039. இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா?
இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா? ‘லப்பைக்க உம்ரதன்’ அல்லது ‘அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன்’ என்பது மட்டும் போதுமானதா?
கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.
“நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள் “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை – (குர்பானிப் பிராணியை)… அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்யப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஹஜ்ஜை மட்டுமே மனதில் எண்ணியிருந்தனர். பின்னர் அவர்கள் மக்கா சென்றதும் ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அப்போது அவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து கிரான் அடிப்படையில் செய்பவர்கள் செய்பவர்கள், “லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்ஜத்தின் வ உம்ரத்தின்’ என்றோ, “லப்பைக்கல்லாஹும்ம பி உம்ரத்தன் வ ஹஜ்ஜத்தன்’ என்றோ சொல்லிக் கொள்ள வேண்டும்.
தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.