தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா?

கேள்வி-பதில்: தொழுகை

தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா?

அதன் அளவு என்ன?

சுக்ருல்லாஹ்

பதில்

தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர் தனக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

 عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் (தொழும்போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம் (858)

சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்) அவருடன் ஷைத்தான் இருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல்கள் : இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான் 2362,(ஹாகிம்: 921), பைஹகீ 3261

மக்களுக்குத் தொழவைக்கும் இமாம் தனக்கு ஏதாவது ஒரு பொருளைத் தடுப்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் தடுப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை.

 

 عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று புறப்படும் போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்து வருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(முஸ்லிம்: 862)

தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.

தூண் சுவர் கைத்தடி ஈட்டி ஒட்டகம் ஆகிய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுப்பாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்கள் :(புகாரீ: 496),(முஸ்லிம்: 786)

நான் ஸலமா பின் அல் அக்வவு (ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவனாக இருந்தேன். ஸலமா (ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுகின்றீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : யஸீத் பின் அபீ உபைத்,

(புகாரீ: 502),(முஸ்லிம்: 788)

பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி),

நூல்கள் :(புகாரீ: 376)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டு, தொழுமிடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்கள்:(புகாரீ: 973),(முஸ்லிம்: 863)

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (தடுப்பாக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்:(புகாரீ: 972),(முஸ்லிம்: 862)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்? என்று கேட்டேன். ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிவு

(புகாரீ: 507)