10) நபியின் மீதே பொய்
இதை விடவும் மோசமான வரிகளைப் பார்ப்போம். திருக்குர்ஆனின் போதனைகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும் ஆழமாக அறிந்து கொள்ளாத இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவு அறிந்து வைத்துள்ள சராசரி முஸ்லிம் கூட இந்த வரிகளின் பொருள் அறிந்தால் ஏற்க மாட்டான்.
இந்த வரிகளின் பொருள் தெரியாத காரணத்தினாலேயே இதைப் புனிதமானது என்று இந்த சராசரி முஸ்லிம் எண்ணுகிறான். விளக்கமோ, விமர்சனமோ இன்றி இவ்வரிகளின் தமிழாக்கத்தை மட்டும் அவன் அறிந்து கொண்டால் இந்த யாகுத்பாவை’த் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றே அவன் முடிவுக்கு வருவான். அவ்வளவு மோசமானவை இவ்வரிகள்.
இந்த அளவு மோசமான இந்த வரிகளையும் ஏழு ஆண்டுகள் அரபு மொழி கற்பதில் செலவிட்ட சில முல்லாக்கள் பாடி வருகின்றனர். இந்தக் கச்சேரியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இங்கே நாம் அடையாளம் காட்டவுள்ள வரிகளைக் கண்ட பின்னும் இவர்களால் யாகுத்பா’ கச்சேரியை நிறுத்த முடியவில்லை என்றால் இவர்கள் நடத்தும் கச்சேரியின் அர்த்தத்தை இவர்கள் புரியாதவர்களாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தங்கள் ஸனதுகளைக் கூட வாசித்து பொருள் செய்யத் தெரியாதவர்களைத் தானே மதரஸாக்கள் உருவாக்கி வருகின்றன.
இந்த வரிகளின் அர்த்தத்தை அறிந்த பின்பும் இவர்கள் இக்கச்சேரியை நடத்துகின்றார்கள் என்றால் சராசரி மனிதன் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாத அளவு கூட புரிந்து கொள்ளாத ஞானசூன்யங்களாக இவர்கள் இருக்க வேண்டும். அல்லது தங்கள் தட்டில் வந்து விழும் தட்சணைகள் இஸ்லாத்தை விடவும் இவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க வழியில்லை.
இதோ அந்த வரிகள்:
وإن جـدي رسـول الله كـان يقول
أنـت الـخليفة لي في خـير كل مقول
فـكن لأمتي الـمدد ارتـضاك عقول
فأنـت قـيم شـرعي محيي الـديـن
இவையும் யாகுத்பா’ என்ற பெயரில் நம்மவர்களில் பலர் படித்து வரும் நச்சுக் கவிதையின் வரிகளாகும்.
நன்மையான எல்லா சொற்களுக்கும் நீங்களே எனக்கு கலீபாவாக இருந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்துக்கு நீங்கள் உதவியாளராக ஆகி விடுங்கள்; அறிவுடையோர் உங்களைப் பொருந்திக் கொண்டனர். முஹ்யித்தீனே! நீங்கள் தான் என் மார்க்கத்தை நிலைநிறுத்தக் கூடியவர்’ என்று எனது பாட்டனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.
மேலே கூறப்பட்ட வரிகளின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இது இந்த வரிகளில் தான் எத்தனை பொய்கள்?
தலையில் சிறிதளவு சரக்கும், சரித்திரத்தில் சிறிதளவு அறிவும் இருக்கக் கூடிய எவரும் கேட்டுச் சிரிக்கக் கூடிய இந்தப் பொய்களைத் தான் மார்க்கத்தின் பெயரால் மவ்லவிமார்கள் நம்மிடம் நிலைபெறச் செய்துள்ளனர். அரபு மொழியில் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால் அதன் அர்த்தமும் நமக்குத் தெரியாது என்ற காரணத்தால் நாம் எந்த அளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இப்போதாவது இதன் பக்தர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
முதலாவது பொய்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முடிந்து சுமார் ஐநூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்த அப்துல் காதிர் ஜீலானி அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிச் சந்தித்திருக்க முடியும்? எப்படிப் பேசியிருக்க முடியும்?
