32) மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?
அடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.
சூனியம் என்றால் மேஜிக் என்று சொல்கிறீர்கள். சூனியம் இணைவைப்பு என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மேஜிக் கற்றுக் கொள்வதும் மேஜிக் பார்ப்பதும் இணைவைத்தல் ஆகுமா?
இந்தக் கேள்வியும் பரவலாகக் கேட்கப்படுகின்றது.
வெளித் தோற்றத்தில் இரண்டு காரியங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொருத்து இரண்டும் வேறு வேறு ஆகிவிடும்.
ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொள்வோம். இதைத் தாலியாகவும் அணிகிறார்கள். வெறும் நகையாகவும் அணிகின்றனர். தோற்றத்தில் அது தங்கச் செயின் தான். ஆனால் நம்பிக்கையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
திருமண பந்தமே தாலியில் தான் உள்ளது. தாலி அறுந்து விட்டால் கணவனுக்கு ஏதோ நேர்ந்து விடும் என்ற மூட நம்பிக்கை இதன் பின்னால் உள்ளது என்பதால் இது கூடாது என்று நாம் சொல்கிறோம்.
ஆனால் அலங்காரமாக பெண்கள் அணிந்து கொள்வது கூடும் என்றும் நாம் சொல்கிறோம்.
ஒரே தங்கச் செயின் தான் என்றாலும் அது நமது நம்பிக்கையில் எத்தகைய பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறோம்.
ஒரு வாழைப்பழத்தை பூஜை செய்து ஒருவர் நம்மிடம் தருகிறார். அதை நாம் வாங்க மாட்டோம்.
இன்னொருவர் அதே வாழைப்பழத்தை சாதாரணமாகத் தந்தால் வாங்கிக் கொள்வோம்.
இரண்டும் வாழைப்பழம் தான். ஆனால் படையல் செய்யப்பட்டதால் புனிதமாகி விட்டது என்ற பொய்யான நம்பிக்கை அதில் இருப்பதால் அதை மார்க்கம் ஹராம் என்கிறது.
இன்னொரு வாழைப்பழத்தில் அந்த நம்பிக்கை இல்லாததால் அது ஹலாலாக ஆகின்றது.
அது போல் தான் மேஜிக்கும் சூனியமும் தோற்றத்தில் ஒன்றாகக் காட்சி தந்தாலும் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையால் அது மாறுபடுகிறது.
மேஜிக் செய்பவன் வெறும் கையில் மோதிரத்தை வரவழைத்துக் காட்டினால் அவன் இல்லாத மோதிரத்தை கொண்டு வந்து விட்டான் என்று மேஜிக் செய்பவனும் சொல்வதில்லை. மக்களும் அப்படி நம்புவதில்லை. ஏற்கனவே தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாத வகையில் எடுத்துக் காட்டுகிறான். இதற்காக சில தந்திரங்களைச் செய்துள்ளான் என்று தான் நாம் நம்புகிறோம்.
தனது காணாமல் போன ஆடு எங்கே உள்ளது என்பதைக் கண்டுபிடித்து தருமாறு மேஜிக் செய்பவனிடம் யாரும் கேட்பதில்லை. கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்குமாறும், எதிரியின் கைகால்களை முடக்குமாறும் மேஜிக் செய்பவனை யாரும் அணுகுவதில்லை. அணுகினாலும் அதைச் செய்ய இயலாது என்று மேஜிக் செய்பவன் கூறி விடுவான்.
ஆனால் சூனியக்காரன் என்ன செய்கிறான்? நான் நிஜமாகவே அதிசயம் செய்பவன். நான் இங்கிருந்து கொண்டு எங்கோ இருப்பவனின் கைகால்களை முடக்கி விடுவேன். கணவனிடமிருந்து மனைவியை, மனைவியிடமிருந்து கணவனை மந்திரத்தால் பிரித்து விடுவேன் என்று சொல்கிறான். இதற்காக மக்களும் அவனை அணுகுகிறார்கள்.
மேஜிக் செய்பவன் அறிவிக்கப்பட்ட பொது நிகழ்ச்சியில் அவன் முன்னரே திட்டமிட்டதைச் செய்து காட்டுவான். அவ்வளவு தான்.
சூனியக்காரன் ஏற்கனவே திட்டமிட்டதை மட்டும் இன்றி யார் அணுகினாலும், யாருக்கு எதிராக அணுகினாலும், எதைச் செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும் ஆற்றல் இருப்பதாகச் சொல்கிறான். இதுதான் சூனியம்.
ஒன்றில் இணைவைத்தல் உள்ளதை நம் அறிவே சொல்லி விடுகிறது. இன்னொன்று பொழுது பொக்கும் தந்திரம் என்றும் நம் அறிவு தீர்ப்பளிக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் இதை வேறுபடுத்திக் காட்ட மேஜிக் என்றும் பிளாக் மேஜிக் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கருப்பு மேஜிக்கைத் தான் நாம் சூனியம் என்கிறோம்.
மேஜிக் செய்பவர்கள் பயிற்சியைக் கொண்டு செய்வதாகச் சொல்வார்கள். உங்களுக்கும் அந்தப் பயிற்சி இருந்தால் செய்யலாம் என்றும் சொல்வார்கள்.
ஆனால் சூனியம் செய்பவர்கள் தனது மந்திர சக்தியால் கிடைத்த ஆற்றலால் செய்வதாகச் சொல்வார்கள்.