21) வானியல் கணிப்பு பொய்யா?

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி,எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாக கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாக கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்கு கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் வானியல் வளர்ச்சியடையாத காலத்துக்குத் தான் அவ்வாறு கூறினார்கள் என்று ஹதீஸுக்கு விளக்கம் கூறித் தான் இவர்கள் இதை நியாயப்படுத்தினார்கள். அந்த விளக்கம் சரியில்லை எனும் போது நிலையை மாற்றிக் கொள்வது தான் இறையச்சமுடையோரின் செயலாக இருக்கும்.

வானியல் கணிப்பின் படி முடிவு செய்யலாம் என்ற கருத்தை ஏற்கக் கூடியவர்களுக்கு மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வானியல் வாதம் புரிவோரின் கருத்துப்படி பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியம் அல்ல. பிறை பார்த்து நோன்பு நோற்பது குற்றம் என்று அவர்களால் கூற முடியாது. அதற்கு ஆதாரம் காட்டவும் முடியாது.

பிறையைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களின் பார்வையில் பிறை பார்க்காமல் கணித்து முடிவு செய்வது குற்றமாகும். ஏராளமான நபிமொழிகளுக்கு எதிரானதாகும்.

அதாவது இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல. ஆனால் பிறை பார்க்காமல் கணித்து நோன்பு நோற்பது ஒரு சாரார் பார்வையில் குற்றச் செயலாகும். மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம், இரு சாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ எவரது கருத்துப் படியும் எது குற்றமில்லையோ அதைத் தான் செய்வார். செய்ய வேண்டும்.
எனவே பிறை பார்த்து நோன்பு நோற்று நபி (ஸல்) அவர்களின் போதனையை உலகம் உள்ளளவும் கடைப்பிடித்தவர்களாவோம்.