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தார்’ என்று இதன் ஆதரவாளர்கள் சரித்திரத்தையே புரட்டப் பார்க்கிறார்களா? வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்யும் என்றால் புரட்டினாலும் புரட்டுவார்கள். அப்படிப் புரட்டுவார்களேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரைத் தனது கலீஃபா என்று சொல்லியிருக்க(?) இவரை விட்டு விட்டு நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை தவறாக கலீஃபாவாக ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்று கூறப் போகிறார்களா?
அல்லது அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலம் வரை அதாவது ஹிஜ்ரி ஐநூறு வரை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?
அல்லது கிறித்தவர்களின் நம்பிக்கையைப் போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்து விட்டு மீண்டும் இவரது காலத்தில் உயிர்த்து எழுந்தார்கள் என்று இந்த மவ்லவிமார்கள் இதையும் நியாயப்படுத்தப் போகிறார்களா?
யார் யார் பெயராலோ பொய்களைச் சொல்லி கடைசியில் அல்லாஹ்வின் தூதர் பெயராலும் பொய் சொல்லத் துணிந்து விட்டனர்.
யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது புகலிடமாக நரகத்தையே அடைந்து கொள்ளட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கூட இந்தக் கவிஞன் பொருட்படுத்தவில்லை.
இவனுக்குத் தான் இறையச்சமும் மறுமை பற்றிய பயமும் இல்லை என்றால் ஏழு ஆண்டு காலம் கற்றுத் தேர்ந்த மவ்லவிமார்களுக்குமா இந்த எச்சரிக்கை தெரியாமல் போய் விட்டது? அல்லது நரகைப் பற்றி இவர்களுக்கு அச்சமே இல்லையா?
அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய் சொல்லப்பட்டிருக்கின்ற இந்த ஒரேயொரு காரணத்துக்காகவே யாகுத்பா’ பாட்டு தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டாமா?
இரண்டாவது பொய்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தன்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என அப்துல் காதிர் ஜீலானி அவர்களே சொன்னதாக மற்றொரு பொய்யையும் புனைந்திருக்கிறான் இந்தக் கவிஞன்.
இதை இவனாகச் சொல்லவில்லையாம். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தான் இப்படி நபியின் பெயரால் பொய் சொன்னார்களாம். உண்மையில் இந்தக் கவிஞன் அந்தப் பெரியாரைப் புகழ்ந்திருக்கிறானா? அல்லது கிண்டல் செய்வதற்காக இப்படிப் பாடியிருக்கின்றானா? என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலம் ஹிஜ்ரி ஐநூறு என்றால் இந்தக் கவிஞனின் காலம் ஹிஜ்ரி ஆயிரத்திற்கும் மேல். இவனுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்திற்கும் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி இருக்கின்றது. (இது எழுதப்பட்ட ஆண்டு பற்றி இதன் பக்தர்கள் குறிப்பிடும் காலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பார்த்தாலும் இருவருக்கும் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி உண்டு.)
இந்தக் கவிஞனுக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பெரியார் இப்படிச் சொல்லி இருந்தால் அது எப்படி இந்தக் கவிஞனுக்குத் தெரியும்? அந்தப் பெரியார் எழுதிய நூல்களில் அல்லது அவரது சொற்பொழிவுத் தொகுப்புகளில் இந்த விபரம் உள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லது அவரது காலத்தில் எழுதப்பட்ட மற்றவர்களின் நூல்களிலாவது இந்த விபரம் இருக்கின்றனவா? நிச்சயமாக அப்படியும் இல்லை.
திட்டமிட்டு அந்தப் பெரியாரின் பெயரால் இந்தக் கவிஞன் பொய் சொல்லியிருக்கிறான் என்பதைத் தான் இது காட்டுகிறது. நபிகள் நாயகத்தை மிகவும் நேசித்த அப்பெரியார் ஒருக்காலும் இப்படி அவர்கள் பெயரால் பொய் சொல்ல மாட்டார் என்று இதைப் பாடியவனுக்குத் தெரியாமல் போகலாம். இன்றளவும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற கண்டிக்க முன் வராத இந்தப் புரோகிதர்களுக்கும் தெரியவில்லை என்றால் எப்படி நம்புவது?
மூன்றாவது பொய்
எல்லா விஷயத்திலும் நீங்கள் தான் எனது கலீஃபா என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்களாம்! காதிலே பூச்சுற்றுகிறான் இந்தக் கவிஞன். நாமும் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அபூபக்ரோ, உமரோ, உஸ்மானோ, அலியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கலீஃபா அல்லவாம்! ஐநூறு ஆண்டுகளாக வாழ்ந்த மக்களில் எவருக்குமே இந்தத் தகுதி இல்லையாம்! இவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கலீஃபாவாம்.
