22) பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்
இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் மட்டும் ஏற்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளதால் அதை மறுக்க முடியாது.
ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.
இரவு பத்து மணிக்கு தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப்பிறையைப் பார்க்க முடியாது.
நண்பகலில் தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.
பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப்பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.
இது போல் தான் அமாவாசையில் பிறை பார்த்ததாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. அமாவாசையன்று எந்தக் கண்ணுக்கும் பிறை தென்படாது.
வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு சிறிய மேகத்துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது. நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.
ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்து கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாட்சியத்தை ஏற்றுள்ளார்களே என்று கேட்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முப்பதாம் இரவில் பிறை பார்த்ததாகக் கூறப்பட்ட சாட்சியத்தைத் தான் ஏற்றார்கள். 27, 28 இரவுகளில் பிறை பார்த்தோம் என்று கூறிய எந்த சாட்சியத்தையும் ஏற்றதாக எந்த ஆதாரமும் இல்லை.
எனவே நமது ஊரில் பிறை பார்த்த கணக்குப்படி முப்பதாம் இரவில் யாராவது பிறை பார்த்ததாக சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. சாட்சிகள் கூறி விட்டதால் இதை ஏற்கத் தான் செய்வோம் என்று யாரேனும் பிடிவாதம் பிடித்தால் எந்தப் பகுதியில் அந்த சாட்சிகள் பார்த்தார்களோ அந்தப் பகுதிக்கு மட்டும் அது பொருந்தும். எல்லாப் பகுதிக்கும் பொருந்தாது என்பதை ஏற்கனவே தக்க காரணங்களுடன் நிரூபித்துள்ளோம். சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி பதில் வடிவில் பதில் அளித்துள்ளோம்.