குற்றங்களும் தண்டனைகளும் – 4

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

முகஸ்துதிக்காக நற்செயல் செய்பவருக்குரிய தண்டனை

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.

யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி),

(புகாரி: 6499),(முஸ்லிம்: 5709)

காணாத கனவைக் கண்டதாக கூறுபவருக்குரிய தண்டனை

காணாத கணவை கண்டதாகப் பொய்யுரைப்பது குற்றமாகும். இக்குற்றத்திற்கு மறுமையில் தண்டனை வழங்கப்படும். சிலர் இப்படி கணவு கண்டேன், அப்படி கணவு கண்டேன் என்று பொய் சொல்லி மக்களை நம்ப வைத்து, அதன் மூலம் காரியம் சாதிக்கவும் இலாபம் அடையவும் விரும்பவர். சிலர் தாம் பெரிய மனிதர் என்று காட்டிக் கொள்வதற்காக போலிக் கணவுகளை மக்களிடையே பரப்புவர்.

ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.). . . என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

(புகாரி: 7042)

ஒட்டுக் கேட்பவர்களுக்குரிய தண்டனை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

(புகாரி: 7042)

பொய் சொல்பவருக்குரிய தண்டனை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : புகாரி (6094)

பெருமையடிக்கும் ஏழைக்குரிய தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான், அவர்களைப் பார்க்கவுமாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர் (தாம் அம்மூவரும்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

(முஸ்லிம்: 172)

பொய் சத்தியம் செய்து வியபாரம் செய்பவனுக்குரிய தண்டனை

நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்;

அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர் (தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),

(முஸ்லிம்: 171)

தற்கொலை செய்பவருக்குரிய தண்டனை

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஒரு சிலரின் வாழ்க்கை இன்பப் பூஞ்சோலையாகிறது. ஆனால் சிலரின் வாழ்க்கை துன்பம் தரும் அனலாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்றே நினைக்கின்றான். ஏதாவது பிரச்சனை நேர்ந்தால் அதற்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணி தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றான்.

இன்றைய செய்தித் தாள்களைப் புரட்டினால் நாள் தோறும் தற்கொலை செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தற்கொலை நடப்பதற்காள காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்..

  • வரதட்சனைக் கொடுமையால் தீக்குளித்து சாவு
  • காதல் தோல்வியால் காதல் ஜோடிகள் தற்கொலை
  • தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை
  • வறுமையால் ஏழை விவசாயி தற்கொலை,  
    என இது போன்ற பல காரணத்தால் பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர், முஸ்லிம், இந்து என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் தற்கொலை செய்துக் கொள்வதை அவ்வப்போது செய்தித் தாள்களில் பார்க்கிறோம்.

தற்கொலை செய்து கொள்ளும் கோழைச் செயல் மறுமை நாளில் நிரந்தர நரகத்திற்கு கொண்டு சேர்த்துவிடும் என்பதை முஸ்லிம்கள் மனதில் வைக்க வேண்டும்.

பிரச்சனைகளுக்கு தற்கொலை தான் தீர்வு என்றால் மறுமை நாளில் தற்கொலைக்கு தண்டனை நிரந்தர நரகமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக் கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார்.

யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் :(முஸ்லிம்: 175),(புகாரி: 5778)

யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும் போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறுகிறாரோ அவர் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும் யார் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி),

நூல் : புகாரி (1363)

“யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (1365)

மேற்கூறப்பட்ட நபிமொழிகள் தற்கொலை எவ்வளவு பெரிய பாவம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எனவே இந்த தற்கொலை என்ற பெரும் பாவத்தின் பக்கம்கூட செல்லாதவர்களாக நாம் இருப்போம்.

ஒப்பாரி வைப்பவர்களுக்குரிய தண்டனை

துன்பம் ஏற்படும் போது கண்ணீர்விட்டு அழ அனுமதியுள்ளது. அதே நேரத்தில் சப்தமிட்டு ஒப்பாரி வைத்து அழுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுமையில் தண்டனையையும் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.

ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.

அறிவிப்பவர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி),

(முஸ்லிம்: 1700)