வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்பத்தில் நம்முடைய நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பாக ஏகத்துவம் மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் நாம் எழுதியுள்ளோம். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தோம்.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி).
நூல்: ஹாகிம் (3392)
ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும்.