06) ஏர் கலப்பை பழிப்பிற்கு உரியதா?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்.

2321 حدثنا عبد الله بن يوسف، حدثنا عبد الله بن سالم الحمصي، حدثنا محمد بن زياد الألهاني، عن أبي أمامة الباهلي، قال: ورأى سكة وشيئا من آلة الحرث، فقال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لا يدخل هذا بيت قوم إلا أدخله الله الذل»، قال أبو عبد الله: «واسم أبي أمامة صدي بن عجلان

முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும், மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல் : (புகாரி: 2321)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏர் கலப்பை இருக்கும் வீட்டுக்கு இழிவு ஏற்படும் என்று சொன்னதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொதுவாக விவசாயம் தான் மனித வாழ்வின் உயிர் நாடி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். முஸ்லிம்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாட்டில் இந்தச் செய்தியை நம்பி ஏர் கலப்பையைத் தூக்கி எறிந்தால், அனைவரும் விவசாயத்தைக் கைவிட்டால் அந்த நாடு என்ன கதிக்கு ஆளாகும்?

உலக மக்களை அழித்து நாசமாக்கும் ஒரு வழிகாட்டுதலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா?

ஏற்றுமதியும் இறக்குமதியும் எளிதாகி விட்ட இந்தக் காலத்தில் கூட விவசாயத்தைப் புறக்கணித்து விட்டு எல்லா உணவுகளையும் இறக்குமதி செய்தால் அந்த நாடு அழிந்து விடும்.

ஏற்றுமதியும், இறக்குமதியும் சிரமமாக இருந்த காலத்தில் விவசாயத்தைக் கைவிட்டால் இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும். ஆன்மிகத் தலைவராக மட்டுமில்லாமல் நாட்டை ஆட்சி செய்த தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்துள்ள போது விவசாயத்திற்கு எதிராக இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்திருப்பார்களா?

திருக்குர்ஆன் விவசாயம் குறித்து அதிகமாகப் பேசுகிறது. உதாரணத்துக்கு கீழ்க்காணும் வசனங்களைக் காணுங்கள்!

2:22, 2:164, 6:99, 6:141, 7:57, 12:47, 13:4, 14:24, 14:32, 15:19, 16:11, 16:65, 18:32, 20:53,54, 22:5, 22:63, 23:20, 26:7, 27:60, 29:63, 30:24, 31:10, 32:27, 35:27, 36:36, 39:21, 41:39, 43:11, 45:5, 48:29, 50:7, 50:9, 56:64,78:14,15,16, 80:27-32

இவ்வசனங்களில் விவசாயத்தின் சிறப்பையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அது ஒரு பாக்கியம் என்பதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் வேதத்திற்கு விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வசனங்களுக்கு மாற்றமாக விவசாயக் கருவிகளைப் பழிப்பார்களா? என்று சிந்தித்தால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விவசாயத்தைச் சிறப்பித்து சொன்னதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. உதாரணமாகச் சில ஹதீஸ்களைக் காணுங்கள்.

2320 حدثنا قتيبة بن سعيد، حدثنا أبو عوانة، ح وحدثني عبد الرحمن بن المبارك، حدثنا أبو عوانة، عن قتادة، عن أنس بن مالك رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «ما من مسلم يغرس غرسا، أو يزرع زرعا، فيأكل منه طير أو إنسان أو بهيمة، إلا كان له به صدقة» وقال لنا مسلم: حدثنا أبان، حدثنا قتادة، حدثنا أنس، عن النبي صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 2320)

2325 حدثنا الحكم بن نافع، أخبرنا شعيب، حدثنا أبو الزناد، عن الأعرج، عن أبي هريرة رضي الله عنه، قال: قالت الأنصار للنبي صلى الله عليه وسلم: اقسم بيننا وبين إخواننا النخيل، قال: «لا» فقالوا: تكفونا المئونة، ونشرككم في الثمرة، قالوا: سمعنا وأطعنا

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம், எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள் என்றனர். அதற்கு அண்ணலார், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்குப் பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கின்றோம் என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் என்று கூறினார்கள்.

(புகாரி: 2325)

கலப்பையைப் பழிக்கும் ஹதீஸ் மனித குலத்தை அழித்தொழிக்க வழிகாட்டுவதாக இருப்பதாலும், ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இருப்பதாலும், நபிகள் நாயகத்தின் பல போதனைகளுக்கு இது முரணாக இருப்பதாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யாமல் ஒருவர் மேற்கண்ட ஹதீஸை நம்பினால் அல்லாஹ்வின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் முரண்பட்ட இரண்டை யாராலும் நம்ப முடியாது.