ வேண்டுமா? அன்றைய தொழுகைகளில் எல்லா வக்துகளையும் கஸ்ரு இல்லாமல் முழுமையாகத் தான் தொழவேண்டும்?

பதில்

பத்தாம் நாள் அன்று மினாவில் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.

இது “தவாஃப் ஸியாரா’ எனவும் கூறப்படுகிறது. இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று “தவாஃப் அல் இஃபாளா’ செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்லிம்: 2307)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 2137)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.

தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இமாமாக இருந்ததால் இரண்டு முறை தொழுதுள்ளார்கள். நாம் மக்காவில் தொழுவதே போதுமானதாகும். பயணத்தின் போது பொதுவான கஸ்ருத் தொழுகையின் சட்ட அடிப்படையில் லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும்.