09) கிராமமும் நகரமும்

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

வாகனக் கூட்டத்தினர் வந்து தாங்கள் பிறை பார்த்த செய்தியை அறிவித்த போது அதை ஏற்று உள்ளுர் மக்கள் நோன்பை விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை என்பதன் அடிப்படையிலும், குரைப் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலும் ஓர் ஊரில் காணப்பட்ட பிறை மற்றொரு ஊரின் நோன்பைத் தீர்மானிக்காது என்பதை அறிந்தோம்.

இந்தக் கருத்துக்கு எதிரானது போல் தோன்றக் கூடிய ஒரு ஹதீஸும் இருக்கிறது. அதை இப்போது ஆராய்வோம்.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்

நூல்: அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் முப்பதாம் நாள் சுப்ஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்

நூல்: தாரகுத்னீ

பிறை பார்த்த செய்தி இங்கேயும் மறு நாள் தான் கிடைக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் நோன்பு வைத்திருந்தனர். இரண்டு கிராமவாசிகள் வந்து அதிகாலையில் தகவல் கூறியவுடன் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அன்றே பெருநாள் தொழுகையும் நடத்தினார்கள்.

ஒரே மாதிரியான இரண்டு நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சியில் தகவல் தந்தவர்களுக்குக் கட்டளையிட்டதும் மற்றொரு நிகழ்ச்சியில் மக்கள் அனைவருக்கும் கட்டளையிட்டதும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போன்று தோன்றலாம். சிந்தித்துப் பார்த்தால் இவ்விரண்டுக்கும் முரண்பாடு இல்லை என்பது விளங்கும்.

இங்கே கிராம வாசிகள் (அஃராபிகள்) வந்து சாட்சி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. அஃராபிகள் என்றால் யார்?

ஒரு நகரத்தைச் சுற்றி வாழ்பவர்கள், எல்லா முக்கியத் தேவைகளுக்கும் அந்த நகரத்தையே சார்ந்திருப்பவர்கள் ஆகியோரே அஃராபிகளாவர். கிராமப்புறத்தார்கள் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இவர்கள் அதிகாலையிலேயே வந்து தகவல் கூறி விட்டதால் தொலைவிலிருந்து வரவில்லை. அருகிலிருந்து தான் வந்தனர் என்பது தெரிகிறது.

மதீனாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள அவாலி என்ற கிராமப் பகுதியிலிருந்தெல்லாம் மக்கள் ஜும்ஆவுக்காக மதீனாவுக்கு வருவார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிம்பர் தயாரிக்கப்பட்ட காபா எனும் கிராமமும் இந்த அவாலி பகுதியில் அடங்கியது தான்.

புறநகர் என்று சொல்லத் தக்க அளவுக்குப் பல கிராமங்கள் மதீனாவைச் சுற்றியிருந்தன. அங்கெல்லாம் அஃராபுகள் வசித்தனர்.

பயணக் கூட்டம் சம்பந்தமான ஹதீஸில் உள்ளது போல் இவர்கள் தொலைவிலிருந்து வரவில்லை.

* வாகனத்தில் வரவில்லை

* பகலின் கடைசி நேரத்திலும் வரவில்லை.

ஒரு வேளை மதீனாவில் ஜும்ஆ தொழும் இவர்கள் பெருநாள் தொழுவதற்காக மதீனா வந்திருக்கவும் அங்கே நோன்பு வைத்திருப்பதைக் கண்டதும் பிறை பார்த்த செய்தியைச் சொல்லி இருக்கவும் சாத்தியமுள்ளது.

இந்தச் சாத்தியத்தை ஏற்காவிட்டாலும் அஃராபுகள் என்போர் மதீனா நகரைச் சுற்றி வாழ்ந்த கிராமத்தார்கள் தான் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் அஃராபுகள் வாழ்ந்தாலும் மதீனாவுக்கு வந்தவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்தவர்களே.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இரண்டு நிகழ்ச்சிகளும் முரண்பட்டவையல்ல என்று பிரித்தறியலாம்.

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

முந்தைய நிகழ்ச்சி தூரத்தில் உள்ள வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி ஓர் ஊரை ஒட்டிய கிராமத்தார் பிறை பார்ப்பது அந்த ஊரையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.

ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பின்னர் விளக்கியுள்ளோம்.