இந்த சமுதாயத்திலேயே முதலிடத்தைப் பெற்ற அபூபக்ரையும், ஏனைய மூன்று கலீஃபாக்களையும், அனைத்து நபித்தோழர்களையும், அவர்களுக்கு அடுத்த தலைமுறையையும், எண்ணற்ற அறிஞர்களையும் மூலையில் தூக்கி எறிந்து விட்டு இவரை, அரியாசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றி வைத்தார்கள் என்று கூறும் இந்த வரிகளையும் ஆதரித்து அறிக்கை விடுபவர்கள் தான் நபித்தோழர்களை குலஃபாயே ராஷீதீன்களை மதிக்கிறார்களாம். நன்றாகத் தான் மதிக்கின்றார்கள்(?)
நான்காவது பொய்
தனது சமுதாயத்தினருக்கு உதவி செய்ய எவருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வும் கூட உதவி செய்ய மாட்டான் என்று அஞ்சி இந்தப் பெரியாரை தனது சமுதாயத்திற்கு உதவியாளராக நபியவர்களே நியமித்து விட்டார்களாம்.
எனது சமுதாயம்’ என்ற இந்தச் சொல்லில் நான்கு கலீஃபாக்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும், நான்கு இமாம்களும் உட்பட பலநூறு அறிஞர்களும், அதற்குப் பின் வாழ்ந்த நல்லவர்களும் அடங்குவர். அவர்களுக்கெல்லாம் கூட இந்தப் பெரியாரைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதவியாளராக நியமித்தார்களாம். சொல்லுகின்ற பொய்யை நம்பும்படியாகக் கூட இந்தக் கவிஞனுக்கு சொல்லத் தெரியவில்லை.
அல்லாஹ் ஒருவனை மட்டுமே உதவியாளனாக அறிமுகப்படுத்தி தனக்குத் தானே எந்த நன்மையும் செய்ய முடியாது என்றெல்லாம் தன்னிலை விளக்கம் தந்த இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயம் முழுமையையும் அந்தப் பெரியாரின் கையில் அதுவும் நபியின் காலத்தில் பிறந்தே இருக்காத ஒருவரின் கையில் பிடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்றால் இதை யாரால் தான் நம்ப முடியும்? நம்புவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?
ஐந்தாவது பொய்
எனது மார்க்கத்தை நீங்களே நிலைநாட்டக் கூடியவர் என்றும் நபியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்களாம். யாகுத்பா சொல்கிறது’.
தனது தூதுத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்து மார்க்கத்தை முழுமையாக நிலைநாட்டி விட்டு எந்த ஒன்றையும் மறைக்காமல் அப்படியே மக்கள் முன் வைத்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுள்ள போது பிறகு வரும் ஒருவர் தீனை நிலை நிறுத்துவார் என்றால் ஏற்க முடியுமா?
நிலை நிறுத்துவதற்கு வேறு பொருள் என அவர்கள் கூறினால் அதுவும் கூட நம்பும்படியாக இல்லை.
மற்ற நல்லவர்கள், பெரியார்கள், அறிஞர்கள் எப்படி தீனுக்காக உழைத்தார்களோ அந்த அளவுக்குத் தான் அந்தப் பெரியாரும் உழைத்தார்களேயன்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி அப்படி எதையும் நிலைநாட்டிடவில்லையே?
அவர்கள் காலத்திலும் பிளவுகள், பூசல்கள், தரீக்கா எனும் பெயரால் மோசடிகள், பித்அத்கள் யாவும் இருக்கத் தான் செய்தன. இன்று வரைக்கும் இருக்கத் தான் செய்கின்றன. மற்றவர்கள் போலவே அவற்றை இந்தப் பெரியாரும் கண்டித்துள்ளார்கள் என்பதைத் தவிர வேறு எதை இவர்கள் நிலைநாட்டினார்கள்?
