மென்மையே நன்மை
நம்மில் பெரும்பாலானோர் பேசும் போது அவர்கள் அதில் மென்மையை கடைபிடிப்பதே இல்லை. சிலர், வார்த்தைகளில் விஷத்தன்மை இருக்கும். அதனை கேட்பவர்கள் மனம் புண்பட்டு காயப்படும். அதனைப் பற்றி பெரிதும் கண்டு கொள்ளாமல் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளில் உச்சகட்டத்தை தாண்டுகின்றனர். அனால், நபி (ஸல்) அவர்கள் நாம் பேசும் வார்த்தைகளில் எவ்வாறு மேன்மையை இருக்க வேண்டும் என்று அழகிய முறையில் காட்டி தந்துள்ளார்கள்.
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ”ஸலாம்” எனக் கூறுவீராக!(அல்குர்ஆன்: 25:63)➚
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.(அல்குர்ஆன்: 3:159)➚
நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன்: 68:4)➚
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகவும் அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) , நூல்கள்: புகாரி, முஸ்லீம்
நபி (ஸல்) அவர்கள் தீமையைச் செய்பவர்களாகவோ சொல்பவர்களாகவோ, தீமையை நாடக் கூடியவர்களாகவோ இருந்ததில்லை. அவர்கள் சொல்வார்கள்: உங்களில் மிகச் சிறந்தவர்கள் அழகான குணமுடையவர்களே!
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ,(புகாரி: 3559) ➚
ஒருவர் சிறந்தவர் என்று கூற வேண்டுமானால் அவரிடம் அழகான குணமிருக்க வேண்டும். குணங்களில் மிகவும் அவசியமானவை மென்மை (நிதானம்). அறிவோடு இணைந்த இந்தக் குணத்தை அல்லாஹ் நேசிக்கின்றான். மேலும் இதற்கு நன்மைகளையும் வழங்கின்றான்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ்ஜு அவர்களிடம் கூறினார்கள்: உம்மிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல், 2. நிதானம்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி) ,(முஸ்லிம்: 24) ➚
தனது பலத்தால் (மனிதர்களை) அதிகம் அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,(புகாரி: 6114) ➚
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (அல்குர்ஆன்: 42:43)➚
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற மனிதரை அழகிய உபதேசத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் திருத்தியுள்ளார்கள்.
ஒரு கிராமவாசி பள்ளிவாசல் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் கொதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் நபி (ஸல்) அவர்கள், ”அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,(புகாரி: 6128) ➚
(முஸ்லிம்: 480) ➚வது அறிவிப்பில் அந்தக் கிராமவாசியிடம் நபி (ஸல்) அவர்கள், ”இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல! இது இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் உரியதாகும்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மென்மை எதில் இருந்தாலும் அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ,(முஸ்லிம்: 5056) ➚
”அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றிற்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ,(முஸ்லிம்: 5055) ➚
மக்களுக்கு எவன் இரக்கம் காட்டவில்லையோ, அவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.(புகாரி: 7376) ➚
உம்மிடம் வசதியில்லாது, உமது இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக (அல்குர்ஆன்: 17:28)➚
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 3:134)➚
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான். ”அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான் (அல்குர்ஆன்: 43:44)➚
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர் அபுல் காசிம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 1356) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ”அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும், ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ”இதை ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ”ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ,(புகாரி: 2768) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் ”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போக மாட்டேன்” என்று சொன்னேன். ஆனால், என் மனதில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்ற போது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்த போது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ”அருமை அனஸ்! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?” என்று கேட்டார்கள். நான், ”ஆம்! செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ,(முஸ்லிம்: 4626) ➚
கதீஜா (ரலி) அவர்கள் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்கள் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் நபி (ஸல்) அவர்களிடம் அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பிவிடுவார்கள்.
சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், ”உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே” என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ”அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது” என்று பதில் சொன்னார்கள்.(புகாரி: 3818) ➚
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு… அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.(புகாரி: 3820) ➚
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : இம்ரானின் மகள், மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவர் ஆவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.(புகாரி: 3432) ➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும், உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),(புகாரி: 6236) ➚
இஸ்லாமிய மக்களே தவறு செய்தாலும் அதை மண்ணித்து விடுமாறு கூறுகிறுது என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல சான்றாக உள்ளது.
பள்ளிவாசலில் ஓரு கிராமவாசி சிறுநீர் கழிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (சஹாபாக்கள் அவரைத்தாக்க நினைக்கும் போது) அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்தப் பின் தண்ணீரை கொண்டுவரச் சொல் அதை அங்கு ஊற்றினார்கள்.
(புகாரி: 219) ➚
எனவே, நாம் பேசும் வாதைகளில் மென்மையும், பிறரை காயப்படுத்துதல் இல்லாமல், அனைவரிடத்திலும் சகோதரத்தோடு நடத்தல் ஆகிய பண்புகளை வளர்த்து அதை நடை முறை படுத்த வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.