6 மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா?
6 மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா?
பதில்
தடையில்லை. எனினும், 1 வருடம் பூர்த்தியாகி இருப்பது சிறந்தது.
குர்பானி பிராணியின் வயது சம்பந்தமாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன. அகீகா பிராணியின் வயது சம்பந்தமாக ஹதீஸ்கள் இல்லை. எனினும், பொதுவாகவே, 6 மாத ஆட்டுக் குட்டி என்பது, 1 வருடம் பூர்த்தியடைந்த முஸின்னா என்ற நிலையை அடைந்த ஆட்டை விட தகுதி குறைவானது. இதனை குர்பானி சம்பந்தமாக நபியவர்கள் கூறியுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம்.
”இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5560)
அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாதக் குட்டி) உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத் தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு’ கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (3634)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸயீ (4306)
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகளில் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால் தான் வயதைக் கணிப்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட சட்டங்கள் அனைத்தும் குர்பானி பிராணிக்கு உரியவை என்றாலும், சிறந்த பலிப் பிராணிக்கு நபியவர்கள் கூறிய அளவுகோல்களாகவும் எடுத்துக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் 6 மாத குட்டி என்பது, 1 வருடம் பூர்த்தியடைந்த முஸின்னா என்ற நிலையை அடைந்த ஆட்டை விட தகுதி குறைவானது என்பதை விளங்க முடிகிறது.
By Farook