3) வரலாற்றுப் பின்னணியில்
வரலாற்றுப் பின்னணியில்
இந்திய முஸ்லிம்களிடம் தொப்பி மிகுந்த முக்கியத்தைப் பெற்றதற்கு வரலாற்று ரீதியான காரணமும் உள்ளது.
உலக இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நாடு தலைமை வகித்து வந்தது. கிலாஃபத் என்று சொல்லப்பட்ட இந்த தலைமைத்துவம் கடைசியாக துருக்கி வசம் வந்தது. துருக்கி தான் இஸ்லாமிய உலகின் தலைமையாக கருதப்பட்ட நேரத்தில் இந்தியாவைப் போல் துருக்கியும் அடிமைப்படுத்தப்பட்டது. எனவே இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட அதே நேரத்தில் துருக்கியின் கிலாஃபத்தை மீட்பதற்கும் பாடுபட்டனர். இதற்காக கிலாஃபத் இயக்கத்தையும் இங்கே உருவாக்கினார்கள்.
இந்திய முஸ்லிம்கள் துருக்கியின் விடுதலைக்காக பாடுபட்டதால் இந்திய முஸ்லிம்களை இங்குள்ள விஷமிகள் துருக்கர் எனக் குறிப்பிடலாயினர். இது தான் பேசு வழக்கில் துலுக்கர் என ஆயிற்று.
கவி பாரதி கூட தனது கவிதையில் முஸ்லிம்களைப் பற்றி கூறும் போது
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி
பெண்ணின் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல்
எனப் பாடினான்.
அது போல் திக்கை வணங்கும் துருக்கர் எனவும் முஸ்லிம்களைப் பற்றி கூறியுள்ளான்.
இஸ்லாமிய உலகின் தலைமையாக கடைசி காலத்தில் கருதப்பட்ட துருக்கி மக்கள் அனைவரும் தொப்பி போடுவதை தங்களின் தேசிய அடையாளமாகக் கருதினார்கள்.
அவர்கள் இஸ்லாத்தைப் பேணுகிறார்களோ இல்லையோ தொப்பியைப் பேணுவதில் தவற மாட்டார்கள்.
போர்க்களத்தில் கூட தொப்பி அணிந்து வாளைப் பிடிப்பதை விட தொப்பி கீழே விழாமல் காப்பாற்ற முயன்றதால் தான் எதிரிகளிடம் துருக்கியர் தோற்றுப் போனார்கள் என்று வரலாறு கூறுகிறது. அந்த அளவுக்கு தொப்பி அவர்களின் வாழ்வோடு ஒன்றி இருந்தது.
நமக்கு தலைமை துருக்கி தான் என்ற எண்ணம் விதைக்கப்பட்டதன் விளைவாக இங்குள்ள் முஸ்லிம்கள் நாமும் தொப்பி போடுவது மார்கக்க் கடமை என்ற முடிவுக்கு வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் ஒரு முழம் உயரமுள்ள துருக்கி தொப்பியையே அணிந்து வந்தனர். காலம் சென்ற ஜமாஅதுல் உலமா மாநிலத் தலைவரும் ரஹ்மத் மாத இதழ் ஆசிரியருமான கலீல் ரஹ்மான் ரியாஜீ அவர்கள் ஒரு முழ உயரம் கொண்ட துருக்கி தொப்பி அணிந்ததை நான் பார்த்துள்ளேன். இன்னும் பல மார்க்க அறிஞர்களையும் இவ்வாறு கண்டுள்ளேன்.
எனவே துருக்கியின் தாக்கம் காரணமாகவே தொப்பி இஸ்லாமியச் சின்னம் என்ற கருத்து இந்திய முஸ்லிம்களிடம் ஆழப் பதிந்ததே தவிர மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.