06) பலதார மணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது

நூல்கள்: இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

எந்த ஒரு சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் அச்சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானது தானா என்பதைத் தான் முதலில் கவனிக்க வேண்டும்.

நமது நாட்டில் முஸ்லிம்களுக்குப் பலதார மணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்கு அது அறவே தடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

முஸ்லிமல்லாத மக்கள் பலதார மணம் செய்யக் கூடாது என்று போடப்பட்ட தடைச் சட்டத்தின் நிலை என்ன?

யாருக்கு பலதார மணத்திற்கு இந்த நாட்டில் அனுமதியுள்ளதோ அவர்களை விட யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதார மணம் புரிந்துள்ளனர்.

1951 முதல் 1960 வரை பலதார மணம் புரிந்தவர்கள் பற்றிய புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டது. அந்தப் புள்ளி விபரப்படி

இந்துக்கள் 5.06 சதவிகிதமும்

முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும்

பழங்குடியினர் 17.98 சதவிகிதமும்

பலதாரமணம் புரிந்துள்ளனர்.

அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது.

சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.

பலதார மணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்துக்களே அதிக அளவில் பலதார மணம் செய்துள்ளனர் என்பதிலிருந்து பலதாரமணத் தடைச் சட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை விளங்கலாம்.

இதனால் தான் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டே நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் முடிகின்றது.

தி.மு.க தலைவர் கருணாநிதி முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?

இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கா.காளிமுத்து பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?

அறந்தாங்கி திருநாவுக்கரசு பல தடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி?

இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு ஆஒத 1965 நஈ 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.

(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். (லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)

இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.

பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர்.

மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர்.

வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதைக் குறை கூற மாட்டார்கள்.