يـا سيـدي سـندي غوثي ويا مددي
كـن لي ظـهيرا عـلى الأعداء بالمدد
مـجير عـرضي وخذ بيدي مدى مدد
خـليفـة الله فـينـا محيي الـديـن
என் தலைவரே! என் ஊன்று கோலே! என் இரட்சகரே எனக்கு உதவுபவரே! என் எதிரிகளுக்குப் பாதகமாக எனக்கு உதவுபவராக நீங்கள் ஆகி விடுங்கள்! என் கௌரவத்தைக் காப்பவராகவும் ஆகி விடுங்கள்! காலா காலம் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பகரமாக எங்களிடம் இருக்கும் முஹ்யித்தீனே!
என்பது இதன் பொருள்.
وعـدني مـن مـريدي نهجك الأقوم
ومـن عـبيدك عـبدا طـائعا أدوم
ومـن جـنودك مـقداما إلـيه يؤم
نـعم الأمـير أمـيرا محيي الـديـن
உங்களின் தெளிவான பாட்டையை நாடும் (முரீதுகளில்) ஒருவனாக என்னையும் கருதிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்டு நடக்கும் உங்கள் அடியார்களில் ஒருவனாகவும் என்னைக் கருதிக் கொள்ளுங்கள்! உங்களின் போர்ப்படையில் முன்னனி வகிப்பவனாகவும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! தலைவர்களில்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!
என்பது இதன் பொருள்.
என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்டு விட்ட அல்லாஹ்வின் அடியார் ஒருவரைக் கூவி அழைத்து இறைவனது தன்மையை பங்கு போடும் விதமாக அமைந்த இக்கவிதை வரிகள் படிக்கத்தக்கது தானா?
بـصر فـؤادي صـراطا أنت سالكه
فـالله أعـطاكـه فـأنت مـالـكه
ونـجه مـن لـظي فـيها مـهالكه
سـلطان كـل ولـي محيي الـديـن
நீங்கள் நடந்து சென்ற நேரான வழியை என் உள்ளத்துக்குக் காட்டி விடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். நீங்கள் அந்தத் துறைக்குச் சொந்தக்காரர்களாக உள்ளீர்கள். கொளுந்து விட்டெறியும் நெருப்பிலிருந்து காத்து விடுங்கள். அனைத்து வலிமார்களுக்கும் மன்னரே முஹ்யித்தீனே!
இந்த வரிகளில் அப்துல் காதிரை அல்லாஹ்வாகவே இந்தக் கவிஞன் கருதி இருப்பதை எவருமே உணரலாம்.
ஏராளமான நபிமார்கள் எதிரிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனையோ இறை நேசர்கள் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டதும் உண்டு. அந்தச் சமயங்களில் அந்த எதிரிகளிடமிருந்து சுயமாக அவர்களால் தங்களையே காத்துக் கொள்ள முடிந்ததில்லை. இந்தக் கவிஞனோ தன் எதிரிகளை ஒழிக்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிடுகின்றான்.
அல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹுவல் ஹய்யுல் கையூம் (நித்திய ஜீவனுள்ள அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை) என்று ஒரு புறம் கூறிக் கொண்டு காலா காலம் என் கையைப் பிடித்துக் கொண்டே இருங்கள்’ என்று மற்றவரை நோக்கிக் கூப்பாடு போடுவது எப்படி முறையாகும்?
அப்துல் காதிர் என்பவரும் அல்லாஹ்வைப் போல நித்திய ஜீவன் பெற்றவரா? காலாகாலமாக இருக்கக் கூடிய வரம் எதனையும் அவர் பெற்று வைத்திருக்கிறாரா?
வேதத்தையும், ஞானத்தையும், நுபுவ்வத்தையும் ஒரு மனிதருக்கு வழங்கிய பின் எனக்கு நீங்கள் அடிமைகளாக ஆகுங்கள்’ என்று கூற எந்த மனிதருக்கும் அனுமதி இல்லை என்கிறது குர்ஆன். (பார்க்க 3:79) நபிமார்களும் கூட தம் உம்மத்தினரை அடிமைகள் என்று கூற முடியாது என்ற நிலையில் இந்தக் கவிஞன் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கிறான்.
அப்துல் காதிர் என்றாலே அல்லாஹ்வின் அடிமை என்பது பொருள். தன்னையே அல்லாஹ்வின் அடிமை என நம்பி வாழ்ந்த இந்தப் பெரியாருக்கு இவன் தன்னை அடிமை என்கிறான். நம்மையும் அவருக்கு அடிமையாக்க எண்ணுகிறான்.
