37) மகன் திருந்தாவிட்டால்…
எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள்.
இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நூஹ் (அலை) அவர்களின் மகன் கெட்டவனாக இருந்தான். நூஹ் (அலை) அவர்களுக்கு அவன் கட்டுப்பட மறுத்தான். இறைநிராகிப்பாளனாக மரணித்தான். இந்த வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.
“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப் பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.
“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.
“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.
நம்மையும் நமது குழந்தைகளையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவானாக.