05) பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும்
ஆண்கள் பலதார மணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் இந்தப் பிரச்சினையில் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம்.
முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பது தான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம் என்றால் பலதார மணத்திற்கு மட்டும் அவர்கள் தடை கோரக் கூடாது. மாறாக மனைவி அல்லாத பிற பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும் அவ்வப்போது பல பெண்களுடன் விபச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்குமாறு கோர வேண்டும்.
ஆனால் நமது நாட்டிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் வைப்பாட்டிகள் வைத்துக் கொள்ளவோ, விபச்சாரம் செய்யவோ தடை இல்லை. தங்கு தடையின்றி ஆண்கள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக பெண்ணுரிமை பேசுவோர் கூட குரல் கொடுப்பதில்லை.
இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதை விட இது பெரிய அநியாயமாகும். ஏனெனில் பல பெண்களுடன் உறவு வைத்து அதனால் ஏற்படும் நோயை மனைவிக்கும் அவன் பரப்பும் வாய்ப்பு இதில் உள்ளது.
முதல் மனைவி பாதிக்கப்படுவது தான் பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்திடக் காரணம் என்றால் விபச்சாரத்திற்கும், வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் எதிராக பெண்களின் இயக்கங்களோ, பெண்ணுரிமை பேசும் ஆண்களோ ஏன் வலிமையாகக் குரல் கொடுக்கவில்லை?.
நமது நாட்டுச் சட்டத்தையே எடுத்துக் கொள்வோம்!
- முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாம்.
- முஸ்லிமல்லாதவர்கள் இன்னொரு பெண்ணைச் சின்ன வீடாக வைத்துக் கொள்ளலாம்.
இது தான் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணை மணந்து கொள்வது தடுக்கப்பட வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் முஸ்லிமல்லாத சமுதாயத்தினர் வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தடுக்க சட்டம் போட வேண்டும் என்று இது வரை கேட்டார்களா?
விபச்சாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நமது நாட்டில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அனைத்துமே விபச்சாரிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. அவர்களைப் பாலியல் தொழிலாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்புகின்றனர்.
விபச்சாரிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெண்ணுரிமை இயக்கத்தினரும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. விபச்சாரிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை என்றால் அந்த விபச்சாரிகளிடம் செல்லும் ஆண்களையும் ஆதரிக்கிறார்கள். அதாவது மனைவி இருக்கும் போது அவளுக்கு துரோகம் செய்யும் கணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதைத் தவிர இவர்களது நடவடிக்கைகளுக்கு வேறு என்ன பொருள்?
கட்டிய மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற அக்கரையில் பலதார மணத்தை இவர்கள் எதிர்ப்பது உண்மை என்றால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் காரணமாக உள்ள விபச்சாரிகளைக் கடுமையாக வெறுக்க வேண்டும். மனைவியுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தும் ஆண்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் காரணமான விபச்சாரிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குமாறு கோர வேண்டும்.
அவ்வாறு கோரக் கடமைப்பட்டவர்கள் விபச்சாரிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
ஆண்கள் பல பெண்களை நாடக் கூடியவர்களாக உள்ளனர் என்பதையும், அதைத் தடுக்க முடியாது என்பதையும் அவர்களின் உள்ளுணர்வு உணர்த்துவது தான் அவர்களது இந்த நிலைமைக்குக் காரணம்.
பெண்ணுரிமை பேசுவோரும், முற்போக்குவாதிகளும் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணுடன் ஆண்கள் உறவு வைப்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.
இன்னொரு பெண்ணுடன் நீ உறவை வைப்பதாக இருந்தால் அவளைச் சட்டப்பூர்வமாக மணந்து கொள் என்று இஸ்லாம் கூறுகிறது.
மணந்து கொள்ளாமலேயே எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவ்விரு நிலைகளில் எது சிறந்தது?
இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் போது அவளைச் சட்டப்பூர்வமான மனைவி என்று அறிவித்தால் அந்தப் பெண்ணின் உரிமை காக்கப்படுகிறது. வைப்பாட்டிகளுக்கோ எந்த விதமான உரிமையும் கிடையாது.
வைப்பாட்டியின் மூலம் ஒருவனுக்குப் பிறந்த குழந்தைக்கு மகன் என்ற உரிமையும் கிடையாது.
மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை அனுபவிப்பதில் இவர்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. அவளை மணந்து கொள்வதில் மட்டும் தான் இவர்களுக்கு மறுப்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆண்கள் பல பெண்களை நாடுவது அடியோடு ஒழிக்கப்பட முடியாத போது அதைக் குறைப்பதற்கு உரிய வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்காக எதிர்காலத்தில் எந்தப் பொறுப்பையும் ஆண்கள் சுமக்கத் தேவையில்லை எனும் போது அதிகமான பெண்களை ஆண்கள் நாடிச் செல்வார்கள்.
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவிப்பதாக இருந்தால் அவர்களுக்குச் சட்டப்படி மனைவி என்ற உரிமையை அளிக்க வேண்டும். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்குச் சட்டப்படி பிள்ளைகள் என்ற உரிமையை அளிக்க வேண்டும். முதல் மனைவிக்கு உள்ள உரிமைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இரண்டாம் மனைவிக்கும் வழங்க வேண்டும். எல்லா வகையிலும் இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் போது மனைவி அல்லாத பெண்களை நாடுவோர் குறைவார்கள். தவிர்க்கவே இயலாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மட்டுமே இன்னொரு திருமணம் செய்ய முயல்வார்கள். எனவே பலதார மணத்திற்கான அனுமதி தான் முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் உண்மையில் பாதுகாப்பானது.
நமது நாட்டில் உள்ள சட்டப்படி எந்த ஆணும் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் விபச்சாரம் செய்யலாம். ‘அந்தப் பெண் மைனராக (18 வயதுக்குட்பட்டவராக) இருக்கக் கூடாது; பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக் கூடாது’ என்பது மட்டுமே நிபந்தனை.
மேலும் விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவது தான் நமது நாட்டில் குற்றமே தவிர விபச்சாரம் குற்றமில்லை. இதன் காரணமாகத் தான் விலைமாதர்களிடம் ஒரு ஆண் செல்லும் போது விலைமாது மட்டும் தண்டிக்கப்படுகிறாள். ஆண் விடுவிக்கப்படுகிறான்.
இது போல் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் ஒருவன் சேர்ந்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம். அவள் இன்னொருவரின் மனைவியாக இருக்கக் கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு நிபந்தனை ஏதுமில்லை.