நேரான வழியை உள்ளத்திற்கு உணர்த்துமாறு அப்துல் காதிரிடம் கேட்கும் இந்தக் கவிஞன், உள்ளங்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் அல்லாஹ்விடமிருந்து பறித்து அப்துல் காதிரிடம் கொடுக்க எண்ணுகிறான்.
அபூதாலிபு உள்ளத்தில் நேர்வழியை உணர்த்த நபியவர்களுக்கே ஆற்றல் இல்லை என்பதை முன்பே நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். அப்துல் காதிருக்கு அந்த ஆற்றல் இருப்பதாக இந்தக் கவிதை கூறுகின்றது.
இந்தக் கவிஞன் அல்லாஹ்வுக்கென்று எதையும் மிச்சம் வைக்கவில்லை. இவனது இந்தக் கவிதையை நம்பினால் அல்லாஹ் என்று ஒருவன் தேவையே இல்லை. இரண்டு அல்லாஹ் இருப்பதாக இவ்வளவு தெளிவாக அறிவிக்கக் கூடிய இதனை மறுமை நாளை நம்பக் கூடியவர்கள் ஓத முடியுமா?
இதன் பின்னரும் இந்த மாபாதகமான யாகுத்பாவை ஓதுபவர்கள் மறுமையில் நிச்சயம் நஷ்டத்தையே அடைவார்கள். இத்தகையவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கைகளையும் நினைவூட்டுகின்றோம்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் கூறினார்.
‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோல் ஆவீராக!’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன்: 39:65) ➚, 66
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்
நமது தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் இன்ன பிற நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போய் நிரந்தரமான நரகில் சேர்த்து விடக் கூடிய ஷிர்க்’ எனும் இணை வைக்கும் காரியத்தைத் தான் மார்க்கத்தின் ஒரு அம்சமாக நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். முல்லாக்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மறுமையில் இதற்கான தண்டனையை இவர்கள் நிச்சயம் அடைந்தே தீருவார்கள். இது வரை இதை ஓதியதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு இனி மேல் ஓதுவதில்லை எனத் தீர்மானமும் செய்து கொண்டால் மட்டுமே இறைவனுடைய வேதனையிலிருந்து தப்ப முடியும்.
وقـلت إن يـدي هـذي لـدائـمة
لـمن يـريد طـريـقي وهـي قائمة
فـازت بـها أنـفس لـلرشد رائمة
أنـا الـمنادي بـحق محيي الـديـن
எனது இந்தக் கை என்றென்றும் நிலைத்திருக்கும் என் தரீக்காவை நாடுபவர்களுக்கு என் கை துணை நிற்கும். நேர்வழியை நாடும் மக்கள் என் கையால் வெற்றி பெற்று விட்டனர். தீனை உயிர்ப்பித்தவர்’ என்று உண்மையில் அழைக்கப்படுவதற்கு நானே அதிக உரிமை படைத்தவன் என்று தாங்கள் கூறினீர்கள்.
இதற்கு முந்தைய வரிகளில் வரம்பு மீறியது போலவே இங்கும் வரம்பு மீறப்படுகின்றது. என்றென்றும் நீடித்திருக்கும் இறைவனது தனித்தன்மை இங்கே அப்துல் காதிருக்கு பங்கு போடப்படுகின்றது. மண்டைக் கனம் கொண்டவராக அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இங்கே சித்தரிக்கப்படுகிறார்கள். முந்தைய அடிகளில் நாம் எடுத்து வைத்த குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் முரணாக இவ்வரிகள் அமைந்துள்ளன.
كم من كرامات حق منك قـد ظهرت
منـيرة في قـلوب الـخلق قد زهرت
كمـعجزات نـبي في الورى اشتهرت
يـا مـن دعـى ربـه يـا محيي الدين
உண்மையான அற்புதங்கள் ஏராளமாக உங்களிடமிருந்து வெளிப்பட்டன. மக்கள் உள்ளங்களில் அந்தச் செய்தி தெளிவாகப் பதிந்துள்ளது. நபியவர்களின் அற்புதம் போலவே மக்களிடம் பிரபல்யமாக உள்ளது. இறைவனால் முஹ்யித்தீன் என்று அழைக்கப்பட்டவரே!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களுடன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அற்புதங்களை இந்தக் கவிஞன் இங்கே ஒப்பிட்டுச் சமப்படுத்துகின்றான். அப்துல் காதிர் ஜீலானி பெயரால் ஏராளமான பொய்கள் அற்புதங்கள் என்று அவிழ்த்து விடப்பட்டிருப்பதில் ஆனந்தம் கொள்கிறான். புராண இதிகாசங்களில் இதை விடவும் அற்புதங்கள் கூறப்படுகின்றன.
