08) தலாக்
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதை நாம் காண்கிறோம்.
ஆணும், பெண்ணும் இல்லற இன்பத்தை அனுபவித்து, இரண்டறக் கலந்து விட்டுத் திடீரென ஆண்கள் தம் மனைவியை விவாகரத்துச் செய்து விடும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கண்கூடு. கன்னிப் பெண்களுக்கே மண வாழ்வு கிடைக்காத நிலையில் விவாக விலக்குச் செய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? அதிலும் அவள் சில குழந்தைகளைப் பெற்று அழகையும் இளமையையும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை.
இது தான் தலாக் சட்டத்தை விமர்சனம் செய்வதற்குக் காரணம்.
தலாக் கூறுவதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் ஏன் இதை அனுமதிக்க வேண்டும் அனுமதிக்காமலேயே இருக்கலாமே? என்ற கேள்விகள் நியாயமானவையே. அதை விட அதற்கான விடைகள் நேர்மையானவை.
தலாக்கை அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? அதற்கு அனுமதி மறுப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? என்று இரண்டையும் எடை போட்டுப் பார்க்கும் போது, அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகளை விட அதிமோசமான விளைவுகள் அனுமதிக்காவிட்டால் ஏற்பட்டு விடுகின்றன.
அனுமதிப்பதிலும் கேடுகள் உள்ளன; அனுமதி மறுப்பதிலும் கேடுகள் உள்ளன; இரண்டில் எதைச் செய்தாலும் விளைவுகள் மோசமானவை என்ற நிலையில் எது குறைந்த தீங்குடையதோ அதை அனுமதிப்பது தான் அறிவுடைமையாகும். இந்த அறிவுப் பூர்வமான முடிவையே இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ளது.
தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படும் குறைந்த அளவிலான கேடுகளைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்வோர் அந்த அதிகாரம் ஆண்களிடம் வழங்கப்படாவிட்டால் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன என்பதைக் கவனிப்பதில்லை. இதை விரிவாகவே நாம் விளக்குவோம்.
ஒரு கணவனுக்குத் தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்காமல் போய் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டிலும், சமுதாயத்திலும் கணவன் தன் மனைவியிடமிருந்து விவாக விலக்குப் பெற வேண்டுமானால் நீதிமன்றம் எனும் மூன்றாம் தரப்பை நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும்.
நமது நாட்டிலும், மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய சட்டம் தான் இருக்கிறது. நீதி மன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கணவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்துக்கு அனுமதி வழங்குவார்.
இத்தகைய நிலையில் ஏற்படும் விளைவுகளை நாம் பார்ப்போம்…
வாழா வெட்டியாக இருக்கும் நிலை
மனைவியைப் பிடிக்காத நிலையில் ‘விவாகரத்துப் பெறுவதற்காகக் காலத்தையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் ஏன் வீணாக்க வேண்டும்’ என்று எண்ணுகின்ற ஒருவன், அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியைச் சின்ன வீடாக அமைத்துக் கொள்கிறான். கட்டிய மனைவியுடன் இல் வாழ்வைத் தொடர்வதுமில்லை. அவளைப் பராமரிப்பதுமில்லை. இவன் மாத்திரம் தகாத வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.
இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர, பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்குக் கிடைக்காது. வாழ்க்கைச் செலவினங்களும் கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதைத் தட்டிக் கேட்டால் அடி உதைகள்! இத்தகைய அபலைகள் ஏராளம்!
பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கும், தன்மானத்துக்கும், பெண்மைக்கும் சவால் விடக் கூடிய வறட்டு வாழ்க்கையை வழங்கி, அவளைச் சித்திரவதை செய்வதை விட அவனிடமிருந்து உடனடியாக விலகி சுதந்திரமாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வது எந்த வகையில் தாழ்ந்தது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தலாக் அதிகாரம் இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி; அவள் விரும்பும் மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம். பெண்களின் மறுமணத்தை ஆதரிக்காதவர்கள் வேண்டுமானால் இந்த நிலையை எதிர்கொள்ளத் தயங்கலாம். இஸ்லாமியப் பெண் அவனிடமிருந்து விடுதலை பெற்ற உடனேயே மறு வாழ்வை அமைத்துக் கொண்டு மகிழ்வுடன் வாழ முடியும்.
