7) பண்டிகைகளின் பெயரால்
6. பண்டிகைகளின் பெயரால்…
மதங்கள் அர்த்தமற்றவை’ எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர்.
‘நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவது எப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்?’ என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன.
எத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன.
உயிர்களும் கூட பலியாகின்றன.
அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களும், இதய நோயாளிகளும், தொட்டில் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.
நச்சுப் புகையின் காரணமாக மற்றவர்களுக்கும், நமக்கும் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வசதி படைத்தவர்கள் விலை உயர்ந்த புதுமையான பட்டாசுகள் கொளுத்துவதைக் காணும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறு எரிகின்றது.
இப்படி இன்னும் பல தீமைகள் இதனால் ஏற்படுகின்றன.
நாம் தீப்பிடிக்காத வீட்டில் இருக்கலாம். குடிசையை இழந்த அந்த ஏழை ஒரு குடிசையை மீண்டும் உருவாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்?
அவன் சிறுகச் சிறுகச் சேர்த்த அற்பமான பொருட்களை மீண்டும் சேர்க்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும்?
இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது நடக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவை தாமா? என்று சிந்தனையாளர்கள் எண்ணுகின்றனர்.
வீதிகளில் பூசனிக்காய்களை உடைத்து விபத்துக்களை ஏற்படுத்துவதும், குப்பைகளை வீதிகளில் எரிப்பதும், மாடுகளை வீதியில் விரட்டி அவற்றுக்கு ஆத்திரமூட்டுவதும், வாகனங்களில் செல்பவர்களை மறித்து வாழ்த்துச் சொல்லி அவர்களை நிலைகுலைய வைப்பதும், பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் உரத்த குரலில் பாடுவதும், பொது இடங்களில் ஆடல் பாடல் கும்மாளம் போடுவதும் நமக்குச் சந்தோஷமாகத் தெரிந்தாலும் இது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மற்றவரைத் துன்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
இந்த விமர்சனத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்ப முடியாது.
‘தனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவன் எவனோ அவனே முஸ்லிம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு முஸ்லிம் தனக்கோ, மற்றவருக்கோ துன்பம் இழைக்கக் கூடாது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். எனவே முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இது போன்ற காரியங்களைச் செய்ய அனுமதி இல்லை.
முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களே உள்ளன.
இவ்விரு பெருநாட்களிலும் புத்தாடைகள் அணியலாம்.
சிறப்பான உணவுகள் சமைத்து உண்ணலாம்.
உடலுக்கு வலிமை தரும் விளையாட்டுக்களில் இவ்விரு நாட்களிலும் ஈடுபடலாம்.
இரண்டு பெருநாட்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தான தர்மங்கள் செய்தல்
அதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுதல், இறைவனிடம் நல்லருளை வேண்டுதல்
உடலுக்கு வலிமை சேர்க்கும் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல்
போன்றவை தான் இஸ்லாமியப் பண்டிகைகளின் போது கடைப்பிடிக்க வேண்டியவை.
எந்த முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் இப்பண்டிகைகளால் எந்தவிதமான தொல்லைகளும் இல்லை. இறைவனைப் பற்றி நினைவு கூர்வதும், மனிதர்களுக்கு நலம் நாடுவதும் தான் இஸ்லாமியப் பண்டிகைகளில் உள்ளன.
எனவே பண்டிகைகள் என்ற பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு செய்யப்படுகின்றன என்ற விமர்சனமும் இஸ்லாத்துக்கு பொருந்தாது.
மதங்கள் அர்த்தமற்றவை; மனித குலத்துக்குத் தேவையில்லாதவை என்பதை நிலைநாட்டுவற்காக கூறப்படும் காரணங்களில் ஒன்று கூட இஸ்லாம் மார்க்கத்துக்கு பொருந்தாது.
எனவே இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.