காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கேள்வி-பதில்: திருமணம்

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும். அதைத் தாண்டி காதல் என்ற பெயரில் தற்போது நடக்கும் செயல்களுக்கு அனுமதியில்லை.

இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம். 

காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:235)

கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.

இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது.

இதைக் கடந்து திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 3006

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி

புஹாரி 5233

இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேச்சுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு அனுமதி இல்லை.

இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.

அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம். ஆனால் தனிமையில் இருவரும் இருந்ததைப் பயன்படுத்தி அப்பெண் மிரட்டலாம். இதனால் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யும் நிலை ஏற்படும். ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் தவிர எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை என்றால் இது போன்ற ஆபத்துகள் ஆண்களுக்கு ஏற்படாது.

பாலியல் பலாத்காரம் என்று கூறப்படும் பெரும்பாலானவை இந்த வகையைச் சேர்ந்தது தான். விரும்பி ஒருவனுடன் ஊர் சுற்றி விட்டு அவன் மணமுடிக்க மறுத்தால் இந்தப் புகாரை ஒரு ஆயுதமாகப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.

எனவே வரம்பு மீறிய காதல் என்பது மறுமையில் மட்டுமின்றி இவ்வுலகிலும் கேடாகவே முடியும்.