அவதூறைச் சுமத்தல்!
விவாகரத்துப் பெறுவதற்காக நீதி மன்றத்தை அவன் அணுகுகிறான். எந்த மாதிரியான காரணம் கூறினால் விரைந்து விவாகரத்து கிடைக்குமோ அது போன்ற காரணத்தைப் பொய்யாகப் புனைந்து கூறத் துணிகிறான். தன் மனைவி நடத்தை கெட்டவள் என்று நா கூசாமல் கூறுகின்றான். இதற்கான பொய்யான சாட்சிகளையும், சான்றுகளையும் தயார் செய்கின்றான்.
அவனுக்குப் பிடிக்கவில்லை என்ற நிலையில் விவாகரத்தையும் அவன் பெற்று விடுவதோடு, அவளது கற்புக்கு களங்கத்தையும் ஏற்படுத்தி அவளுக்குத் தலைக் குனிவையும் ஏற்படுத்தி விடுகிறான். இத்தகைய இழிவைச் சுமந்து கொண்டு அவள் காலத்தைக் கழிப்பதை விடக் கௌரவத்தைக் காத்துக் கொண்டு ஆரம்பத்திலேயே அவனிடமிருந்து விடுதலை பெறுவது எந்த விதத்தில் மோசமானது என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அநியாயப் படுகொலை!
நீதிமன்றம் முடிவு செய்யும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாதவன், அதற்காகப் பணத்தைச் செலவு செய்ய விரும்பாதவன், மற்றொரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். இது முந்தைய இரண்டு வழிகளை விட மிகவும் கொடுமையானது கொடூரமானது!
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விட்டு சமையல் செய்யும் போது ஏற்பட்ட விபத்து என்று நாடகமாடுகின்றான். இப்படிச் சாவூருக்கு அனுப்பப்பட்ட அபலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று செய்திகள் இடம் பெறாத நாளிதழ் இல்லை. தினமும் பல நூறு சம்பவங்கள்!
கணவனும், மனைவியும் தனித்திருப்பதை உலகம் அனுமதிப்பதால் அந்தத் தனிமையில் அவளை எது வேண்டுமானாலும் அவனால் செய்து விட முடியும். இது போன்ற கொடூரக் கொலைகளை நிரூபிக்கவும் முடியாமல் போய் விடுகின்றது. இந்தக் கொடுமைக்கு மாற்றுப் பரிகாரத்தைச் சொல்லி விட்டு தலாக்கை விமர்சிக்கட்டும்!
ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிரும், உடமையும், மானமும், மரியாதையும் காக்கப்பட வேண்டுமென்று கருதி ‘உனக்குப் பிடிக்காவிட்டால் அவளைக் கொன்று விடாதே! அவளது இல்லற சுகத்துக்குத் தடையாக இராதே! பிரச்சனை ஏதுமின்றி விவாக ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்!’ என்று வேண்டா வெறுப்புடன் தலாக்கை அனுமதிக்கிறது.
இதனால் தான் முஸ்லிம் பெண்கள் எவரும் ஸ்டவ் வெடித்துச் சாவதில்லை. எந்தச் சமுதாயத்தில் தலாக் அனுமதிக்கப்படவில்லையோ, அல்லது கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயப் பெண்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து ஸ்டவ் வெடிக்கிறது.
தலாக்கை விமர்சிக்கக் கூடியவர்கள் நாம் எடுத்துக் காட்டிய இந்த மோசமான விளைவுகள் ஏற்படாத மற்றொரு பரிகாரத்தைக் காட்டட்டும்! அவர்களால் காட்ட முடியாது. காட்ட முடியாது என்ற நிலையில் அந்தப் படுமோசமான விளைவுகளிலிருந்து பெண்களை விடுவிக்கும் தலாக்கை – அது சிறிய தீங்கானதாகக் கருதப்பட்டாலும் – ஆதரித்தே ஆக வேண்டும்.
விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட வேண்டும் எனக் கூறுவதால் எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. அதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது. கடைசி கடைசியாகவே தலாக்’ எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.
சொல்லித் திருத்துதல்:-
இல்லற வாழ்வில் பிரச்சினையைச் சந்திக்கும் கணவன், மனைவியிடம் பக்குவமாக அவளது குறைகளைச் சுட்டிக் காட்டி அவளது குடும்பக் கடமைகளை உணர்த்தி, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, தான் அவளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதையும் விவாகரத்தினால் அவள் சந்திக்க நேரும் பாதிப்புகளையும் இனிய மொழிகளால் எடுத்துரைக்க வேண்டும்.
‘
பிணக்கு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்’ (அல்குர்ஆன்: 4:34) ➚ என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
இப்போதனையிலிருந்து, பெண்கள் மட்டுமே தவறு செய்யக் கூடியவர்கள் என்றும் ஆண்களிடம் தவறே ஏற்படாது என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் இஸ்லாம் இதை விடவும் அழுத்தமாக ஆண்களுக்கு அறிவுரை சொல்லத் தவறவில்லை.
‘நீங்கள் மனைவியருடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது முறையில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அனேக நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கலாம்’. (அல்குர்ஆன்: 4:19) ➚ என்று இறைவன் கூறுகிறான்.
‘
நீங்கள் மனைவிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்; ஏனெனில் அவர்கள் கோணலான விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள். நீங்கள் அதன் கோணலுடன் அவர்களைப் பயன் படுத்துவீர்களாயின் அது பலன் தரும். அன்றி அந்தக் கோணலை நிமிர்த்தப் பாடுபடுவீர்களாயின் நீங்கள் அதை ஒடித்து விடுவீர்கள்’, என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி: 3331, 5186) ‘நீங்கள் உங்கள் துணைவிகளிடம் ஏதேனும் தீய குணங்களைக் கண்டால் உடனே அவர்களை வெறுத்து விடாதீர்கள். நீங்கள் கவனிப்பீர்களாயின், அவர்களிடம் வேறு நல்ல குணங்களைக் காண்பீர்கள்!’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த அறிவுரையைக் கூறியுள்ளனர்.
தள்ளித் திருத்தல்:-
இனிய மொழியில் எடுத்துரைத்தும் மனைவி தன் போக்கிலிருந்து திருந்தாத போது, அடுத்த கட்டமாக, தனது அதிருப்தியையும்,அவள் மீதுள்ள கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காகவும், தாம்பத்ய உறவின் தேவையை அவளுக்கு உணர்த்துவதற்காகவும், நிரந்தரமாகவே பிரிய நேரிடும் என்பதை அவளுக்கு புரியவைப்பதற்காகவும் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
‘
அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி விடுங்கள்’ (அல்குர்ஆன்: 4:34) ➚ என்று இறைவன் அடுத்த அறிவுரையை வழங்குகிறான்.
தன் மீது கணவன் மோகமும், இச்சையும் கொண்டிருக்கிறான்; தன்னை அவனால் தவிர்க்க முடியாது என்று பெண் இயல்பாகவே இறுமாந்திருக்கிறாள். இந்த நிலையில், அவளது பெண்மையும், அண்மையும் கணவனால் புறக்கணிக்கப்படும் போது, அவளது தன்மானம் சீண்டப் படுவதையும் தனது உறவைக் கணவனால் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக உணரும் போது, நிலைமையின் விபரீதத்தை அவள் புரிந்து கொள்ள முடியும். இதனால் தலாக் தவிர்க்கப்பட்டு குடும்பத்தில் சுமூக உறவு ஏற்படலாம்.
அடித்துத் திருத்துதல்:
மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் கூட மனைவியிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையாயின் மூன்றாவது நடவடிக்கையாக அவளை அடித்துத் திருத்த இஸ்லாம் அனுமதிக்கிறது!
‘
அவர்களை (இலேசாக) அடியுங்கள்’ (அல்குர்ஆன்: 4:34) ➚
அடித்தல் என்று சொன்னால், பலவீனமான பெண் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பதோ அல்லது மிருகங்களை அடிப்பது போன்றோ அடிப்பது என்று அர்த்தமில்லை. ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள்.
(புகாரி: 4942, 5204, 6042, 2560)
கணவனால் அடிக்கப்பட்டால், கணவன் எதற்கும் தயாராக இருப்பதைப் புரிந்து கொள்கிறாள். இதனால் அவளது போக்கில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டு விவாகரத்துச் செய்யப்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. இதையும் சிலர் குறை கூறுவார்கள்.
இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமிய மார்க்கத்தை நம்பியவர்களை விட அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறர்கள். ஆண் வலிமை உள்ளவனாகவும், பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு போலீசாரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது இயல்பானது தான். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.
இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும்! மனைவியரைச் சித்திரவதைப் படுத்துவது முஸ்லிம்களிடம் மற்றவர்களை விட குறைவாகவே இருப்பதற்கு இதுவே காரணம் என்பதை உணர வேண்டும்.
ஜமாஅத் தீர்வு:
கணவன் மனைவியருக்கிடையேயுள்ள பிணக்கு மேற் சொன்ன மூன்று நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடருமானால் அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
எந்தப் பிரச்சனையிலும் சம்மந்தப்பட்டவர்களே பேசித் தீர்க்க விரும்பினால் பெரும்பாலும் தீர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் உணர்வுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகுவதால் சில வேளை சிக்கல் மேலும் முற்றிப் போகலாம். தத்தம் நிலையிலேயே பிடிவாதமாக இருவரும் நிற்பர். தம்பதியர் உறவும் இதில் விதிவிலக்கில்லை.
இதன் காரணமாக இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பில்லாத, ஆனால் தம்பதியர் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் அக்கறையும், ஆசையும் கொண்ட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடுவர்களாக நியமித்துச் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும். இதனால் தம்பதியர் தரப்புக் குற்றச் சாட்டுக்கள், விருப்பு வெறுப்பற்ற, ஒரு தலைப்பட்சமற்ற கோணத்தில் அணுகப்பட்டு, சமூகமான தீர்வு காணப்படும். இதனால் தலாக் தவிர்க்கப்படும்.
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
இப்போதும் கூட நிரந்தரமாகப் பிரிந்து விடும் வகையில் தலாக்கை அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்கள் இணைந்து வாழ்வதற்கு மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தலாக் எப்படிக் கூறப்பட வேண்டும்? நினைத்தவுடன் மனைவியை விலக்கி விட முடியுமா? என்பது பற்றி இங்கே விளக்குவது பொருத்தமாக இருக்கும்.
தலாக் கூறிட மூன்று வாய்ப்புக்கள்:
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.
ஒரு கணவன், தன் மனைவியை முதல் தலாக் கூறினால் அவர்களிடையே நிலவிய உறவு முழுமையாக நீங்கி விடுவதில்லை. தற்காலிகமாக நீங்கி விடுகின்றது. கணவன் விரும்பினால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மனைவியுடன் சேர்வதன் மூலம், இல்லறத்தைத் தொடங்குதல் மூலம், சேர்ந்து கொள்வோம் என்று கூறுவதன் மூலம் இப்படி ஏதேனும் ஒரு முறையில் மீண்டும் சேர்ந்து வாழலாம்.
அந்தக் காலக்கெடு எது?
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவள் கர்ப்பினியாக இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் மீண்டும் அவர்கள் சேர்ந்து கொள்ளலாம். உதாரணமாக அவள் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தால் சுமார் ஏழு மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளது. அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுத்த உடன் கெடு முடிந்து விடும்.
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால் மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கு என எந்தச் சடங்கும் கிடையாது.
இதற்கான திருக்குர்ஆன் சான்றுகள் வருமாறு:
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.
முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.
1 மூன்று மாதவிடாய்க் காலம்,
2 மூன்று மாதங்கள்,
3 பிரசவித்தல்
ஆகிய கெடுவுக்குள் சேர்வதாக இருந்தால் திருமணம் செய்யாமல் சேர்ந்து கொள்ளலாம். நி குறிப்பிட்ட கெடு முடிந்து விட்டால் திருமணத்தின் மூலம் சேர்ந்து வாழலாம்.
இது முதல் தடவை தலாக் கூறிய பின் ஏற்படும் விளைவாகும்.
குறிப்பிட்ட கெடுவுக்குள் அவர்கள் சேர்ந்து கொண்டாலும், குறிப்பிட்ட கெடு கடந்த பின் திருமணம் செய்து கொண்டாலும் விவாகரத்துச் செய்வதற்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒன்று குறைந்து விடும். இன்னும் இரண்டு தடவை மட்டுமே தலாக் கூறும் உரிமையைப் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.
தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் வாய்ப்பைப் பயன் படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம்.
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.
என்ற வசனத்திலிருந்து இதை அறியலாம்.
இரண்டாவது முறையும் திரும்ப அழைத்துக் கொண்டாலோ, கெடு முடிந்து மீண்டும் அவளையே மணந்து கொண்டாலோ மூன்று தடவை தலாக் கூறலாம் என்ற உரிமையில் ஒன்று தான் மிச்சமாகவுள்ளது.
எனவே எஞ்சியுள்ள அந்த ஒரு வாய்ப்பை – கடைசி வாய்ப்பை – மிகக் கவனமாகவே ஒருவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
இந்தக் கடைசி ஒரு வாய்ப்பையும் அவன் பயன்படுத்தி விட்டால் அந்த நிமிடமே திருமண உறவு நிரந்தரமாக நீங்கி விடும். மீண்டும் சேர்வதற்கு எந்தக் கெடுவும் இல்லை. அவளை மறு திருமணம் செய்ய விரும்பினால் அவள் இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனும் தலாக் கூறி விட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
முத்தலாக் – ஒரு விளக்கம்:
தலாக் பற்றி முஸ்லிம் மக்களிடையே நிலவும் தவறான கருத்தை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான். அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று சில முஸ்லிம்கள் தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராயும் போது இந்தக் கருத்து முற்றிலும் தவறு என்பதை ஐயமற உணரலாம். இஸ்லாம் காட்டும் நெறி என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பதே அது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மனைவியைப் பிரிந்து செல்லும் அளவுக்கு வெறுப்பைக் காட்ட இறைவன் வழங்கிய மூன்று சந்தர்ப்பங்களே தலாக். ஒரு தடவை கோபம் கொண்டு அவன் ஆயிரம் தலாக் என்று கூறினாலும் அவன் பயன்படுத்தியது ஒரு சந்தர்ப்பத்தைத் தான்.
மனைவியின் மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டு நிதானம் தவறியே தலாக் கூறுகிறான். இதில் எந்த வார்த்தையையும் அவன் பயன்படுத்தி விடக் கூடும். இப்படி இரண்டு சந்தர்ப்பங்கள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன. சந்தர்ப்பத்தைக் கருத்தில் கொள்ள வேண்டிய இவ்விஷயத்தில் பயன்படுத்தும் சொல்லைக் கருத்தில் கொண்டதால் முத்தலாக் பற்றி இப்படி ஒரு தவறான கருத்து முஸ்லிம்களில் சிலரிடையே ஏற்பட்டு விட்டது. நபிவழியைப் பின்பற்றும் எந்த முஸ்லிமும் இப்படிப்பட்ட தவறான கருத்தை ஏற்க மாட்டார்.
அதாவது மூன்று தலாக் கூறிவிட்டேன் என்று ஒருவன் மனைவியிடம் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.
மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.
மேற்கண்ட இஸ்லாத்தின் சட்டங்களை விளங்கினால் தலாக் எனும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கினாலும் அதற்கு இஸ்லாம் கூறும் வழிமுறைகள் அர்த்தமுள்ளவை என்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்கள்.
பெண்களின் விவாகரத்து உரிமை:-
ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியாததால் தான் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் செய்யும் முறையில் தான் இருவருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளனவே தவிர உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.
இஸ்லாத்தை அறியாத முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரால் இந்த உரிமை இன்று மறுக்கப்பட்டாலும் அதற்காக இஸ்லாத்தைக் குறை கூற முடியாது.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ‘சரி’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்:(புகாரி: 5273, 5277)
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.
குடிகாரக் கணவனை, கொடுமைக்கார கணவனைப் பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எவ்விதக் காரணமுமின்றி கணவனைப் பிடிக்காவிட்டால் கூட கணவனைப் பிரியலாம் என்பதையும் மேற்கண்ட சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.
இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
இதைத் திருக்குர்ஆன் ‘உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?’ (4:21) என்றும்
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (2:228) என்றும் கூறுகிறது.
பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
பெண்கள் ஸ்டவ் வெடித்துச் செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.
அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.