அவை எவ்வாறு நம்பத்தக்கவை அல்லவோ அது போன்ற பொய்களைத் தான் இவன் அற்புதம் என்கிறான். அவரை இறைவனே, முஹ்யித்தீன் என்று அழைத்ததாகக் கூறும் இந்தக் கவிஞன் மற்றொரு இடத்தில் முஹ்யித்தீன்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு வேறு ஒரு கதை சொல்கிறான். அந்தக் கவிதை வருமாறு:
رأيت دين الهدي شخصا غـدى حرضا
فـشفيتـه لـمسـة كـفيتـه عرضا
فـزال عـنه الـذي قـد عمه مرضا
فـقام يـدعـوك حـبا محيي الـدين
நேரான வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை மெலிந்த மனிதனின் வடிவில் தாங்கள் கண்டீர்கள்! தங்கள் கைகளால் அவனைத் தாங்கள் தொட்டவுடன் அம்மனிதனிடம் இருந்த நோய் விலகி அவன் எழுந்து அன்புடன் ‘தீனை உயிர்ப்பித்தவரே’ என்று தங்களை அழைக்கலானான்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு முஹ்யித்தீன் (தீனை உயிர்ப்பித்தவர்) என்ற பட்டம் எவ்வாறு கிடைத்தது என்று இந்தக் கவிஞன் இங்கே கூறுகிறான்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவ்வாறு இருக்க இஸ்லாம் எப்படி மனித வடிவம் பெற முடியும்? இதை எவரேனும் நம்ப முடியுமா?
இதை உருவகமாக அவன் கூறி இருக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்தக் கவிதை தவறாகவே அமைந்துள்ளதை உணரலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் தூய இஸ்லாத்தில் கலப்படங்கள் நுழைய ஆரம்பித்தன. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் அந்தக் கலப்படங்களை அப்புறப்படுத்தும் பணியை பலரும் மேற்கொண்டனர். அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் அவர்களில் ஒருவர் என்று கூறலாமே தவிர அவர் மாத்திரமே தீனை உயிர்ப்பித்தவர் என்பது எல்லா நல்லடியார்களின் சேவையையும் புறக்கணிப்பதாகவே அமையும்.
இப்படி இந்தக் கவிதை நெடுகிலும் ஏராளமான தவறுகள் மலிந்துள்ளன. மிகவும் மோசமான கவிதைகளையே இங்கே நாம் விமர்சனம் செய்துள்ளோம். எல்லா வரிகளும் விமர்சனம் செய்யப்படவில்லை. நாம் விமர்சிக்காது விட்டு விட்ட வரிகள் சிலவற்றில் தவறான கருத்துக்கள் இல்லை. வேறு சில வரிகளில் இருக்கும் தவறுகள் சமாளிக்கத்தக்கதாக உள்ளன. இதனாலேயே விமர்சிக்காமல் விட்டுள்ளோம். யாகுத்பாவிலும், மவ்லுதிலும் இருக்கின்ற தவறுகளை நீக்கி விட்டு அதை ஓதலாம் அல்லவா? என்பது சிலரது கேள்வி.
தவறுகள் இல்லாத எந்தப் பாடலையும் படிக்கத் தடை எதுவும் இல்லை. தவறு இல்லாத ஒரு தமிழ்ப்பாட்டை எப்படிப் படிக்கலாமோ அப்படிப் படிக்கலாம். அதற்காகப் பக்திப் பரவசத்துடன், பத்தி சாம்பிராணியுடன், மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் படிக்க முடியுமா?
தவறுகள் இல்லாத அந்தக் கவிதைகளின் அர்த்தம் தெரிந்தவர்கள் அதைப் படிக்கலாம். வணக்கமாக கருதப்படும் நிலையில் தவறுகளே இல்லாவிட்டாலும் படிக்கக் கூடாது. ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து இதை விளங்கலாம். இந்த மவ்லிதுகள், யாகுத்பாக்கள் போன்ற ஈமானைப் பறிக்கும் நச்சுக் கவிதைகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!