20) அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்யப்படுகிறதா

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் முதல் ஆதாரம்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.

நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

ஆனால் அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

“சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.  ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

(அல்குர்ஆன்: 17:111)

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.  அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

(அல்குர்ஆன்: 25:2)

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

(அல்குர்ஆன்: 16:71)

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்கு சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

‘இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள் என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’  என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

இவ்வசனங்கள் மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் இது போல் தான் நம்பினார்கள் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் கூறவேயில்லை. கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள்.

சூனியக்காரன் அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்கிறான் என்ற இந்த வாதமும் மக்கத்துக் காஃபிர்களின் வாதமும் ஒரே மதிரியாகவே உள்ளன.

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டு அது இணைகற்பித்தலில் சேராது என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள இதுபோல் உளறுகிறார்கள்.

சமாதி வழிபாடு நடத்துபவர்களும் இது போல் தான் இறந்தவர்களை வணங்குகிறார்கள். நாங்கள் மகான்களை அல்லாஹ் என்றா நம்பினோம்? அவர்களுக்குச் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருக்கிறது என்றா சொன்னோம்? இல்லவே இல்லை. அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தான் அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்துகிறார்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம். இது எப்படி அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் ஆகும்? அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள் தானே தவிர அல்லாஹ் அல்ல என்று கூறி தங்களின் இணைவைப்புக் கொள்கையை நியாயப்படுத்துவார்கள்.

சமாதி வழிபாடு செய்வோரின் அதே வாதங்களை சூனியக்காரன் விஷயத்தில் இவர்கள் எடுத்து வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.

இது அப்பட்டமான இணைவைப்பு என்று சூனியக் கட்சியினரிடம் நாம் கூறும் போது எங்கள் நம்பிக்கைக்கும், மக்கா காஃபிர்களின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார்கள்.

எங்களின் நம்பிக்கைக்கும் தர்கா வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதால் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களாக மாட்டோம் என்று மறுமொழி கூறுகிறார்கள்.

அது என்ன வித்தியாசம் என்று அவர்களிடம் கேட்டால் அவ்லியாக்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருப்பதாக அல்லாஹ் சொல்லவில்லை. ஆனால் சூனியக்காரனுக்கு அதிசய ஆற்றல் உள்ளதாக அல்லாஹ்வே 2:102 வசனத்தில் சொல்லி விட்டான் என்பது தான் அந்த வித்தியாசம்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதை நாங்கள் நம்புகிறோம். அவ்லியாக்களுக்கு அப்படி அற்புத சக்தி வழங்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அற்புத சக்தி உள்ளதாக நம்புகிறார்கள். இரண்டையும் எப்படி ஒப்பிடலாம் என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் வித்தியாசம்.

தன்னைப் போல் செயல்படும் ஆற்றலை அல்லாஹ் அவ்லியாக்களுக்கும் கொடுக்க மாட்டான். நபிமார்களுக்கும் கொடுக்க மாட்டான். சூனியக்காரனுக்கும் கொடுக்க மாட்டான் என்ற பொதுவான அடிப்படைக்கு முரணாக இந்த வாதத்தை வைக்கிறார்கள்.

சூனியக்காரர்களுக்கு சக்தி உள்ளது போல் மேலோட்டமாக தோன்றக் கூடிய வசனம் இருப்பது போல் அவ்லியாக்களுக்கு அற்புத சக்தி உள்ளது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றக் கூடிய பல ஆதாரங்கள் தர்கா வழிபாட்டுக்காரர்களிடமும் உள்ளது.

அதை அடிப்படையாகக் கொண்டு அவ்லியாக்களுக்கு அல்லாஹ் அற்புத சக்தியை வழங்கியுள்ளதற்கு ஆதாரம் இருப்பதால் தான் நாங்கள் நம்புகிறோம் என்று தர்கா வழிபாட்டுக்காரர்களும் கூறுகிறார்கள்.

