16) பெண்கள் கல்வி கற்கக் கூடாது.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாகவும் அவதூறு கூறுகின்றனர்.
கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.
ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது.
புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன.
இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது.
பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது.
எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்கும் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.
பேருந்துகளில் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில் விடப் படுகின்றன.
ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.
சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்புநடவடிக்கை என்றால் காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?
ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.
ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித் தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.