அந்த ஆதாரங்கள் சூனியக்காரனுக்கு முட்டுக் கொடுக்க இவர்கள் காட்டும் ஆதாரத்தைவிட வலுவாகவும் உள்ளன.

உதாரணமாக,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.  அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6502)

அவ்லியாக்களுக்கு அதிகாரமும், அற்புத சக்தியும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள்.

அவ்லியாக்களின் கைகள் அல்லாஹ்வின் கைகள் என்றும் அவ்லியாக்களின் கால்கள் அல்லாஹ்வின் கால்கள் என்றும் இதில் சொல்லப்பட்டுள்ளதால் அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று தர்கா வழிபாட்டுக் கூட்டம் வாதிடுகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டும் ஆதாரத்தை விட இது வலிமையாக இருக்கிறது.

அவ்லியாக்களுக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ் தந்துள்ளான் என்று அல்லாஹ்வே கூறியதால் தான் நாங்கள் இவ்வாறு நம்புகிறோம் என்று கூறுகிறார்களே இதை சூனியக் கட்சியினர் ஏற்றுக் கொள்கிறார்களா?

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.

சூனியக்காரன் விஷயத்தில் மட்டும் ஒட்டு மொத்த குர்ஆனுக்கு மாற்றமாக கருத்து கொள்வது ஏன்?

ஆதமுக்கு சஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் பெரியார்கள் காலில் விழலாம் என்று தர்காவாதிகள் வாதிடுகின்றனர். தங்களின் இந்த வாதத்தை நியாயப்படுத்த 2:34, 17:61, 7:11, 18:50, 20:116 ஆகிய வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

மேலோட்டமாக இதை மட்டும் பார்க்கும் போது இது சரியாகத் தோன்றினாலும் இது ஒட்டு மொத்த குர்ஆன் போதனைக்கு மாற்றமாக உள்ளது என்பதால் அதற்கு முரணில்லாத வேறு விளக்கம் கொடுத்தோம். அது போல் தவ்ஹீத் வேடம் போட்டு சூனியத்தை ஆதரிக்கும் கூட்ட்த்தினரும் விளக்கம் கொடுத்தனர்.

சூனியக்காரன் விஷயத்தில் மட்டும் ஒட்டு மொத்த குர்ஆனின் கருத்தைக் கவனிக்காமல் ஒரு வசனத்துக்குப் பொருள் கொடுப்பது என்ன நியாயம்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறி பின்வரும் வசனங்களை சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுவார்கள்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்டதூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.

(அல்குர்ஆன்:),27

அவர் (முஹம்மது)  மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.

(அல்குர்ஆன்: 81:24)

மேலோட்டமாகப் பார்க்கும் போது அந்த அர்த்தத்துக்கு இடம் உள்ளது என்று இவர்கள் ஒப்புக் கொண்டார்களா? மறைவான ஞானம் யாருக்கும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களைக் கவனத்தில் கொண்டு இதற்கு மறு விளக்கம் கொடுத்தார்களா?

சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களை மறந்து விட்டு அதற்கும் முரணாக 2:102 வசனத்துக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதத்துக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.

(2:102 வசனத்தைப் பின்னர் நாம் விளக்கும் போது இதற்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.)

தர்காவிற்கு செல்பவர்கள் கூட இறந்தவரை நல்ல மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ் இவருக்கு அற்புத ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான் என்று சொல்கின்றனர். ஆனால் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்புபவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பவனுக்கு அல்லாஹ் இந்த ஆற்றலைக் கொடுத்துள்ளான் என்று சொல்கின்றனர். இது தர்காவாதிகளின் நம்பிக்கையை விட கேடுகெட்ட நம்பிக்கையாகும்.

எனவே இவர்கள் செய்யும் இந்த அர்த்தமற்ற வாதங்கள் சூனியத்தை நம்புதல் இணை வைத்தல் அல்ல என்று நிறுவுவதற்கு சிறிதும் உதவாது.